11ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

style="text-align: center;">11ஆம் பத்து 6ஆம் திருமொழி

கலி நிலைத்துறை

2002

மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி

வானவரும் யாமுமெல்லாம்,

நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்

நெடுங்காலம் கிடந்ததோரீர்,

எந்நன்றி செய்தாரா ஏதிலோர்

தெய்வத்தை யேத்துகின்றீர்?

செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள்.

அண்டனையே ஏத்தீர்களே (2) 11.6.1

2003

நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின்

மீதோடி நிமிர்ந்தகாலம்,

மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட

மகப்படுத்த காலத்து, அன்று

எல்லாரும் அறியாரோ எம்பெருமான்

உண்டுமிழ்ந்த எச்சில்தேவர்,

அல்லாதார் தாமுளரே? அவனருளே

உலகாவ தறியீர்களே? 11.6.2

2004

நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழிவாய்

நான்முகனும் நீண்டநால்வாய்,

ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும்

உள்ளிட்ட அமரரோடும்,

வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல்

தான்விழுங்கி யுய்யக்கொண்ட,

கொற்றப்போ ராழியான் குணம்பரவாச்

சிறுதொண்டர் கொடியவாறே. 11.6.3

2005

பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம்

நெடுங்கடலே யானகாலம்,

இனிக்களைகண் இவர்க்கில்லை என்றுலகம்

ஏழினையும் ஊழில்வாங்கி

முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில்

வைத்தும்மை உய்யக்கொண்ட

கனிகளவத் திருவுருவத் தொருவனையே

கழல்தொழுமா கல்லீர்களே 11.6.4

2006

பாராரும் காணாமே பரவைமா

நெடுங்கடலே யானகாலம்,

ஆரானும் அவனுடைய திருவயிற்றில்

நெடுங்காலம் கிடந்தது,உள்ளத்

தோராத வுணர்விலீர். உணருதிரேல்

உலகளந்த வும்பர்கோமான்,

பேராளன் பேரான பேர்களா

யிரங்களுமே பேசீர்களே 11.6.5

2007

பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின்

மீதோடிப் பெருகுகாலம்,

தாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன்

வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்,

போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம்

கொண்டாடும் தொண்டீர், பெற்ற

தாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ

மாட்டாத தகவற்றீரே. 11.6.6

2008

மண்ணாடும் விண்ணாடும் வானவரும்

தானவரும் மற்றுமெல்லாம்

உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்

தான்விழுங்கி யுய்யக்கொண்ட,

கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்

கழல்சூடி, அவனையுள்ளத்

தெண்ணாத மானிடத்தை யெண்ணாத

போதெல்லா மினியவாறே 11.6.7

2009

மறம்கிளர்ந்து கருங்கடல்நீ ருரம்துரந்து

பரந்தேறி யண்டத்தப்பால்,

புறம்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம்

ஏழினையும் ஊழில்வாங்கி,

அறம்கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில்

வைத்தும்மை யுய்யக்கொண்ட,

நிறம்கிளர்ந்த கருஞ்சோதி நெடுந்தகையை

நினையாதார் நீசர்தாமே. 11.6.8

2010

அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த்

திரைததும்ப ஆவவென்று,

தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும்

தானருளி, உலகமேழும்

உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில்

வைத்தும்மை யுய்யக்கொண்ட,

கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை

நகர்ப்பாடி யாடீர்களே 11.6.9

2011

தேவரையும் அசுரரையும் திசைகளையும்

கடல்களையும் மற்றும் முற்றும்,

யாவரையு மொழியாமே யெம்பெருமான்

உண்டுமிழ்ந்த தறிந்துசொன்ன,

காவளரும் பொழில்மங்கைக் கலிகன்றி

ஒலிமாலை கற்று வல்லார்,

பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்

பொன்னுலகில் பொலிவர் தாமே (2) 11.6.10

Leave a Reply