style="text-align: center;">11ஆம் பத்து 8ஆம் திருமொழி
கலிவிருத்தம்
2022
மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள்
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம்,
ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்,
நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ. (2) 11.8.1
2023
சீற்றமுள வாகிலும் செப்புவன், மக்கள்
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றஞ்சி,
காற்றத் திடைப்பட்ட கலவர் மனம்போல,
ஆற்றத் துளங்கா நிற்பனா ழிவலவா. 11.8.2
2024
தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி,
பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல்,
தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா. 11.8.3
2025
உருவார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
திரிவாயென்று சிந்தித்தி யென்றதற் கஞ்சி,
இருபா டெரிகொள் ளியினுள் எறும்பேபோல்,
உருகாநிற்கு மென்னுள்ளம் ஊழி முதல்வா. 11.8.4
2026
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்,
தள்ளி புகப்பெய்தி கொல்லென் றதற்கஞ்சி,
வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே,
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா. 11.8.5
2027
படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா,
இடையன் எறிந்த மரமேயொத் திராமே,
அடைய அருளா யெனக்குன்ற னருளே 11.8.6
2028
வேம்பின்புழு வேம்பின்றி யுண்ணாது, அடியேன்
நான்பின்னு முன்சே வடியன்றி நயவேன்,
தேம்பலிளந் திங்கள் சிறைவிடுத்து, ஐவாய்ப்
பாம்பின் அணைப்பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ. (2) 11.8.7
2029
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா,
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு,
மணியே. மணிமா ணிக்கமே. மதுசூதா,
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ. (2) 11.8.8
2030
நந்தா நரகத் தழுந்தா வகை,நாளும்
எந்தாய். தொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய்,
சந்தோகா. தலைவனே. தாமரைக் கண்ணா,
அந்தோ. அடியேற் கருளாயுன் னருளே (2) 11.8.9
2031
குன்ற மெடுத்தா நிரைகாத் தவன்றன்னை,
மன்றில் புகழ்மங்கை மன்கலி கன்றிசொல்,
ஒன்று நின்றவொன் பதும்வல் லவர்த்தம்மேல்,
என்றும் வினையாயின சாரகில் லாவே (2) 11.8.10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்