4ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

style="text-align: center;">4ஆம் பத்து 10ஆம் திருமொழி

1338

ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்டொருகால் ஆலிலை வளர்ந்தவெம்பெருமான்,

பேய்ச்சியை முலயுண் டிணைமரு திறுத்துப் பெருநில மளந்தவன் கோயில்,

காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களி னடுவே,

வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.1)

 

 

1339

ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டரக்கர் தம் சிரங்களை யுருட்டி,

கார்நிறை மேகம் கலந்தோ ருருவக் கண்ணனார் கருதிய கோயில்,

பூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப் பொதும்பிடை வரிவண்டு மிண்டி,

தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.2)

 

1340

கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன்

படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன் கோயில்,

படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடகத் தொலிபோய்,

அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.3)

 

1341

கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன்,

பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்,

துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால்,

செறிமணி மாடக் கொடிகதி ரணவும் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.4)

 

1342

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து, ஒருகால்

தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில்,

ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென்றெண்ணி,

சீர்மலி பொய்கை சென்றணை கின்ற திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.5)

 

1343

காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை,

கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன்

கோயில்,

ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி,

சேற்றிடைக் கயல்க ளுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.6)

 

1344

ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு,

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்

அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப

வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே

(4.10.7)

 

1345

முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர் தம்பெரு மானை,அன் றரியாய்

மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்,

படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபன் மணிகளி னொளியால்,

விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே (4.10.8)

 

1346

குடிகுடி யாகக் கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த

அடியவர்க் கருளி யரவணைத் துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில்,

கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய,

வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யதுவே

(4.10.9)

 

1347

பண்fடுமுன் ஏன மாகியன் றொருகால், பாரிடந் தெயிற்றினில் கொண்டு,

தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை,

வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,

கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே (4.10.10)

Leave a Reply