4ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

4ஆம் பத்து 2ஆம் திருமொழி

1258

கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன்

கதிர்முடி யவைபத்தும்

அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு

அளித்தவ னுறைகோயில்

செம்ப லாநிரை செண்பகம் மாதவி

சூதகம் வாழைகள்சூழ்

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்

வண்புரு டோ த்தமமே (4.2.1)

 

1259

பல்ல வந்fதிகழ் பூங்கடம் பேறியக்

காளியன் பணவரங்கில்,

ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த

உம்பர்க்கோ னுறைகோயில்,

நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை

வேள்வியோ டாறங்கம்,

வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர்

வண்புரு டோ த்தமமே (4.2.2)

 

1260

அண்ட ரானவர் வானவர் கோனுக்கென்

றமைத்தசோ றதுவெல்லாம்

உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன்

உகந்தினி துறைகோயில்,

கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில்

குலமயில் நடமாட,

வண்டு தானிசை பாடிடு நாங்கூர்

வண்புரு டோ த்தமமே (4.2.3)

 

1261

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன்

பாகனைச் சாடிப்புக்கு,

ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை

உதைத்தவ னுறைகோயில்,

கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு

கழனியில் மலிவாவி

மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர்

வண்புரு டோ த்தமமே (4.2.4)

 

1262

சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன்

படையொடுங் கிளையோடும்

ஓட வாணனை யாயிரந் தோள்களும்

துணித்தவ னுறைகோயில்,

ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப்

பகலவ னொளிமறைக்கும்

மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்

வண்புரு டோ த்தமமே (4.2.5)

 

1263

அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன்

அலர்கொடு தொழுதேத்த,

கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய

கண்ணன்வந் துறைகோயில்,

கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள்

காட்டமா பதுமங்கள்,

மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர்

வண்புரு டோ த்தமமே (4.2.6)

 

1264

உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன

துரம்பிளந் துதிரத்தை

அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய

அப்பன்வந் துறைகோயில்,

இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ

டெழில்கொள்பந் தடிப்போர்,கை

வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்

வண்புரு டோ த்தமமே (4.2.7)

 

1265

வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன்

சாபமற் றதுநீங்க

மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம்

முகில்வண்ண னுறைகோயில்

பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன்

பழம்விழ வெருவிப்போய்

வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர்

வண்புரு டோ த்தமமே (4.2.8)

 

1266

இந்து வார்சடை யீசனைப் பயந்தநான்

முகனைத்தன் னெழிலாரும்

உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன்

உகந்தினி துறைகோயில்,

குந்தி வாழையின் கொழுங்கனி _கர்ந்துதன்

குருளையைத் தழுவிப்போய்,

மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர்

வண்புரு டோ த்தமமே (4.2.9)

 

1267

மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர்

வண்புரு டோ த்தமத்துள்,

அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன்

ஆலிமன் அருள்மாரி,

பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப்

பத்தும்வல் லார்,உலகில்

எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ

ரோடும் கூடுவரே (4.2.10)

Leave a Reply