4ஆம் பத்து 3ஆம் திருமொழி
1268
பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும்
பேரரு ளாளனெம் பிரானை,
வாரணி முலையாள் மலர்மக ளோடு
மண்மக ளுமுடன் நிற்ப,
சீரணி மாட நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காரணி மேகம் நின்றதொப் பானைக்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.1)
1269
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப்
பேதியா வின்பவெள் ளத்தை,
இறப்பெதிர் காலக் கழிவுமா னானை
ஏழிசை யின்சுவை தன்னை,
சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக்
கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.2)
1270
திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும்
செழுநிலத் துயிர்களும் மற்றும்,
படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை,
பங்கயத் தயனவ னனைய,
திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.3)
1271
வசையறு குறளாய் மாவலி வேள்வி
மண்ணள விட்டவன் றன்னை,
அசைவறு மமர ரடியிணை வணங்க
அலைகடல் துயின்றவம் மானை,
திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
உயர்மணி மகுடம் சூடிநின் றானைக்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.4)
1272
தீமனத் தரக்கர் திறலழித் தவனே.
என்றுசென் றடைந்தவர் தமக்கு,
தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும்
தயரதன் மதலையைச் சயமே,
தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (4.3.5)
1273
மல்லைமா முந்நீ ரதர்பட மலையால்
அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,
கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை
கலங்கவோர் வாளிதொட் டானை,
செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அல்லிமா மலராள் தன்னொடு மடியேன்
கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே (4.3.6)
1274
வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும்
வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,
கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக்
கருமுகில் திருநிறத் தவனை,
செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக்
கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே (4.3.7)
1275
அன்றிய வாண னாயிரம் தோளும்
துணியவன் றாழிதொட் டானை,
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல்
மேவிய வேதநல் விளக்கை,
தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.8)
1276
களங்கனி வண்ணா. கண்ணணே. என்றன்
கார்முகி லே என நினைந்திட்டு,
உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள்
உள்ளத்து ளூறிய தேனை,
தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே (4.3.9)
1277
தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்
மங்கையார் வாட்கலி கன்றி,
ஊனமில் பாட லொன்பதோ டொன்றும்
ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,
மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு
வானவ ராகுவர் மகிழ்ந்தே (4.3.10)