style="text-align: center;">1ஆம் பத்து 6ஆம் திருமொழி
வாரணமாயிரம்
நாச்சியார் திருமொழியின் இந்த ஆறாம் பதிகம் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. வாரணமாயிரம் என்று தொடங்கும் இந்தப் பதிகத்தில், கனவிலே கண்ணபிரானை மணந்துகொண்ட அனுபவத்தை தோழிக்குச் சொல்கிறாள் ஆண்டாள்.
ஐந்தாம் திருமொழியில், கண்ணனை வரச் சொல்லிக் கூவுமாறு குயிலைக் கேட்டுக்கொண்டாள் ஆண்டாள். குயிலும் கூவியது. ஆயினும் கண்ணன் வரவில்லை. எனவே வருத்தம் மிகக் கொண்டாள் கோதை. அதனால் இவளை உயிர் தரித்திருக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணிய கண்ணன், இவள் விரும்பியபடியே எந்தக் குறையும் இல்லாதபடி கனவிலே வந்து பாணிக்கிரகணம் வரை செய்துகொண்டான்.
வாரணம் ஆயிரம் என்று தொடங்கும் திருக்கல்யாண வைபவம்தான் இந்தப் பதிகத்தில் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்படுகிறது. வாரணமாயிரம் என்றால் ஆயிரம் யானைகள். கண்ணனுக்கு எப்படி ஆயிரம் யானைகள் என்பது பொருத்தமாக இருக்கும்? கண்ணனிடம் மாடுகள்தானே இருக்கும்? அவன் பிறந்தது க்ஷத்ரிய குலம் என்றாலும், வளர்ந்தது வைசிய குலத்தில்தானே! அவ்வகையில் கண்ணன் பிறந்த குலத்தில் இருந்து அவருக்கு ஆயிரம் யானைகள். வளர்ந்த குலத்தில் இருந்து கறவை இனங்கள். அப்படி இருந்தாலும், எதற்காக ஆயிரம் யானைகள் உடன் வரவேண்டும்?
வருபவன் கண்ணன் ஒருவனாக இருந்தாலும், அவனுடைய தோழர்கள் ஆயிரம் பேர் உடன் வருகிறார்கள். ஒவ்வொருவரையும் ஒரு யானை மேல் ஏற்றி அழைத்து வருகிறார் கண்ணபிரான். பொதுவாக கல்யாண மாப்பிள்ளை மட்டும்தானே சிறப்பு வாகனத்தில் வருவார்..! ஆனால், இங்கே கண்ணனின் தோழர்களும் சிறப்பு வாகனத்தில் சமமாக வருகிறார்கள். காரணம் – பகவானுக்கு இருக்கிற குணம்..! அவனிடம் சரணம் என்று சொல்லியவர்களை தனக்குச் சமமாக உயர்த்தி அமர வைத்து அழகுபார்ப்பது அவன் குணமாயிற்றே?!
பெரியவாச்சான்பிள்ளை இதன் உட்கருத்தாக சாம்யாபத்தி மோட்சத்தைக் கூறுகிறார். பகவானிடம் ஒருவன் சரணம் என்று சொல்லி, அவன் மோக்ஷம் அடையும் போது, பகவானுடைய எட்டு கல்யாண குணங்களை அடைந்து சாம்யாபத்தி மோக்ஷம் அடைகிறான். அந்த எட்டு கல்யாண குணங்கள் எவை என்றால்…
[அபகதபாப்மா விஜரஹா விமுர்த்திஹு விசோகஹா விஜகிக்ஸஹா அபிபாஸஹா சத்யகாமஹா சத்யசங்கல்பஹா]
அபகதபாப்மா – பாபம் தீண்டாத தன்மை; விஜரஹா – மூப்பு கிடையாது; விமுர்த்திஹு – மரணம் கிடையாது; விசோகஹா – சோகமே கிடையாது; விஜகிக்ஸஹா – பசி கிடையாது; அபிபாஸஹா – தாகம் கிடையாது; சத்யகாமஹா – ஆசைப்படக்கூடிய குணங்கள் படைத்தவர்; சத்யசங்கல்பஹா – எடுத்த செயல் அத்தனையும் முடிக்கிற தன்மை.
இப்படி எட்டு கல்யாண குணங்களை பகவானைச் சரணடைந்தவன் பெறுகிறான் என்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.
556:
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1
கல்யாண குணங்கள் நிறைந்த ஸ்ரீமந்நாராயணன், ஆயிரம் யானைகள் புடைசூழ, ஊர்வலமாக வருவதால், எதிரே பொன் மயமான பூரண கும்பங்கள் வைத்து, நகர் முழுவதும் தோரணங்கள் நாட்டியிருப்பதாக நான் கனவு கண்டேன் தோழியே!
557:
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2
நாளைக்குத் திருமண முகூர்த்தம் என்று நிச்சயித்து, கமுகம் பாளை முதலியவைகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில், சிங்கம் போன்ற நடையுடன், திருமகள் கேள்வனாகிய கோவிந்தன் என்னும் ஓர் காளை புகுவதை நான் கனவினில் கண்டேன் தோழி!
558:
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கூட்டம் இங்கே வந்து, என்னை திருமணப் பெண்ணாக நிச்சயம் பேச, பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் கலந்து பேசி, பின் தனித் தனியே சென்று பேசி முடிவு செய்து, வேத மந்திரங்கள் ஓதித் தூய்மையாக்கிய கூறைப் புடவையைக் கொடுத்து என்னை உடுத்தச் செய்து, துர்க்கையான நாத்தனார் மணம் மிகுந்த மாலையை எனக்குச் சூட்டுவதாக கனவு கண்டேன் தோழி!
559:
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
வைதிகச் சடங்குகளில் வல்ல நல்ல அந்தணர்கள் பலரும் நான்கு திசைகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து தெளித்து, உயர்ந்த குரலில் மணமக்களுக்கு மங்களாசாசனம் செய்ய, பூக்களைச் சூடிய புனிதனான அந்தக் கண்ணனுடன் என்னைச் சேர்த்து வைத்து, கங்கணக் காப்பு கட்டுவதாக கனவு கண்டேன் தோழி!
560:
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
பருவத்தாலும் வடிவத்தாலும் அழகு மிகுந்த இளம்பெண்கள், சூரிய ஒளி போன்ற மங்கள விளக்கையும் பொற்கலசங்களையும் தங்கள் கைகளில் தாங்கியவர்களாக எதிர் கொண்டு அழைக்க, மதுரை மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்தவராக பூமி அதிர கம்பீரமாக நடந்து வந்து, உள்ளே புகுவதைக் கனவினில் கண்டேன் தோழி!
561:
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6
மத்தள மேளங்கள் கொட்ட, வரியுடைய சங்குகளை ஊத, மைத்துனன் முறையுள்ள நம்பியான அந்த மதுசூதனன், முத்து மாலைகள் கட்டித் தொங்க விடப்பட்ட அழகிய பந்தலின் கீழே வந்து நின்று, என் கைத் தலத்தைப் பற்றி அருள்வதாகக் கனவு கண்டேன் தோழி!
562:
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7
வேத உச்சரிப்பில் வல்லவர்களான வேதியர்கள் சிறந்த வேதத் தொடர்களை ஓத, அந்தந்தச் சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே, பசுமையான தர்ப்பைகளையும், ஸமித்துகளையும் பரத்தி வைத்து வேள்வி செய்து, சினம் கொண்ட மத யானை போன்ற கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருவதை, கனவினில் கண்டேன் தோழி!
563:
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8
இந்தப் பிறவிக்கும், மேல் வரும் எல்லாப் பிறவிகளுக்கும் அடைக்கலமான பற்றுக்கோடாக, நமக்கு நாயகத் தலைவனாக உள்ள நம்பியான நாராயணன், தன் செவ்விய திருக்கையால் எனது கால்களைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்து வைப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!
564:
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9
வில்லினை ஒத்த புருவமும், ஒளி பொருந்திய முகமும் கொண்ட என் தமையன்மார்கள் வந்து, ஹோம குண்டத்தில் நெருப்பை இட்டு வளர்த்து, என்னை அதன் முன்னே நிறுத்தி, அச்சுதனான அந்தக் கண்ணன் கைமேல் என் கையை வைத்து, பொரிகளை அள்ளி அக்னியில் சேர்ப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!
565:
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10
ஹோமப் புகையின் முன்னே நெடுநேரம் நின்றிருந்ததால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணித்து குளிரூட்டும் வகையில் குளிர்ந்த குங்குமக் குழம்பை உடலில் பூசி, சந்தனத்தை நிறையத் தடவி விட்டனர். பின் அங்கிருந்த ஒரு யானையின் மீது நான் கண்ணனுடன் கூடி அமர, அலங்காரம் மிகுந்த தெருக்களிலே திருமண ஊர்வலம் வந்து, நிறைவாக வாசனை நீரில் மஞ்சன நீராட்டுவதைக் கனவினில் கண்டேன் தோழி!
566:
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11
வேயர் குலத்தில் புகழ் மிக்க திருவில்லிபுத்தூர் தலைவரான பெரியாழ்வாரின் மகள் கோதை, தான் கண்ணனைத் திருமணம் செய்து கொண்டதாகக் கண்ட கனவை, தூய தமிழ் மாலையாக அருளினாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயில வல்லவர்கள், நல்ல குணங்களுடைய குழந்தைகளைப் பெறுவர். கன்னியர் கண்ணனைப் போன்ற கணவனைப் பெற்று மகிழ்வர்.