5. மன்னுபெரும்புகழ்

ஆண்டாள்

 

style="text-align: center;">1ஆம் பத்து 5ஆம் திருமொழி

மன்னு பெரும்புகழ்

கூடல் என்பதோ உயிர் அற்றது. எனவே, அது எந்த மறுமொழியும் கூறாது இருந்தது. அதனால் உயிருள்ள எதையேனும் ஒன்றையே கண்ணன் வருவதற்காகக் கூவச் செய்ய வேண்டும் என்று எண்ணினாள் ஆண்டாள், அப்போது அவளுக்கு குயிலின் நினைவு வந்தது. எனவே அவள் குயிலைப் பார்த்து, ஓசோலைப் பொந்துகளில் வாசம் செய்யும் குயிலே, திருமாமகள் கேள்வனை விரும்பியதால், என் கைவளைகள் கழன்றுபோகும்படி உடல் தளர்ந்து மெலிந்து தாபத்தால் உருகுகிறேன். இது தகுமோ? எனவே எம்பெருமான் வரும்படி அவன் திருப்பெயர்கள் பல சொல்லிக் கூவ வேண்டும்  என்று பிரார்த்திக்கிறாள் மன்னுபெரும் புகழ் மாதவன் எனத்தொடங்கும் இந்த ஐந்தாம் திருமொழியில்.

இப்படி, இந்த ஐந்தாம் பதிகம் – குயில் பாட்டாக அமைந்திருக்கிறது. இதில் மென்னடை அன்னம் என்று பெரியாழ்வாரையே குறிக்கிறாள் ஆண்டாள். இங்கே நடை என்பது நடத்தை, ஆச்சாரம் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

 

545:

மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி

வண்ணன் மணிமுடி மைந்தன்

தன்னை, உகந்தது காரண மாகஎன்

சங்கிழக் கும்வழக் குண்டே,

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்

பொதும்பினில் வாழும் குயிலே,

பன்னியெப் போது மிருந்து விரைந்தென்

பவளவா யன்வரக் கூவாய். (2) 1

 

மணிகள் பதித்த திருமுடி சூடியவனாக, நீல நிறத்துடன் நித்திய கல்யாண குணங்களால் புகழ்பெற்ற திருமகள் கேள்வனை ஆசைப்பட்டது காரணமாக என் கைவளையல்கள் கழன்று போகக் காரணம் உண்டோ ? என் செய்வேன்? புன்னை, குருக்கத்தி, கோங்கு, செருந்தி ஆகிய மரங்கள் நிறைந்த சோலைப் பொந்துகளில் வாழும் குயிலே! பவளம் போன்ற வாயினை உடைய என் நாயகன் வருமாறு எப்போதும் நீ அவன் திருப்பெயர்களைச் சொல்லி, அவன் விரைவில் வரக் கூவுவாயாக!

 

546:

வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட

விமல னெனக்குருக் காட்டான்,

உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்

உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்,

கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்

களித்திசை பாடுங் குயிலே,

மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்

வேங்கட வன்வரக் கூவாய். 2

 

பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதற்காக அழைக்கும் வெண்மையான சங்கினைத் தன் இடதுகையில் ஏந்திய, குற்றம் சிறிதுமிலாத தூயவனான அந்தத் திருமால், தன் உருவத்தை எனக்குக் காட்டவில்லை. ஆனால், அவன் என் இதயத்தின் உள்ளே புகுந்து என்னைத் தளரச் செய்து, நாள்தோறும் என் உயிரை உருக்கி என்னைத் தத்தளிக்கச் செய்து வேடிக்கை பார்க்கின்றான். தேன் துளிர்க்கும் செண்பகப் பூவைக் கோதி, மகிழ்ச்சியுடன் இசை பாடும் குயிலே! நீ, என் அருகே இருந்து, மழலைச் சொல்லால் துன்புறுத்தாது, அந்தத் திருவேங்கடவன் வரும்படியாக கூவுவாய்!

 

547:

மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்

இராவணன் மேல்,சர மாரி

தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த

தலைவன் வரவெங்குங் காணேன்,

போதலர் காவில் புதுமணம் நாறப்

பொறிவண்டின் காமரங் கேட்டு,உன்

காதலி யோடுடன் வாழ்குயி லே.என்

கருமாணிக் கம்வரக் கூவாய். 3

 

மாதலியானவன் ஒரு கோலினைக் கையில் கொண்டு தேர் ஓட்ட, மாயாவியான இராவணன் மீது அம்பு மழை தொடுத்து அவன் நடுத் தலையை அற்று வீழும்படிச் செய்த தலைவனான எம்பெருமானின் வரவினை எந்தத் திசையிலும் காணேனே! பூக்கள் மலர்கின்ற சோலையில் புதிய வாசனை பரவவும் வரிவண்டுகள் காமரம் என்னும் பண்ணினைப் பாடக் கேட்டு, உன் பேடையோடு வாழும் குயிலே! நீ, என் கருமாணிக்கம் வரும்படியாகக் கூவ வேண்டும்.

 

548:

என்புரு கியின வேல்நெடுங் கண்கள்

இமைபொருந் தாபல நாளும்,

துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்

தோணி பெறாதுழல் கின்றேன்,

அன்புடை யாரைப் பிரிவுறு நோயது

நீயு மறிதி குயிலே,

பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்

புண்ணிய னைவரக் கூவாய். 4

 

பிரிவுத் துயரால் எலும்பு உருகியது; வேல் கூட்டம் போன்ற நீண்ட என் கண்களோ, தூக்கம் இல்லாமல் இமை மூடவே இல்லை. பல நாள்களாய் துன்பமாகிய கடலுள் அழுந்திய நான், வைகுண்டநாதனாகிய தோணியை அடையப் பெறாமல், பிரிவுக் கடலில் தடுமாறுகிறேன். காதல் உடையவர்கள், பிரிவால் அடையும் துன்பத்தை நீ அறிய மாட்டாயா குயிலே! அழகான திருமேனி உடைய என் நாயகனான, கருடக் கொடி கொண்ட புண்ணிய மூர்த்தியை இங்கே வரும்படியாக நீ கூவ வேண்டும்.

 

549:

மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்

வில்லிபுத் தூருறை வான்றன்,

பொன்னடி காண்பதோ ராசயி னாலென்

பொருகயற் கண்ணிணை துஞ்சா,

இன்னடி சிலோடு பாலமு தூட்டி

எடுத்தவென் கோலக் கிளியை,

உன்னொடு தோழமை கொள்வன் குயிலே.

உலகளந் தான்வரக் கூவாய். (2) 5

 

மென்னடை போடும் அன்னங்கள் ஓடி விளையாடும் திருவில்லிபுத்தூரில் எழுந்தருளி உள்ளவனின் அழகிய திருவடிகளைக் காணும் ஆசையினால், கயல் மீன்களைப் போன்ற என் கண்கள் கொஞ்சமும் உறங்கவே இல்லை. குயிலே! மூவுலகையும் தன் மூவடியால் அளந்த அந்தத் திரிவிக்ரமன் இங்கே வரும்படியாக நீ கூவுவாயாக! நீ அப்படிக் கூவினால், இன்சுவை கொண்ட சோற்றோடு, பால் விட்டு ஊட்டி வளர்த்த என் அழகிய கிளியை உன்னுடன் நட்பு கொள்ளச் செய்வேன்.

 

550:

எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்

இருடீகே சன்வலி செய்ய,

முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்

முலையு மழகழிந் தேன்நான்,

கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை

கொள்ளு மிளங்குயி லே,என்

தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்

தலையல்லால் கைம்மாறி லேனே. 6

 

அகங்காரம் தொலைந்த தேவர்கள் எத்திசையும் வணங்கித் துதிக்கும் பெருமையினை உடைய இருடீகேசனான பகவான், தன்னை எனக்குக் காட்டாமல் துன்பம் செய்கின்றான். அதனால், நான் முத்துப் போன்ற பற்களும் சிவந்த உதடுகளும் முலைகளும் அழகு இழக்கும்படி, மாறுபட்டேன். பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்கின்ற சோலையில், அழகிய இடத்தே உறக்கம் கொள்கின்ற குயிலே! தான் உளன் என்றால், என்னையும் உள்ளவளாகச் செய்கின்ற என் தத்துவனை, மூல காரணனை இங்கே வரும்படியாகக் கூவுவாய் என்றால், என் ஆயுள் உள்ளளவும் என் தலையால் உன்னை வணங்கும் கைம்மாறு உடையவள் ஆவேன்.

 

551:

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்

புணர்வதோ ராசயி னால்,என்

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்

தாவியை யாகுலஞ் செய்யும்,

அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு

ஆழியும் சங்குமொண் தண்டும்,

தங்கிய கையவ னைவரக் கூவில்நீ,

சாலத் தருமம் பெறுதி. 7

 

அலை பொங்கித் ததும்பும் அழகிய பாற்கடலில் பள்ளி கொண்டவனைச் சேரும் ஆசையினால், என் மார்புகள் பருத்துக் களித்து, உயிரை உருக்கித் துன்புறுத்துகின்றன. வெய்யில் படாமல் நிழலில் மறைந்திருப்பதால்… அழகிய குயிலே உனக்கு என்ன பயன்? சங்கு, சக்கரம், கதை தாங்கிய கைகளை உடைய பகவானை இங்கே வரும்படியாக குயிலே நீ கூவினால், மிகவும் தர்மம் செய்ததாக ஆவாய்.

 

552:

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்

சதுரன் பொருத்த முடையன்,

நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்

நானு மவனு மறிதும்,

தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்

சிறுகுயி லே,திரு மாலை

ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்

அவனைநான் செய்வன காணே. 8

 

சார்ங்கம் என்னும் வில்லினை வளைத்து இழுக்கும் வலிய கைகளை உடைய திருமால் வீரத்தில் காட்டும் சாமர்த்தியத்தைப் போலவே, காதல் ஊடலிலும் திறமை உள்ளவன். இனிய பழங்கள் உள்ள மாந்தோப்பில் சிவந்த தளிர்களைக் கோதும் சிறிய குயிலே! பிரிந்தால் உயிர் தரித்திருக்க மாட்டோ ம் என்று எங்களுக்குள் நாங்கள் செய்துகொண்ட ரகசிய வாக்குறுதியினை அவன் மட்டுமே அறிவான்; மற்றவர்கள் அறியமாட்டார்கள். ஆகவே, அவனை சீக்கிரம் வருமாறு விரைந்து நீ கூவுவாய் ஆகில், அவன் இங்கே வந்தபிறகு நான் படுத்தும் பாட்டைக் காண்பாய்.

 

553:

பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்

பாசத் தகப்பட்டி ருந்தேன்,

பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி

லே.குறிக் கொண்டிது நீகேள்,

சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்

பொன்வளை கொண்டு தருதல்,

இங்குள்ள காவினில் வாழக் கருதில்

இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9

 

பசுங்கிளி நிறம் உடைய ஸ்ரீதரன் என்னும் பாச வலையில் நான் சிக்கிக் கிடக்கின்றேன். ஒளி பொங்கும் வண்டுகள் ஒலித்து இசைபாடும் அழகிய சோலையில் வாழும் குயிலே! நான் கூறுவதை கவனமாகக் கேள். இந்தச் சோலையில் இனியும் நீ வாழவேண்டும் என்று எண்ணினால், சங்கு சக்கரம் ஏந்திய பெருமானை இங்கே வரும்படியாக நீ கூவ வேண்டும். பிரிவாற்றாமையால் உடல் மெலிந்து, அதனால் என் கைகளில் இருந்து பொன்வளைகள் கழன்றன. அவன் வருகைக்கு நீ கூவி, அதன் மூலம் என் உடல் பூரித்து, அந்த வளைகள் என் கைகளிலேயே தங்கும்படியாக நீ செய்ய வேண்டும். அல்லது அவன் உகந்த ஆபரணங்களைக் கொண்டுவந்தாவது என்னிடம் நீ கொடுக்க வேண்டும். இவை இரண்டில் ஒன்றையாவது நீ கட்டாயம் செய்ய வேண்டும்.

 

554:

அன்றுல கம்மளந் தானை யுகந்தடி-

மைக்கண வன்வலி செய்ய,

தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை

நலியும் முறைமை யறியேன்,

என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்

தகர்த்தாதே நீயும் குயிலே,

இன்றுநா ராயண னைவரக் கூவாயேல்

இங்குத்தை நின்றும் துரப்பன். 10

 

தன்னை கொஞ்சமும் விரும்பியிராத, செருக்கு மிகுந்திருந்த மகாபலிச் சக்ரவர்த்தியின் தலையிலேயே தன் திருவடிகளை வைத்து, அவனை அடிமையாக்கி இந்த உலகத்தையும் அளந்தான் அந்தத் திருமால். அவனைப் பெற்றால் அன்றி, உயிர் வாழ முடியாத பாக்கியத்தை அன்றோ இந்தத் திருமாலின் விஷயத்தில் நான் ஆசைப்பட்டேன். ஆனால், அவனோ வஞ்சனை செய்து விட்டான். தென்றலும் சந்திரனும் என்னைப் பிளந்து துன்புறுத்தும் நியாயத்தை நான் அறியேன். ஓ குயிலே! நீ என்றும் இந்தச் சோலையில் இருந்துகொண்டு, இடைவிடாமல் என்னைத் துன்புறுத்தாதே. ஸ்ரீமந் நாராயணன் இங்கே வரும்படியாக இன்று நீ கூவாவிட்டால், இங்கிருந்து உன்னைத் துரத்தி விடுவேன்.

 

555:

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை

வேற்கண் மடந்தை விரும்பி,

கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு

கருங்குயிலே என்ற மாற்றம்,

பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்

பட்டர்பி ரான்கோதை சொன்ன,

நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ-

நாராய ணாயவென் பாரே. (2) 11

 

வானில் தன் திருவடியை நீட்டி, உலகம் அளந்த உத்தமனை விரும்பி, வேல் போன்ற கண்ணழகும், பெண்மையும் நிரம்பிய ஆண்டாள், கருங்குயிலே, என் கடல்வண்ணனை வரும்படியாக நீ கூவு என்று பாடினாள். இசையுடன் நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர் வாழ்கின்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்பிரானின் மகளான கோதை அருளிய இந்த வாசகங்களை ஓதுபவர்கள், நமோ நாராயணாய என்று பகவானின் கைங்கரியத்திலே திளைத்திருப்பர்.

 

Leave a Reply