10. கார்க்கோடல் பூக்காள்

ஆண்டாள்

 

style="text-align: center;">1ஆம் பத்து 10ஆம் திருமொழி

கார்க்கோடல் பூக்காள் .

பத்தாவது பதிகம், ராமசந்திரனுடைய சொல்ஒ, கண்ணனுடைய வார்த்தைஒ, வராகருடைய பேச்சுஒ…அதாவது, ராம சரம ஸ்லோகம், கண்ணனின் சரம ஸ்லோகம், வராக சரம ஸ்லோகம் இவற்றைக் குறித்து பாடியவை.

வாடிய மாலைகள் போல் வாட்டமுற்று, மன வருத்தம் மிகக் கொண்டவளாக இருந்த ஆண்டாள், உயிர்தரித்திருக்க வேறு வழி உண்டோ ? என ஆராய்ந்தாள். அப்போது அவள் நினைவுக்கு வந்தார் பெரியாழ்வார். பெரியாழ்வார் பெண்பிள்ளையாகத் தான் பிறந்ததை எண்ணிப் பார்த்தாள். ஆழ்வார் அழைத்தவுடனே கூடல் நகரில் அன்று கருடாரூடனாகக் காட்சி தந்த அழகனின் செயலையும் மனத்தில் கொண்டாள். மற்றவை எல்லாம் தப்பினாலும் பெரியாழ்வாரோடு நமக்கு உண்டான உறவு தப்பாது. அவனுக்கான சுதந்திரத்தையும் மாற்றி, நம்மை அவன் திருவடிகளில் சேர்த்துவிடும்தன்மை பெரியாழ்வாரின் பக்திக்கு உண்டு. எனவே அவரையே நாம் ஆசார்யராக அடைவோம் என்று உறுதி பூண்டாள். இதை இந்தப் பத்தாம் திருமொழியான கார்கோடற் பூக்காள் பாசுரங்களில் தெரிவிக்கிறாள் ஆண்டாள்.

 

597:

கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல்

வண்ணனென் மேல்உம்மைப்

போர்க்கோலம் செய்து போர

விடுத்தவ னெங்குற்றான்,

ஆர்க்கோ இனிநாம் பூச

லிடுவது, அணிதுழாய்த்

தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப்

படைக்கவல் லேனந்தோ. (2) 1

 

கருமையான காந்தள் மலர்களே! என்னுடன் போர் செய்ய உங்களை அனுப்பிய கறுத்த கடல் வண்ணனான திருமால் எங்கே இருக்கிறான்? உங்களால் துன்பம் அடையும் நான் இனி யாரிடம் சென்று முறையிடுவது? அவனுடைய திருத்துழாய் மாலைக்கு ஆசைப்பட்ட நெஞ்சத்தை உடையவளாக இருந்தேன்… அந்தோ!

 

598:

மேற்றோன்றிப் பூக்காள் மேலுல

கங்களின் மீதுபோய்,

மேற்றோன்றும் சோதி வேத

முதல்வர் வலங்கையில்,

மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்

போலச் சுடாது,எம்மை

மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து

வைத்துகொள் கிற்றிரே. 2

 

மேலே உயரத்தில் பூத்திருக்கின்ற காந்தள் பூக்களே! மேல் உலகங்களையும் கடந்து, சுயம் ஜோதியாக பரமபதத்தில் எழுந்தருளி உள்ள வேத முதல்வனின் வலது கைச் சக்கரத்தில் ஒளியைப் போல் சுட்டெரிக்காமல், என்னை ஆத்மானுபவத்தை மட்டுமே விரும்புகின்ற மாற்றார்கள் கூட்டத்தில் சேர்ப்பீர்களோ?

 

599:

கோவை மணாட்டி. நீயுன்

கொழுங்கனி கொண்டு,எம்மை

ஆவி தொலைவியேல் வாயழ-

கர்தம்மை யஞ்சுதும்

பாவி யேன்தோன்றிப் பாம்பணை-

யார்க்கும்தம் பாம்புபோல்,

நாவு மிரண்டுள வாய்த்து

நாணிலி யேனுக்கே. 3

 

மணவாட்டி போன்ற கோவைக் கொடியே! உன் கனிந்த பழம் திருமாலின் பவளச் செவ்வாயினை எனக்கு நினைவுபடுத்தி, என் உயிரைத் தொலைக்கிறது. கூடல் காலத்தில் அழகரின் திருவாய்ச் சேர்த்தியின் இனிமையால் என் கண்ணை மூடும்படி அச்சுறுத்தும்; பிரிவிலே விரகத்தாலே என்னை பயமுறுத்தும். வெட்கம் இல்லாத பாவியேனுக்கு ஆதிசேஷனின் பிளவுபட்ட நாக்கைப் போல இரண்டு சொற்கள் பிறக்கும் படி ஆனதே!

 

600:

முல்லைப் பிராட்டி.நீயுன்

முறுவல்கள் கொண்டு,எம்மை

அல்லல் விளைவியே லாழிநங்

காய்.உன்ன டைக்கலம்,

கொல்லை யரக்கியை மூக்கரிந்

திட்ட குமரனார்

சொல்லும் பொய்யானால், நானும்

பிறந்தமை பொய்யன்றே. 4

 

கம்பீர நங்கையான முல்லைப் பிராட்டியே! புன்சிரிப்பைப் போல் மலர்ந்து சிரிக்கும் நீ, உன்னை அடைக்கலம் அடையும் என்னைத் துன்புறுத்தாதே! பெண்மையின் எல்லை கடந்த சூர்ப்பணகையை மூக்கறுத்த பிரான் கூறியவை பொய்யாகிவிட்டால், பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் நானும் இந்த உலகத்தே பிறந்ததும் பொய்யாகுமன்றோ?

 

601:

பாடும் குயில்காள். ஈதென்ன

பாடல்,நல் வேங்கட

நாடர் நமக்கொரு வாழ்வுதந்

தால்வந்து பாடுமின்,

ஆடும் கருளக் கொடியுடை

யார்வந் தருள்செய்து,

கூடுவ ராயிடில் கூவிநும்

பாட்டுகள் கேட்டுமே. 5

 

பாடுகின்ற குயில்களே! ஈதென்ன பாடல்? உங்கள் பாட்டு என் காதுகளுக்குக் கர்ண கடூரமாக அன்றோ இருக்கிறது. திருவேங்கடமுடையான் எனக்கு அவனுடன் இருக்கும் வாழ்வைத் தந்தால், அப்போது வந்து பாடுங்கள். ஆடும் கருடனைக் கொடியாக உடையவன் அருள் கூர்ந்து இங்கே வந்தான் என்றால், அப்போது உங்களை அழைத்து நானே உங்கள் பாடல்களைக் கேட்பேன்.

 

602:

கணமா மயில்காள். கண்ணபி

ரான்திருக் கோலம்போன்று,

அணிமா நடம்பயின் றாடுகின்

றீர்க்கடி வீழ்கின்றேன்,

பணமா டரவணைப் பற்பல

காலமும் பள்ளிகொள்,

மணவாளர் நம்மை வைத்த

பரிசிது காண்மினே. 6

 

மயில் கூட்டங்களே! கண்ணபிரானைப் போல அழகாக நடனம் ஆடும் உங்களின் அடிகளில் வணங்குகிறேன். ஆடுவதை நிறுத்துங்கள். படம் எடுத்து ஆடுகின்ற பாம்பினைப் படுக்கையாகக் கொண்டு பற்பல காலமும் பள்ளி கொண்டிருக்கும் அழகிய மணவாளன், என்னை உங்கள் காலைப் பிடிக்கச் செய்து விட்டானே!

 

603:

நடமாடித் தோகை விரிக்கின்ற

மாமயில் காள்,உம்மை

நடமாட்டங் காணப் பாவியேன்

நானோர் முதலிலேன்,

குடமாடு கூத்தன் கோவிந்தன்

கோமிறை செய்து,எம்மை

உடைமாடு கொண்டா னுங்களுக்

கினியொன்று போதுமே ? 7

 

தோகைகளை விரித்து நடனம் ஆடும் மயில்களே! உங்கள் கூத்தினைக் காண்பதற்கு என்னிடம் எந்தக் கை முதலும் இல்லை. குடக்கூத்து ஆடிய கோவிந்தன், தான் சுதந்திரன் என்று ஆளுமையைக் காட்டி, என் நாணம், நிறம் முதலிய உடமைகளைக் கவர்ந்தான். நீங்கள் ஏன் கூத்தாடிக் குலைக்கிறீர்கள்? என்னைத் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமோ?

 

604:

மழையே. மழையே. மண்புறம்

பூசியுள் ளாய்நின்ற,

மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல்

வேங்கடத் துள்நின்ற,

அழகப் பிரானார் தம்மையென்

நெஞ்சத் தகப்படத்

தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண்

டூற்றவும் வல்லையே? 8

 

ஓ மழையே! மழையே! ஈர மண்ணை வெளியே பூசி, உள்ளே இருக்கும் மெழுகைச் சுடவைத்து வெளியே தள்ளுவதைப் போல், என்னை அணைத்து அதற்குப் பிறகு என் நெஞ்சை உருக்கி எம்பெருமான் தள்ளிவிட்டான். திருவேங்கடநாதன் என் நெஞ்சில் தோன்றுகிறபடியே என்னைத் தழுவிக் கொள்ள, என்னை அவருடன் நெருங்கச் செய்து, மழை பொழிய வல்லாயோ?

 

605:

கடலே. கடலே. உன்னைக்

கடைந்து கலக்குறுத்து

உடலுள் புகுந்துநின் றூறல்

அறுத்தவற்கு, என்னையும்

உடலுள் புகுந்துநின் றூறல்

அறுக்கின்ற மாயற்குஎன்

நடலைக ளெல்லாம் நாகணைக்

கேசென்று ரைத்தியே. 9

 

ஓ கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்கி, உன்னுள் புகுந்து, திரட்சியான அமுதத்தை எடுத்தவன், என் உடம்பிலும் புகுந்து என் உயிரை அறுக்கிறான். இந்த மாயப் பிரானுக்கு என் துன்பங்களைச் சொல்ல, அவன் படுக்கையாகிய ஆதிசேஷனிடத்தே நீ சென்று கூற வேண்டும்.

 

606:

நல்லஎன் தோழி. நாக

ணைமிசை நம்பரர்,

செல்வர் பெரியர் சிறுமா

னிடவர்நாம் செய்வதென்,

வில்லி புதுவை விட்டுசித்

தர்தங்கள் தேவரை,

வல்ல பரிசு வருவிப்ப

ரேலது காண்டுமே. (2) 10

 

நல்ல என் தோழியே! ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் நம்பெருமாள், திருமகள் கேள்வனான மிகப் பெருஞ்செல்வர். பரம்பொருளானவர். மிகப் பெரியவர். நாமோ மிகவும் தாழ்ந்த மனிதர்கள். எனவே, அவனைப் பெறவேண்டும் என்றால் என்ன செய்வது? திருவில்லிபுத்தூர் பெரியாழ்வாருக்கு உகந்த தேவர் என்பதால், அவரையே ஆசார்யராகக் கொண்டு அந்தப் பெருமானைப் பெறலாம். அவர் அவனை தம்மால் கூடிய வழிகளாலே அழைத்தால், வரப் பெற்று நாம் அவனை வணங்கப் பெறுவோம்.

 

Leave a Reply