style="text-align: center;">14ஆம் திருமொழி
பட்டி மேய்ந்து
பதினான்காவது பதிகம், ஆண்டாள் மற்றும் இன்னொரு கோபிகை என இரண்டு பேர் சேர்ந்து பாடுகிற பாட்டாக அமைந்திருக்கிறது. கண்ணன் எங்கே, எங்கே என்று ஆண்டாள் தேடுகிறாள். இது போன்ற அடையாளங்கள் கொண்ட ஒரு பிள்ளை எங்காவது போவதைப் பார்த்தீர்களா என்று ஆண்டாள் கேட்பாள். அதற்கு ஒரு கோபிகை, ஓ பார்த்தேனே என்று பதில் சொல்வாள். இப்படி அமைந்திருக்கிறது இந்தப் பதிகம்.
கண்ணனைக் காணாது மெலிந்து கதறுகிற ஆண்டாளுக்கு பரம பக்தியை விளைவிக்கச் செய்வதற்காகவே, கண்ணன் தன்னுடைய முகத்தை அவளுக்குக் காட்டாமல் இருந்தான். அதனால், இவளின் ஆற்றாமை கரை புரண்டு, அவனைப் பெறாமல் உயிர் தரித்திருக்க இயலாத நிலை ஏற்பட்டது. அதனால், அவள் கண்ணனைக் கண்டீரோ? என்று கேட்கிறாள்.
பட்டிமேய்ந்து ஓர் காரேறு என்னும் பதினான்காம் திருமொழியில், ஒவ்வொரு பாசுரத்தின் முதல் இரண்டு அடிகளிலும் கண்டீரே என்று கேட்கிறவர்கள் பேச்சாகவும், பின்பாதியில், கண்டோ ம் என்று பதில் சொல்கிறவர்கள் பேச்சாகவும், முறையே தமக்குப் பிறந்த பரம பக்தியையும், பெற்ற பேரின்பத்தையும் இருவர் பேச்சாகப் பேசி, கண்ணனை பிருந்தாவனத்திலே தாம் கண்ட விதத்தைக் கூறி, நாச்சியார் திருமொழியாகிய இந்தப் பிரபந்தத்தை நிறைவு செய்கிறாள் கோதை நாச்சியார்.
637:
பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்,
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே?-
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி,
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 1
பலராமனுக்கு ஒப்பற்ற தம்பியாக, காவலைக் கடந்து திரியும் கறுத்த காளையான கண்ணன் மகிழ்ச்சியுடன் விளையாடி வருவதைக் கண்டீர்களா?
பசுக்களை விருப்பத்துடன் பெயர் கூறி அழைத்து நீர் குடிக்கச் செய்து, அவற்றை கண்ணன் மேய்த்து விளையாடி வருவதை நாங்கள் விருந்தாவனத்தில் கண்டு வணங்கினோம்.
638:
அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவர்ந்துண்ணும்,
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தனனைக் கண்டீரே?-
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல, வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 2
என்னைப் பிரிந்து வருந்தச் செய்த கண்ணன், ஆய்ப்பாடியை குறும்பால் கவர்ந்து திளைத்தவன். வெண்ணெய் நாற்றமுடைய காளை போன்ற கோவர்த்தனனை நீங்கள் கண்டீர்களா?
மின்னலும் மேகமும் கலந்ததுபோல் உடம்பில் வனமாலை மினுமினுக்க ஒளியுடன் விளங்குபவனை தோழர்களின் நடுவே விருந்தாவனத்தில் விளையாடக் கண்டோ மே!
639:
மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே?-
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்,
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 3
பெண்கள் மீது மோகமே வடிவம் கொண்டு பிறந்ததோ என்னும் படியான அன்பையே காட்டும் மணவாளனாய், பொருத்தமில்லாத பொய்கள் கூறும் கண்ணனை இங்கே போகக் கண்டீரோ?
மேலே பரவும் வெய்யில் படாமல் தடுக்கின்ற வினதை புதல்வன் கருடன் சிறகின் கீழ் எழுந்தருளும் பெருமானை விருந்தாவனத்தே கண்டோ மே!
640:
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத் தி,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே?-
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்,
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 4
கறுத்த மேகத்தில் பூத்த தாமரை மலரைப் போன்ற கண்களாகிய கயிற்றில் கட்டி, என்னை இழுத்துப் போகும் இறைவனை கண்டீர்களா?
முத்துச் சட்டையைப் போர்த்தவனாய், ஒளி மிகுந்த பெரிய யானைக் குட்டி போல் வியர்வையுடன் விளையாடும் கண்ணனை விருந்தாவனத்தில் கண்டோ மே!
641:
மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்,
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே?-
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்,
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5
எனக்கு மணி போன்றவன் மாதவன்; வலையில் இருந்து தப்பி ஓடும் பன்றியைப் போல் ஒருவர்க்கும் எட்டாமல், தான் எதுவும் கொடுக்காமல் எல்லாவற்றையும் தன்னுடையதாகக் கொள்ளும் இறைவனைக் கண்டீரோ?
பீதாம்பரப் பட்டான பீதகவாடை தாழ, கறுத்த மேகக் கன்றினைப் போல் வீதியிலே வருபவனை விருந்தாவனத்தில் கண்டோ மே!
642:
தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சார்ங்க மதுவேபோல்,
புருவ வட்ட மழகிய
பொருத்த மிலியைக் கண்டீரே?-
உருவு கரிதாய் முகம்செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்,
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 6
இரக்கம் என்பதனை அறியாதவனாக, தனது கை சார்ங்க வில்லைப் போன்ற புருவ வட்டங்களாலே அழகு பெற்றவனாக, என்னுடன் பொருந்தாத கண்ணனைக் கண்டீரோ?
உதிக்கும் மலையில் விரிகின்ற சூரியனைப்போல, கறுத்த மேனியில் செம்மையான முகம் பெற்ற அண்னனை விருந்தாவனத்தில் கண்டோ மே!
643:
பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக்
கருமா முகிலைக் கண்டீரே?-
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்,
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 7
பொருத்தமுடைய தலைவனாக, உடல் கறுப்பே போல், உள்ளமும் கறுத்து, நம் கருத்தைத் தப்பி நிற்கின்ற கறுத்த மேகம் போன்ற கண்ணனைக் கண்டீரோ?
நல்லபலன்களை விரும்புகிறவர்கள் வேண்டும் நட்சத்திர, கிரகக் கூட்டம் உள்ள வானம் போலே, தோழர்கள் கூட்டத்துடன் வருபவனை விருந்தாவனத்திலே கண்டோ மே!
644:
வெளிய சங்கொன் றுடையானைப்
பீதக வாடை யுடையானை,
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே?-
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 8
வெளுத்த பாஞ்சஜன்னியச் சங்கும் அருள்தரும் சக்கரமும் உடையவனாக பீதாம்பரம் அணிந்தவனான திருமாலைக் கண்டீரோ?
மது மாந்திக்களிக்கும் வண்டுகள் கலந்ததுபோல எங்கும் திருக்குழல் கற்றைகள் தோள்கள் மேல் மிளிர, விளையாடி வரும் கண்னனை விருந்தாவனத்தில் கண்டோ மே!
645:
நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி,
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே?-
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்மடிய,
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 9
உலகுகளைப் படைப்பதற்காக பிரமன் முதலானவர்களைப் படைத்து, குளிர்ந்த தாமரை மலரை கொப்பூழில் வீடாக உண்டாக்கி படைத்தல் காத்தல் முதலியவற்றை விளையாட்டாகக் கொண்ட விமலனைக் கண்டீரோ?
தேனுகள், குவலயாபீடம், பகாசுரன் ஆகியோரைக் கொன்றவன், காட்டில் சென்று வேட்டை ஆடி வருவதை விருந்தாவனத்தில் கண்டோ மே!
646:
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே. (2) 10
பருத்த கால்களைப் பெற்ற கஜேந்திரனுக்கு அருள் செய்த பரமனான திருமாலை, இவ்வுலகில் ஸ்ரீ பிருந்தாவனத்திலே கண்டதை, பெரியாழ்வார் திருமகள் ஆண்டால் பாசுரங்களாக அருளிச் செய்தாள். இவற்றைப் பிறவி நோய்க்கு மருந்தாகக் கொண்டு, பயின்று வாழ்பவர் திருமாலின் திருவடிகளில் பொருந்தி என்றும் பிரியாமல் இருப்பார்கள்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்