7. கருப்பூரம் நாறுமோ

ஆண்டாள்

 

style="text-align: center;">1ஆம் பத்து 7ஆம் திருமொழி

கருப்பூரம் நாறுமோ

ஏழாம் பதிகம், கல்யாணம் ஆன பிறகு உண்டான வைபவம். கற்பூரம் நாறுமோ பாசுரம் மூலமாக ஆண்டாள் அதைத் தெரிவிக்கிறாள்.

கனவிலே கண்ணனோடு ஏற்பட்ட உறவும் நீட்டிக்கப் பெறவில்லை. கவலையால் அவள் முகம் துவண்டது. எப்போதும் கண்ணனுடன் சேர்ந்திருக்கும்படியான அனுபவத்தைப் பெறவேண்டுமே! அதற்கு, எப்போதும் அவனுடன் சேர்ந்திருக்கும் ஒன்று, அந்த அனுபவத்தைச் சொல்லி அதைக் கேட்கவாவது வேண்டுமே! என்ன செய்வது? கோதைக்கு அவன் திருப்பவள வாய் வைத்து கர்ஜிக்கும்

பாஞ்சஜன்யத்தின் நினைவு வந்தது. எப்போதும் அவன் கைகளிலே ஒட்டி உறவாடும் அந்த சங்கு அடைந்த பெரும் பேற்றை எண்ணி எண்ணி உகக்கிறாள் ஆண்டாள்.

பகவானின் வலதுகையில் உள்ள சக்கரத்துக்கு இல்லாத பெருமை, இடது கையில் உள்ள சங்குக்கு உண்டு. அது என்ன? சங்கானது, பகவானுடைய இடதுகையை விட்டு நொடிப்பொழுதும் நீங்குவதே இல்லை. ஆனால், சக்கரமோ எதிரிகளை அழிக்க பகவானுடைய கையை விட்டு நீங்கி, மறுபடியும் அவருடைய கைகளில் வந்து சேரும். அவ்வாறு கண நேரமேனும் பகவானைப் பிரியும்படி நேர்கிறதே!  அடுத்து, சங்குக்கு பகவானுடைய திருவாயினில் படும் பேறு உள்ளது. அதாவது, சங்குக்கு பகவானின் திருவாயமிர்தம் கிடைக்கும். சக்கரத்துக்கு அந்த பாக்கியம் இல்லை. அதனால், சக்கரத்தாழ்வானைவிட சங்கத்தாழ்வானுக்கு பகவான் மீதான வைபவம் அதிகம்.

இப்படி, அவன் பவள உதடுகளின் வாசனையை நுகர்ந்த சங்கே அந்த அனுபவத்தை எங்களுக்கும் கூறேன் என்று, பகவத் அனுபவம் இருக்கும்படியைப் பலவாறு கேட்கிறாள் கற்பூரம் நாறுமோ என்ற இந்த ஏழாம் திருமொழியில்.

 

567:

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1

 

கண்ணனுடைய பவள வாய் உதடுகளில் பச்சைக் கற்பூர வாசனை வீசுமோ? தாமரைப் பூ மணம்தான் வீசுமோ?  அவன் பவள வாய் தித்தித்ப்புச் சுவையுடன் இருக்குமோ? கடலில் பிறந்த வெண்மையான பாஞ்சஜன்னிய சங்கே! குவலயாபீட யானையின் கொம்பினை ஒடித்த அந்தக் கண்ணபிரானின் உதட்டின் சுவையையும், வாசனையையும் பற்றி, ஆசையுடன் உன்னிடம் கேட்டறிய விரும்புகின்றேன். இதைப் பற்றி எனக்குச் சொல்வாயா?

 

568:

கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்

உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்

திடரில் குடியேறித் தீய வசுரர்,

நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2

 

உப்புக் கடலில் பிறந்த நீ, இறைவனை வெறுத்த பஞ்சசனன் என்னும் அசுரன் உடலுக்குள் வளர்ந்து, இரண்டு இடங்களையும் கருதாமல், ஊழிக்காலத்தை நிர்வகிப்பவனான திருமாலின் கைத்தலங்களில் குடிபுகுந்து தீய அசுரர்கள் அழிவுபட, முழங்கும் பேறு பெற்றாய் நல்ல சங்கே!

 

569:

தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,

இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்

வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,

குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே. 3

 

உன் அழகுக்கும் மேலே திருமாலுக்கு அழகூட்டும் கோலம் உடைய சங்கே! சரத் காலத்தில் முழுநிலா நாளன்று பெரிய மலையிலே சந்திரன் உதயமாகி ஒளிவிடுவது போலே, வடமதுரை அரசனான கண்ணனின் திருக்கையினில் நீயும் குடிபுகுந்து உன் பெருமைகள் தோன்ற விளங்குகிறாய்.

 

570:

சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,

அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,

மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,

இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4

 

வலம்புரிச் சங்கே… சந்திர மண்டலம் குளிர்ந்த ஒளி வீசித் திகழ்வதுபோல, தாமோதரனாகிய கண்ணபிரானின் கையினில் திகழ்கிறாய்… அவன் நாயகிகள் அவனைவிட்டுப் பிரியாதிருப்பதைப் போல, என்றும் இடைவிடாது அவனுடனேயே இருந்து, அவன் காதுகளில் மந்திரம் பேசுகிறாயா? இத்தகைய உன் செல்வத்துக்கு இந்திரனும் ஒப்பாக மாட்டான்.

 

571:

உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,

இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,

மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,

பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5

 

பாஞ்சஜன்னியமே… கடலில் உன் இனத்தைச் சேர்ந்த மற்ற சங்குகளை, இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று மதித்துப் பேசுவார் எவரும் இல்லையே! ஒரே கடலில் வாழ்ந்த உங்களுக்குள், நீ ஒருவன் மட்டுமே உலக சக்ரவர்த்தியாகத் திகழும் மதுசூதனனின் வாயமுதத்தைப் பல நாள்களாகப் பருகும் பேறு பெற்றிருக்கிறாய்.

 

572:

 

போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,

சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு

சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய

வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே. 6

 

வலம்புரிச் சங்கே! கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று, நீராட மேற்கொள்ளும் துன்பங்கள் எதுவும் இல்லாமலேயே நீ அந்தப் பலனைப் பெற்றுவிட்டாய். இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளிய கண்ணபிரானின் கைத்தலத்தில் குடிகொண்ட நீ, அந்தச் செங்கண்மாலின் வாய்த்தீர்த்தத்தில் நீராடும் பேற்றினைப் பெற்றாயே!

 

573:

 

செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்

செங்கட் கருமேனி வாசுதே வனுடய,

அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,

சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7

 

சங்குகளின் அரசனான பாஞ்சசன்னியமே! அன்று மலர்ந்த செந்தாமரைப் பூவில் தேனைக் குடிக்கும் அன்னத்தைப் போல, சிவந்த கண்களையும் கருத்த திருமேனியையும் உடைய கண்ணனின் அழகிய கைத்தலத்தின் மீது ஏறி, உறங்கும் உன் செல்வம் மிகவும் அழகியது அன்றோ?!

 

574:

உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,

கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,

பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,

பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8

 

பாஞ்சசன்னியச் சங்கே! உலகளந்த உத்தமனாகிய திருமாலின் வாய் அமுதத்தை நீ பருகுகிறாய். நீ தூங்கும் இடமோ, கடல் நிறக் கடவுளின் திருக்கை. இப்படி உணவும் உறக்கமும் கண்ணபிரானிடமே உனக்கு வாய்த்ததால், பெண் குலத்தவர் உன்னிடம் பொறாமை கொண்டு பூசல் இடுகின்றார்கள். பண்பல்லாத இந்தக் காரியத்தை நீ செய்வது உனக்குத் தகுதியா?

 

575:

பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,

பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,

சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9

 

பெருஞ்செல்வம் மிக உடைய சங்கே! பதினாறாயிரம் தேவிமார்கள், கண்ணபிரானின் வாய் அமுதத்தைப் பருகுவதற்காகக் காத்திருக்கும்போது, நீ ஒருவன் மட்டுமே புகுந்து தேனைக் குடிப்பதுபோலப் பருகலாமா? கண்ணன் அடியவர்கள் யாவருக்கும் பொதுவாக உள்ளதை நீ மட்டுமே பெற்றுக் களித்திருக்கலாமா? மற்றவர்கள் உன்னிடம் இருந்து வேறுபட மாட்டார்களா?

 

576:

பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,

வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,

ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,

ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. (2) 10

 

அழகில் சிறந்த திருவில்லிபுத்தூரின் புகழ் வாய்ந்த பட்டர்பிரானின் மகளான கோதை, பாஞ்சசன்னியச் சங்கை பத்மநாபனுடன் கிட்டிய சுற்றமாக்கிப் பாசுரங்கள் பாடினாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயின்று எம்பெருமானைத் துதிப்பவர்கள் அவனுக்கு அணுக்கத் தொண்டர்கள் ஆவார்கள்.

 

Leave a Reply