style="text-align: center;">1ஆம் பத்து 4ஆம் திருமொழி
தெள்ளியார் பலர்
அடுத்து நாலாவது பதிகம் -கூடல் இழைத்தல் என்பது. கண்ணனே நம்மோடு கூடவல்லானோ என்று பிரார்த்திக்கிறாள் ஆண்டாள். வைணவ சம்ப்ரதாயத்தில் வடக்குத் திருமலை என்பது- திருவேங்கட மலையான திருப்பதி மலையைக் குறிக்கும். தெற்குத் திருமலை என்பது- திருமாலிருஞ்சோலைமலை. கீழவீடு என்பது திருக்கண்ணபுரம் திருத்தலத்தை குறிக்கும். மேலவீடு என்பது திருவரங்கம். இந்த நான்கு திவ்யதேசங்களையும் இந்த நான்காம் பதிகத்தின் முதல் இரண்டு பாசுரங்களில் பாடுகிறாள் ஆண்டாள்.
கண்ணபிரானோடு இருந்த இந்தக் கூடலானது, பிரிவிலே முடிந்தது. அந்தப் பிரிவாற்றாமை மனத்தில் பொங்க, ஓமறுபடியும் கண்ணன் கூடவல்லானோ? என்று ஏங்குகிறது. என்னை அடையவேண்டும் என்ற முடிவுடன் அவதரித்த கண்ணபிரான், இங்கே வருவானாகில், கூடலே நீ கூடிடு என்று, கூடல் என்பதையே உருவகப்படுத்தி அதனோடு பேசுகிறாள் தெள்ளியாரில் என்ற நான்காம் திருமொழியில்!
534:
தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1
என்றும் தெளிந்திருக்கும் நித்தியசூரிகளால், கைகள் கூப்பி வணங்கப்பெறும் இறைவனான திருமால், வள்ளல்பிரானாக திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி இருக்கிறான். உள்ளம் கொள்ளை கொள்ளும் இந்த அழகன் பள்ளி கொள்ளும் இடமாகிய திருவரங்கத்தில், அவன் திருவடிகளை நான் பிடித்துவிடும் படியாக எனக்கு அருள மாட்டானோ!? அவன் திருவுள்ளம் பற்றுவான் என்றால், கூடலே… நீ கூடிக் காட்டவேண்டும்.
(வட்டச் சுழிகள் இரட்டைப் படையாக வருவது கூடல் ஆகும்)
535:
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்,
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்,
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. (2) 2
வாமனனாக அவதாரம் செய்தவன், காட்டை வசிப்பிடமாகக் கொண்டு திருவேங்கடத்திலும் திருவாய்ப்பாடியான கண்ணபுர நகரிலும் ஆனந்தமும் அன்பும் மேலிட குறைவின்றி எழுந்தருளி உள்ளான். இவன் ஓடி வந்து என் கரம் பற்றி என்னை அணைத்துக் கொள்வானாகில், கூடலே… நீ கூடிடு!
536:
பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்,அணி வாணுதல் தேவகி
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,
கோம கன்வரில் கூடிடு கூடலே. 3
தாமரை மலரில் தோன்றிய பிரமனும், மிகவும் கீர்த்தி உடைய நித்யசூரிகளும் போற்றத் தகுந்த உபயவிபூதி நாயகன்; ஒளி முகம் பெற்ற தேவகியின் நல் மகன்; நற்குணங்கள் உடைய வசுதேவருக்கு ஆளுமை கூடிய மாண்புடன் மகனாகப் பிறந்தவன். இந்தக் கண்ணன் என்னை அணைக்க வருவானாகில் கூடலே… நீ கூடிடு!
537:
ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட,
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,
வாய்த்த காளியன் மேல்நட மாடிய,
கூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4
அச்சமே இயல்பாகப் பெற்ற ஆச்சிமாரும், அச்சமே அறியாத ஆயர்களும் அஞ்சும்படியாக, பூத்துயர்ந்த கடம்ப மரத்தின் மேல் இருந்து நீருக்குள் புகும்படியாகப் பாய்ந்தான். அப்படிப் பாய்ந்து, மிகப் பேறு பெற்ற அந்தக் காளிங்கன் தலையில் பாதத்தைப் பதித்து களி நடம் ஆடிய கூத்தனான அந்தக் கண்ணபிரான் வரக்கூடுமாகில், கூடலே.. நீ கூடிடு!
538:
மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு,
ஓடை மாமத யானை யுதைத்தவன்,
கூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5
அழகிய நெற்றிப் பட்டத்தை அணிந்த குவலயாபீட யானையை உதைத்துக் கொன்ற பலசாலியான அந்தக் கண்ணபிரான், மாட மாளிகைகள் சூழ்ந்த அழகிய மதுரையம்பதிக்கு வந்து, நம் வீடு இருக்கின்ற தெருவின் நடுவே வந்துநின்று, நம்மோடு கூடுவானாகில், கூடலே… நீ கூடிடு!
539:
அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6
என்னை அடையத் தீர்ந்த முடிவுடன் அவதரித்தவன், மருத மரங்கள் முறிந்து விழும்படியாக தவழ்ந்த நடைகற்றவன், வஞ்சகக் கம்சனை வஞ்சனையாலேயே அழித்தவன், மதுரையம்பதிக்கு அரசனாகத் திகழ்ந்த அந்தக் கண்ணபிரான் வருவானாகில், கூடலே… நீ கூடிடு!
540:
அன்றின் னாதன செய்சிசு பாலனும்,
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7
முன்னர் ஒருகாலத்தில் தீமையையே செய்துவந்த சிசுபாலனும், நெடிதுயர்ந்த இரண்டு மருதமரங்களாகப் பாதையில் நின்ற அசுரர்களும், ஏழு காளைகளும், பறவை வடிவில் வந்த பகாசுரனும், வெற்றி வேல் கொண்டிருந்த கம்சனும் வீழும்படியாக வதம் செய்த அந்தக் கண்ணன் வரக்கூடுமாகில், கூடலே.. நீ கூடிடு!
541:
ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,
கோவ லன்வரில் கூடிடு கூடலே. 8
ஆவலும் அன்பும் உடையவர்களின் உள்ளத்தை அல்லாது வேறு எங்கும் தங்காத கண்ணபிரான், மணம் சூழ்ந்த துவாரகையின் தலைவனாவான். கன்றுகளை மேய்த்து, அவற்றைக் காத்து விளையாடிய அந்தக் கண்ணபிரான் வருவானாகில், கூடலே… நீ கூடிடு!
542:
கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்,
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9
பவித்திரம், தண்டு, பூணூல் ஆகியவற்றைத் தரித்து, குள்ள உருவத்தில் ஒரு பிரமசாரியாகக் கோலம் கொண்டு, முன்னொரு காலத்தில் மகாபலிச் சக்ரவர்த்தியின் யாகசாலைக்குச் சென்று, தன் ஒவ்வோர் அடியாலும் மேல் உலகம், கீழ் உலகம், இந்தப் பூவுலகம் ஆகிய மூன்றையும் அளந்துநின்ற அந்தத் திருவிக்ரமன் வருவானாகில், கூடலே… நீ கூடிடு!
543:
பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்த,எம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,
குழக னார்வரில் கூடிடு கூடலே. 10
ஏட்டில் எழுதிவைக்காமல், வழிவழியாகப் பழகிவந்துள்ள மிகவும் தொன்மையான நான்கு வேதங்களுக்கும் உட்பொருள் ஆனவன்; மதம் பெருக்கும் யானையான கஜேந்திரனின் துன்பத்தை நீக்கி உய்வித்தவன்; தன் அழகாலே என்னை ஈர்த்து அவனில் என்னை ஈடுபடுத்தியவன்; அழகிய ஆய்ச்சியர்களின் சிந்தையில் குழைந்திருப்பவன் ஆகிய இந்தக் கண்ணன் வருவானாகில், கூடலே… நீ கூடிடு!
544:
ஊடல் கூட லுணர்தல் புணர்தலை,
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய,
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. (2) 11
ஊடுதல், கூடுதல், குற்றங்களை உணர்த்துதல், முடிவில் கலத்தல் ஆகியவற்றில் பொருந்திய ஆய்ப்பெண்கள் இழைத்த கூடல் பற்றி, அழகிய கூந்தலை உடைய ஆண்டாள் பாடல்களாலே அருளிச் செய்தாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் ஓதுபவர்களுக்கு பகவானைப் பிரிந்து படுகின்ற பாவமே இல்லை.