13. கண்ணன் என்னும்

ஆண்டாள்

 

13ஆம் திருமொழி

கண்ணனென்னும்

பதிமூன்றாவது பதிகம், கண்ணனுடைய வஸ்திரத்தை கொண்டு வந்து வீசுங்கள், அவன் தரித்த துளசியைக் கொண்டு வந்து வீசுங்கள். அப்போதுதான் நாம் உயிர் தரிப்போம் என்று தெரிவிப்பது.

கண்ணன் இருக்கும் இடத்தில் என்னை சேர்த்து விடுங்கள் என்று ஆண்டாள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவன் தொடர்புடைய இடங்களுக்கு அவளைக் கொண்டு சேர்க்க, அருகில் இருந்தவர்களால் இயலவில்லை. எனவே, ஓஅவனோடு தொடர்புடைய ஏதாவது ஒன்றை, கண்ணன் அணிந்த ஆடை, அவன் தரித்திருந்த துளஸி முதலியவற்றைக் கொண்டு வந்து என்னைத் தொடச்செய்து, அதன் மூலமாவது என்னை உயிர் தரிக்கச் செய்யுங்கள்  என்று பிரார்த்திக்கிறாள். பதிமூன்றாம் திருமொழியான கண்ணன் என்னும் கருந்தெய்வம் பாசுரங்களில் ஆண்டாள் தெரிவிக்கும் பிரார்த்தனை இவை.

 

627:

கண்ண னென்னும் கருந்தெய்வம்

காட்சி பழகிக் கிடப்பேனை,

புண்ணில் புளிப்பெய் தாற்போலப்

புறநின் றழகு பேசாதே,

பெண்ணின் வருத்த மறியாத

பெருமா னரையில் பீதக

வண்ண ஆடை கொண்டுஎன்னை

வாட்டம் தணிய வீசீரே. (2) 1

 

கண்ணன் என்னும் கறுப்பான தெய்வத்துடன் பழகிய காட்சிகளை நினைத்தபடி உயிர்வாழ விரும்பினால், அது விரக தாப வேதனையை அதிகமாக்குகிறது. தாய்மார்களே! நீங்கள் வேறாக நின்று கொண்டு புண்ணிலே புளிச்சாற்றை ஊற்றுவதைப் போல, எனக்கு ஏதோ நல்லது சொல்வதாக நினைத்துக் கொண்டு அறிவுரை ஏதும் சொல்ல வேண்டாம். பெண்ணின் வருத்தத்தினை அறியாத கண்ணனின் இடுப்பில் சாற்றிய பீதக ஆடையினைக் கொண்டுவந்து, என் வாட்டம் தீரும்படி வீசுவதே என் நோய்க்குப் பரிகாரம் ஆகும். எனவே அவன் பீதாம்பரத்தை என் மேல் வீசுங்கள்.

 

628:

பாலா லிலையில் துயில்கொண்ட

பரமன் வலைப்பட் டிருந்தேனை,

வேலால் துன்னம் பெய்தாற்போல்

வேண்டிற் றெல்லாம் பேசாதே,

கோலால் நிரைமேய்த் தாயனாய்க்

குடந்தைக் கிடந்த குடமாடி,

நீலார் தண்ணந் துழாய்கொண்டென்

நெறிமென் குழல்மேல் சூட்டீரே. 2

 

பால்பாய்கின்ற அளவுக்கு தளிரான ஓர் ஆல் இலையில் கண்வளர்ந்த கண்ணபிரானின் வலையில் அகப்பட்டுள்ள என்னை, வேலாயுதம் கொண்டு துளைப்பதுபோல, உங்களுக்குத் தோன்றும்படியெல்லாம் பேசித் துன்புறுத்தாதீர்கள். இடைப்பிள்ளையாக, கையில் கோல் பிடித்து பசுக்கூட்டங்களை மேய்த்த, திருக்குடந்தை மாநகரில் பள்ளி கொண்டு அருளிய குடக்கூத்தன் கண்ணனுடைய குளிர்ந்த திருத்துழாயினைக் கொண்டு வந்து, என் மென்மையான கூந்தலில் சூட்டுங்களேன்!

 

629:

கஞ்சைக் காய்ந்த கருவில்லி

கடைக்க ணென்னும் சிறைக்கோலால்,

நெஞ்சூ டுருவ வேவுண்டு

நிலையும் தளர்ந்து நைவேனை,

அஞ்சே லென்னா னவனொருவன்

அவன்மார் வணிந்த வனமாலை,

வஞ்சி யாதே தருமாகில்

மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3

 

கம்சனைக் கொன்ற, வில்லைப் போன்ற புருவமுடைய கண்ணனின் கடைக்கண்ணாகிற சிறகுடைய அம்பாலே, என் இதயம் முழுவதும் வெந்துபோய் நிலை தளர்ந்தேன். இவ்வாறு வருந்தும் என்னைப் பார்த்து அஞ்சாதே என்று அபயம் கூறாத அந்தப் பெருமான், தான் அணிந்த வனமாலையை வஞ்சிக்காமல் தந்தால், நீங்கள் அதைக் கொண்டு வந்து என் மார்பில் போட்டு, என் நெஞ்சு வெப்பம் போகுமாறு புரட்டுங்களேன்!

 

630:

ஆரே யுலகத் தாற்றுவார்

ஆயர் பாடி கவர்ந்துண்ணும்,

காரே றுழக்க வுழக்குண்டு

தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை,

ஆரா வமுத மனையான்றன்

அமுத வாயி லூறிய,

நீர்தான் கொணர்ந்து புலராமே

பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4

 

ஆய்ப்பாடி அனைத்தையும் தன் தீங் குறும்புகளால் கவர்ந்து, அனுபவிக்கும் கறுத்த காளையான கண்ணன், என் மனத்தைக் கவர்ந்து துன்புறுத்துவதால், நான் மிகவும் நலிவுற்றுத் தளர்ந்து நொந்தேன். இந்த உலகில் எனக்குத் தேறுதல் கூற யாருமில்லையே! தாய்மார்களே! ஆரா அமுதமான கண்ணன் திருவாயில் ஊறிக் கிடக்கும் அமுத நீரைக் கொண்டுவந்து, நான் பருகும்படி செய்து, என் தளர்ச்சியை நீக்குங்களேன்!

 

631:

அழிலும் தொழிலு முருக்காட்டான்

அஞ்சே லென்னா னவனொருவன்,

தழுவி முழுகிப் புகுந்தென்னைச்

சுற்றிச் சுழன்று போகானால்,

தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே

நெடுமா லூதி வருகின்ற

குழலின் தொளைவாய் நீர்கொண்டு

குளிர முகத்துத் தடவீரே. 5

 

நான் அழுதாலும், அவனைத் தொழுதாலும், கண்ணன் தன் உருவத்தை எனக்குக் காட்டவில்லை. உருவைக் காட்டாவிடினும் பரவாயில்லை… பயப்படாதே  என்றுகூட அவன் ஓர் அபய மொழியும் கூறவில்லை. இந்த ஒப்பற்ற குறும்பன், என்னுள் புகுந்து, நெருக்கி அணைத்து, சுற்றிலும் வளைத்துக் கொண்டு, போகாமல் இருக்கிறானே! பீலிக் குடையின்கீழ், பசுக்களின் பின்னே சென்ற காதல் மிகுந்த கண்ணன் ஊதி வரும் புல்லாங்குழலின் துளைகளில் ஊறும் நீரைக் கொண்டு வந்தாவது என் முகத்தில் தடவுங்களேன்!

 

632:

நடையொன் றில்லா வுலகத்து

நந்த கோபன் மகனென்னும்,

கொடிய கடிய திருமாலால்

குளப்புக் கூறு கொளப்பட்டு,

புடையும் பெயர கில்லேன்நான்

போட்கன் மிதித்த அடிப்பாட்டில்

பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்

போகா வுயிரென் னுடம்பையே. 6

 

நந்தகோபன் மகன் என்று பெயர் பெற்ற, இரக்கமற்ற தன்னலமே பேணுகின்ற திருமாலால் நான் வஞ்சிக்கப்பட்டேன். உலகுக்கு என் மீதுள்ள மரியாதையோ குலைந்துவிட்டது. கண்ணன் என்னும் காளை தன் கால் குளம்பாலே மிதித்து மிதித்துப் பிளவுபட்ட அபலையான நான், இங்குமங்கும் அசையவும் வலிமை இல்லாமல் போனேன். தீம்பனான கண்ணனின் திருவடி பட்ட இடத்தின் பாத தூளியையாவது கொண்டு வந்து, உயிர் போகாமல் இன்னும் இருக்கும் என் உடம்பில் பூசுங்களேன்.

 

633:

வெற்றிக் கருள கொடியான்றன்

மீமீ தாடா வுலகத்து,

வெற்ற வெறிதே பெற்றதாய்

வேம்பே யாக வளர்த்தாளே,

குற்ற மற்ற முலைதன்னைக்

குமரன் கோலப் பணைத்தோளோடு,

அற்ற குற்ற மவைதீர

அணைய வமுக்கிக் கட்டீரே. 7

 

கருடனை வெற்றிக் கொடியாகக் கொண்ட திருமாலின் ஆட்சியை மீற இயலாத இவ்வுலகில், தாயான யசோதை கண்ணனைப் பெற்று, வேப்பங்காய் போலே கசக்கும்படி, வீணாக வளர்த்தாளோ? அந்தத் தீம்பனை அன்றி வேறு ஒருவனை விரும்பும் குற்றமில்லாத என் மார்புகளை, குமரனான அவனின் சுந்தரத் தோள்களுடன் சேரத் தழுவுமாறு செய்து, அற்றுத் தீர்ந்த குற்றம் போகும்படி செய்யுங்களேன்!

 

634:

உள்ளே யுருகி நைவேனை

உளளோ இலளோ வென்னாத,

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்

கோவர்த் தனனைக் கண்டக்கால்,

கொள்ளும் பயனொன் றில்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்

எறிந்தென் அழலை தீர்வேனே. 8

 

பிரிவினால் நான் உள்ளுக்குள்ளே உருகி நைந்தேன். இவள் இருக்கிறாளா? இல்லையா?  என்று விசாரிக்காமல், அலட்சியம் செய்யும் அவனிடம் நான் என்னை இழந்துவிட்டேன். பெண்களிடத்தில் குறும்பு செய்யும் கோவர்த்தனனைக் கண்டால், பயன் எதுவும் இல்லாத என் முலைகளை அடியுடன் பறித்து அவன் மார்பில் வீசி என் துயரத்தைப் போக்கிக் கொள்வேன்.

 

635:

கொம்மை முலைக ளிடர்தீரக்

கோவிந் தற்கோர் குற்றேவல்,

இம்மைப் பிறவி செய்யாதே

இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்,

செம்மை யுடைய திருமார்வில்

சேர்த்தா னேலும் ஒருஞான்று,

மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி

விடைதான் தருமேல் மிகநன்றே. 9

 

பருத்து வளர்ந்த என் முலைகளின் துன்பம் போக, அந்த கோவிந்தனுக்கு அந்தரங்கத் தொண்டை இந்தப்பிறவியில் செய்யாமல், அதன் பின் கிடைக்கும் பரமபதத்தில் என்ன தவம் வேண்டிக் கிடக்கிறது..? இந்த உடம்புடன் அணைய விரும்பும் என்னை, அவன் செம்மையான திருமார்பில் தழுவிக் கொண்டால் நல்லது. இல்லையென்றால், ஒருநாளாவது என் முகம் பார்த்து உண்மை பேசி, வேண்டாம் என்றாலும் மிக நல்லதே!

 

636:

அல்லல் விளைத்த பெருமானை

ஆயர் பாடிக் கணிவிளக்கை,

வில்லி புதுவை நகர்நம்பி

விட்டு சித்தன் வியன்கோதை,

வில்லைத் தொலைத்த புருவத்தாள்

வேட்கை யுற்று மிகவிரும்பும்,

சொல்லைத் துதிக்க வல்லார்கள்

துன்பக் கடளுள் துவளாரே. (2) 10

 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் நம்பி விஷ்ணுசித்தரின் மகளான கோதை, வில்லையும் தோற்கடிக்கும் புருவம் உடையவள். தீம்புகள் செய்யும் குறும்பனை, ஆயர்பாடியின் அணிவிளக்காய்த் திகழ்ந்த கண்ணனை, காதல் செய்து, ஆற்றாமையுடன் ஆண்டாள் அருளிய இந்தப் பாசுரங்களை ஓதுபவர்கள் துன்பக்கடலில் விழுந்து தத்தளிக்கமாட்டார்கள்.

 

Leave a Reply