2. நாமமாயிரம்

ஆண்டாள்

 

style="text-align: center;">1ஆம் பத்து 2ஆம் திருமொழி

நாமமாயிரம்

அடுத்து, நாமம் ஆயிரம் ஏத்த நின்ற என்ற இரண்டாம் பதிகம். இதில், சிற்றில் வந்து சிதையேலே என்று கண்ணனுடைய பால பருவ சேட்டை ஒன்றைச் சொல்லி, எங்களுடைய சிந்தனையை இப்படி சிதைத்து விடாதே. உன்னை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த ஆசை நடக்வாதபடி சிதைத்துவிடாதே என்று கண்ணனிடம் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.

மனித வடிவாக அவதரித்த கண்ணனே, எங்கள் மாமி யசோதை, குறும்புத்தனங்கள் செய்யும் உன்னை மகனாகப் பெற்றாள். அதனால், நாங்கள் உன் குறும்பால் துன்புறுவதில் இருந்து தப்ப முடியுமோ? பங்குனி மாதம் ஆதலால், காமன் வரும் காலம் என்று பாதையை அலங்கரித்து வைத்தோம். நீ எங்கள் சிறுவீடு சிதைக்காதே என்று இந்தப் பெண்கள் கண்ணனிடம் வேண்டுகிறார்கள். இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத கண்ணபிரான், விரைந்து வந்து அவனுடைய முகத்தை அவர்களுக்குக் காட்டினான். ஆனால், ஆண்டாளோ ஊடல் கொண்டவளாக முகம் காட்டாது இருந்தாள். கண்ணன் இவளின் கை பற்றி, மெய் தீண்டி அணைத்தான். கண்ணனின் இந்தச் செயலைப் பார்ப்பவர்கள் என்னதான் பேசமாட்டார்கள் என்கிறாள் ஆண்டாள் இந்த இரண்டாம் திருமொழியில்!

 

514:

நாமமாயிர மேத்தநின்ற

நாராயணாநர னே,உன்னை

மாமிதன்மக னாகப்பெற்றா

லெமக்குவாதை தவிருமே,

காமன்போதரு காலமென்றுபங்

குனிநாள்கடை பாரித்தோம்,

தீமைசெய்யும் சிரீதரா.எங்கள்

சிற்றில்வந்து சிதையேலே. (2) 1

 

சஹஸ்ரநாமம் என, உன்னுடைய ஆயிரம் திருநாமங்களை நித்யசூரிகள் கூறித் துதிக்கும்படி வீற்றிருக்கும் நாராயணனே! இந்த பூவுலகில் நரன் ஆக மனிதவுருவிலும் பிறந்தவனே! எங்கள் மாமியான யசோதை உன்னைப் பெற்றாள். அதனால், உன் குறும்புகளால் நாங்கள் துன்புறுவதும் தப்புமோ? பங்குனி மாதம் என்பதால், மன்மதன் வரும் காலம் இது என்று இந்தப் பாதையை அலங்கரித்து வைத்தோ. தீங்குறும்புகள் செய்யும் ஸ்ரீதரா… எங்களுடைய சிறுவீடுகளை சிதைக்காதே!

 

515:

இன்றுமுற்றும் முதுகுநோவ

இருந்திழைத்தஇச் சிற்றிலை,

நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்

ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,

அன்றுபாலக னாகியாலிலை

மேல்துயின்றவெம் மாதியாய்,

என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்

கம்மெழாததெம் பாவமே. 2

 

எங்கள் முதுகுகள் நோகும்படி, இன்று முழுவதும் இருந்து இழைத்துக் கட்டிய இந்தச் சிறுவீடுகளை, ஆர்வத்துடன் உற்றுப் பார்த்து மகிழ்கின்றோம். இப்படிப் பார்த்துக்கொண்டிருக்கும் எங்களின் ஆர்வத்தை அழியும்படி செய்துவிடாதே. பிரளயகாலமான அன்று ஒருநாள், ஒரு பாலகனாக ஆலம் இலையிலே பள்ளி கொண்டு கண்வளர்ந்த எங்கள் ஆதிப்பிரானே. எங்கள் மீது உனக்கு என்றும் இரக்கம் ஏற்படாது இருப்பது நாங்கள் செய்த பாவமோ?!

 

516:

குண்டுநீருறை கோளரீ.மத

யானைகோள்விடுத் தாய்,உன்னைக்

கண்டுமாலுறு வோங்களைக்கடைக்

கண்களாலிட்டு வாதியேல்,

வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்

கைகளால்சிர மப்பட்டோ ம்,

தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள்

சிற்றில்வந்து சிதையேலே. 3

 

பிரளயகாலத்தில் ஆழமான சமுத்திரத்தில் கண்வளர்ந்த சிங்கமே! கஜேந்திர மதயானை விடுத்த அபயக்குரலுக்குச் செவிசாய்த்து, ஓடோ டி வந்து, அதன் துன்பத்தைப் போக்கியவனே! உன்னைப் பார்த்து ஆசைப்படும் எங்களை உன் குறும்புத்தனமான கடைக்கண் நோக்கி வதைக்காதே! வண்டல் மண் உள்ள இடத்தைத் தேடிச் சென்று, பொடி மணல் எடுத்து வந்து, வளைகள் அணிந்த எங்கள்  கைகளால் மிகவும் சிரமப்பட்டு இந்தச் சிறிய வீட்டைக் கட்டியுள்ளோம். அலைகள் கொண்ட பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமா… எங்கள் சிறுவீட்டைச் சிதைக்காதே.

 

517:

பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன்,

பேச்சும்செய்கையும், எங்களை

மையலேற்றி மயக்கவுன்முகம்

மாயமந்திரந் தான்கொலோ,

நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை

நோவநாங்களு ரைக்கிலோம்,

செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்

சிற்றில்வந்து சிதையேலே. 4

 

மழை பொழியக் காத்திருக்கும் கருமேகம் போன்ற நிறத்தவனே. உன்னுடைய மயக்கும் பேச்சும், செய்கையும் எங்களை காதற்பித்து ஏற்றி மயங்கச் செய்கின்றன. உன் அழகு முகம், சொக்குப் பொடி போடும் மாயமோ மந்திரமோ..? இந்தச் சிறுமிகள் மிகவும் பலவீனமான சிறுபிள்ளைகள் என்று பிறர் சொல்வதற்குப் பயந்து, நீ வருந்தும்படி நாங்கள் எதுவும் பேசவில்லை. தாமரை மலர் போன்ற அழகிய கண்கள் கொண்டவனே… எங்கள் சிறுவீட்டைச் சிதைத்துவிடாதே.

 

518:

வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்

விசித்திரப்பட, வீதிவாய்த்

தெள்ளிநாங்களி ழைத்தகோல

மழித்தியாகிலும், உன்றன்மேல்

உள்ளமோடி யுருகலல்லால்

உரோடமொன்று மிலோங்கண்டாய்,

கள்ளமாதவா. கேசவா.உன்

முகத்தனகண்க ளல்லவே. 5

 

கள்ளத்தனம் கொண்ட கண்ணா, மாதவா, கேசவா… தெருவில் யாவரும் வியக்கும் வண்ணம், வெண்மணற் பொடிகளைக் கொண்டு தெளித்து நாங்கள் கட்டிய இந்தச் சிறுவீட்டின் அழகுக் கோலத்தை நீ அழித்தாலும், எங்கள் இதயம் உடைந்து உருகுமே அன்றி, உன் மேல் நாங்கள் எவரும் கோபம் கொள்ள மாட்டோ ம். காரணம் உன் கண்ணழகு. உன் முகத்தில் உள்ள அந்தக் கண்கள், பார்க்கும் கண்களாகத் தெரியவில்லை… எங்களை வீழச் செய்யும் மாய வலையாக அன்றோ தெரிகிறது.

 

519:

முற்றிலாதபிள் ளைகளோம்முலை

போந்திலாதோமை, நாடொறும்

சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி

துண்டுதிண்ணென நாமது

கற்றிலோம்,கட லையடைத்தரக்-

கர்குலங்களை முற்றவும்

செற்று,இலங்கையைப் பூசலாக்கிய

சேவகா.எம்மை வாதியேல். 6

 

கடலில் அணை கட்டி, இலங்கை அடைந்து, அதனை போர்க்களமாக்கி, அசுரர் குலம் முழுவதையும் அழித்த வீரம் செறிந்தவனே… எங்கள் சிறுவீட்டை சிதைப்பது போல, நீ எங்களிடத்தே வந்து செய்யும் செயல்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. ஆனால் நாங்களோ, அதைக் கற்கவில்லை. இன்னும் சிறுமுலைகள் கிளர்ந்து எழாத சிறுமிகளாகிய எங்களிடத்தே, நாள்தோறும் வந்து துன்புறுத்தாதே. உன் நினைவு அறியும் அளவுக்கு ஈடான பருவத்தை இன்னும் நாங்கள் அடையவில்லை.

 

520:

பேதநன்கறி வார்களோடிவை

பேசினால்பெரி திஞ்சுவை,

யாதுமொன்றறி யாதபிள்ளைக

ளோமைநீநலிந் தென்பயன்,

ஓதமாகடல் வண்ணா.உன்மண

வாட்டிமாரொடு சூழறும்,

சேதுபந்தம் திருத்தினாயெங்கள்

சிற்றில்வந்து சிதையேலே. 7

 

பகுத்தறிந்து பார்க்கும் திறனுள்ள அறிவார்ந்த மக்களோடு நீ பேச விரும்பும் கருத்தைப் பேசினால், உனக்கு ஓரளவு பயனிருக்கும். அது உனக்கு இனிமையாகவும் இருக்கும். ஆனால், எதுவும் அறிந்திராத பேதைப் பெண்களான எங்களை நீ நலிவதால் என்ன பயன்? அலைகடல் நிறமுடைய கண்ணா… கடலின் மீது சேது பந்தனம் என ஓர் அணையைக் கட்டியவனே… உன் மனைவிமார்கள் மீது ஆணையிட்டோ ம்… எங்கள் சிறு வீட்டைச் சிதைக்காதே.

 

521:

வட்டவாய்ச்சிறு தூதையோடு

சிறுசுளகும்மண லுங்கொண்டு,

இட்டமாவிளை யாடுவோங்களைச்

சிற்றில் ஈடழித் தென்பயன்,

தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்

சுடர்ச் சக்கரம்கையி லேந்தினாய்,

கட்டியும்கைத் தாலின்னாமை

அறிதியேகடல் வண்ணனே. 8

 

வட்டமான வாய் உடைய சிறிய பானை, சிறிய முறம், மணல் இவற்றைக் கொண்டு விருப்பத்தோடு ஏதோ நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இப்படி விளையாடும் எங்கள் சிறுவீட்டைக் கலைத்துப் பயன்படாதபடிக்கு அழிப்பதால் உனக்கு என்ன பயன்? கையால் தொட்டும், காலால் உதைத்தும் எங்களை நலியவிடாதே. ஒளிபொருந்திய சக்கரத்தைக் கையில் ஏந்திய கடல் நிறக் கண்ணனே… இதயம் கசந்துபோனால், கரும்புக் கட்டியும் இனிக்காது… கசக்கத்தான் செய்யும் என்பதை நீ அறியமாட்டாயா?!

 

522:

முற்றத்தூடு புகுந்துநின்முகங்

காட்டிப்புன்முறு வல்செய்து,

சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக்

கக்கடவையோ கோவிந்தா,

முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற

நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்-

பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப்

பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்? 9

 

முற்றத்தின் வழியாக உள்ளே புகுந்து, உன் அழகிய திருமுகத்தைக் காட்டி, புன்முறுவல் செய்கின்றாய். அப்படிச் செய்து, நாங்கள் கட்டிய சிற்றிலையும், எங்கள் சிந்தையையும் சேர்த்து நீ சிதைக்கின்றாய் கோவிந்தா. நீ இப்படிச் செய்தலும் தகுமோ? உன் ஒரு காலால் இந்த பூமி முழுவதையும் தாவி அளந்தாய். மற்றொரு காலால் விண்ணில் பரமபதம் வரை ஓங்கி அளந்தாய். இப்படி எல்லாம் அளந்த நீ, எங்கள் மெய் தீண்டி, உடலோடு அணைத்துக் கொண்டால், அருகே நின்று பார்ப்பவர்கள் என்னதான் சொல்லமாட்டார்கள்?!

 

523:

சீதைவாயமு தமுண்டாய்.எங்கள்

சிற்றில்நீசிதை யேல். என்று,

வீதிவாய்விளை யாடுமாயர்

சிறுமியர்மழ லைச்சொல்லை,

வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி

புத்தூர்மன்விட்டு சித்தன்றன்,

கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை

வின்றிவைகுந்தம் சேர்வரே. 2 10

 

சீதாதேவியின் வாய் அமுதம் பருகிய பெருமானே! நீ எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே – என்று, வீதியில் விளையாடும் இடைப் பெண்களான அந்த ஆயர் சிறுமியர் மழலைச் சொல் வெளித்தெரியச் சொன்னதாக ஆண்டாள் அருளிச் செய்தாள். வேதம் ஓதி, வைதிகத் தொழில் செய்யும் அந்தணர்கள் வாழும் திருவில்லிபுத்தூர் தலைவரான பெரியாழ்வாரின் மகள் கோதையின் வாயினில் தோன்றிய இந்தத் தமிழ்ப் பாசுரங்களை ஓத வல்லவர்கள், குறைவில்லாமல் வைகுந்தத்தை அடையப் பெறுவார்கள்.

 

Leave a Reply