அறப்பளீஸ்வர சதகம்: உலகில் வீணர்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

வீணர்

வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரை
விரும்புவோர் அவரின் வீணர்!
விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறை
விரகிலோர் அவரின் வீணர்!
நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!
நாடி அவர் மேற்கவி சொல்வார்
நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரே
நரரைச் சுமக்கும் எளியோர்!
தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்
சேரொரு வரத்தும் இன்றிச்
செலவுசெய் வோர் அதிக வீணராம்! வீணனாய்த்
திரியும்எளி யேனை ஆட்கொண்
டாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே

வீணனாகத்திரியும் எளியனான என்னை அடிமையாக ஏற்று, நடனம்இடும்
திருவடித்தாமரையை என் தலை மீது வைத்த தூயவனே! அருமை தேவனே!, மாமனார் வீட்டில் உறைவோரும் வீணராவர், அவரினும் வீண் மொழியாடலை விரும்புவோர் வீணர்,
அவரினும் விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும்
அறிவு இல்லாதவர் வீணர், (அவரினும்) (அகக்) கண்ணைத்தரும் படிப்பில்லாதவரும் வீணரே. அவரினும்
உலகில் கல்லாதவரைத் தேடி அவர்மேற் பாக்களைப் புனைவார் வீணர்,
அவரினும் மக்களைச் சுமக்கும் எளியவர் வீணர், பொருளைத் தேடும் அறிவுஅற்ற பெருவீணரேயான அவரினும், வரக்கூடிய எந்தவரவும் இல்லாமல் செலவுசெய்பவர் பெரிய வீணராவர்.

வரவில்லாமற் செலவு செய்வோர் யாவரினும் இழிந்த வீணர்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply