3. கோழியழைப்பதன்

ஆண்டாள்

 

 

style="text-align: center;">1ஆம் பத்து 3ஆம் திருமொழி

கோழியழைப்பதன்

 

இரண்டாம் பதிகத்தில் கூறியபடி, கண்ணனுடன் ஆன இணைப்பும் பிணைப்பும் தொடர்ந்தது. அதனால், இந்தப் பெண்களுக்கு ஆனந்தம் அதிகரித்தது. அந்த எல்லையற்ற ஆனந்த அனுபவத்தின் காரணத்தால், இவள் உயிர் துறக்கக் கூடுமோ என்று உறவினர்கள் அஞ்சினார்கள். எனவே, கண்ணனையும் இந்தப் பெண்களையும் பிரித்து, நிலவறைகளில் அடைத்து வைத்தனர். ஆனால், அந்தப் பிரிவாற்றாமையாலும் இவர்கள் தங்கள் இன்னுயிரைப் போக்கிக் கொள்ளும் சூழல் உண்டானது. அந்த நிலையைக் கண்ட உறவினர்கள் கண்கலங்கினர். இந்தப் பெண்கள் நல்ல கணவனைப் பெறுவதற்காகச் செய்யக்கூடிய பனி நீராடுதல் எனும் நோன்பைச் செய்யட்டும் என்று எண்ணி, இவர்களை வெளியில் விட்டனர்.

வெளியில் வந்த அந்தப் பெண்கள், கண்ணனோடு சேர்ந்தும் பிரிந்தும் படும் வருத்தங்களைத் தவிர்ப்பதற்காக, கண்ணன் அறியாதபடி ஒரு பொய்கைக்குச் சென்றனர். தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு, விரகதாபம் தணியும்படி அந்தப் பொய்கையில் நீராடினர். அப்போது அங்கு வந்த கண்ணன், இவர்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் இருந்த குருந்த மரத்தில் ஏறி அமர்ந்தான். இவர்களும் குளித்துக் கரையேறியவுடன் ஆடை ஆபரணங்களைக் காணாமல் தவித்தனர். அங்கும் இங்கும் தேடி, ஒருவாறு கண்ணன் குருந்த மரத்தின் மேல் இருக்கக் கண்டனர். அவனிடம் தங்கள் ஆடை ஆபரணங்களைத் தந்துவிடுமாறு கெஞ்சினர்; வாழ்த்து கூறிக் கேட்டனர்; கோபமாகச் சீறியபடி கேட்டனர். பலவிதமாகக் கெஞ்சி அடிபணிந்து கேட்டனர். கடைசியில் மனமிரங்கிய அவனும் அவர்களுக்கு ஆடை ஆபரணங்களைக் கொடுத்து அருளினான். கண்ணனின் இந்தச் செயலை, மூன்றாம் திருமொழியான கோழி அழைப்பதன் முன்னம் என்ற பத்துப் பாசுரங்களால் பாடியருள்கிறாள் ஆண்டாள்.

 

இந்தப் பதிகத்தின் உட்கருத்து… கண்ணன் கவர்ந்த துணிகளை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடும்படி கன்னியர்  கெஞ்சிக் கேட்பது, கண்ணனே நம்மை ஆளவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது, இந்திரியங்கள் நம்மைத் துன்புறுத்துகின்றன, மனதோ நம்மை அடக்கப் பார்க்கிறது. இந்த நிலையில், கண்ணனே… நீதான் நம்மை அடக்கி ஆட்கொள்ள வேண்டும் என்று அந்தக் கன்னியர் பிரார்த்திப்பது இதன் உட்கருத்து.

 

524:

கோழி யழைப்பதன் முன்னம்

குடைந்துநீ ராடுவான் போந்தோம்,

ஆழியஞ் செல்வ னெழுந்தான்

அரவணை மேல்பள்ளி கொண்டாய்,

ஏழைமை யாற்றவும் பட்டோ ம்

இனியென்றும் பொய்கைக்கு வாரோம்,

தோழியும் நானும் தொழுதோம்

துகிலைப் பணித்தரு ளாயே. (2) 1

 

நாங்கள் இந்த அதிகாலைப் பொழுதில், தண்ணீரில் நன்றாக மூழ்கிக் குளிப்பதற்காக, கோழி கூவுவதற்கு முன்னமேயே வந்துவிட்டோ ம். ஆனாலும், உன் எண்ணத்துக்கு மாறாக, ஒற்றைச் சக்கரத்தை உடைய தேரில் பவனி வரும் சூரியன் கீழ்வானில் எழுந்துவிட்டான்.  ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட அழகுப் பெருமானே… உன்னாலே நாங்கள் மிகவும் துன்பப்பட்டோ ம். இனிமேல் என்றைக்கும் இந்தக் குளத்துக்கு நீராட வரமாட்டோ ம்.  தோழியும் நானும் சேர்ந்து உன்னைத் தொழுகின்றோம். தயவுசெய்து, எங்கள் சேலைத் துணிகளைத் தந்தருள வேண்டும்.

 

525:

இதுவென் புகுந்ததிங் கந்தோ.

இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்,

மதுவின் துழாய்முடி மாலே.

மாயனே.எங்க ளமுதே,

விதியின்மை யாலது மாட்டோ ம்

வித்தகப் பிள்ளாய். விரையேல்,

குதிகொண் டரவில் நடித்தாய்.

குருந்திடைக் கூறை பணியாய். 2

 

அடடா… இங்கே நடந்ததுதான் என்னே?! இந்தப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் மாமாயனே! தேன் சொட்டும் துளசி மாலையை மார்பில் அணிந்த திருமாலே. எம் இனிய அமுதே. எங்களுக்கு பாக்கியம் இல்லாமையாலே, நீ விரும்பும் சேர்க்கைக்கு நாங்கள் இசையமாட்டோ ம். வித்தகப் பிள்ளையே… நீ அவசரம் காட்டாதே. காளிங்கன் எனும் நாகத்தின் தலையில் கால் வைத்து நர்த்தனம் செய்த நாயகா. நீ குருந்த மரத்தில் வைத்திருக்கும் எங்கள் சேலைகளைக் கொடுத்து அருள் செய்வாய்.

 

526:

எல்லே யீதென்ன இளமை

எம்மனை மார்காணி லொட்டார்,

பொல்லாங்கீ தென்று கருதாய்

பூங்குருந் தேறி யிருத்தி,

வில்லாலி லங்கை யழித்தாய்.நீ

வேண்டிய தெல்லாம் தருவோம்,

பல்லாரும் காணாமே போவோம்

பட்டைப் பணித்தரு ளாயே. 3

 

அடடே… இது என்ன சிறுபிள்ளைத்தனம்! எங்களின் இந்த நிலையை எங்கள் தாய்மார்கள் கண்டால், எங்களை மறுபடியும் வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். எங்கள் ஆடைகளைப் பறித்துக் கொண்டதைத் தீங்கு என்று எண்ணாமல், பூத்திருந்த குருந்த மரத்தின் மேல் ஏறி நிற்கிறாய். நீ விரும்புவதை நாங்கள் தருவோம். ஊரில் உள்ளோர் காணாதபடிக்கு நாங்கள் திரும்பிச் செல்வோம். எங்கள் பட்டுச் சேலைகளை நீ தந்தருள வேண்டும் கண்ணா.

 

527:

பரக்க விழித்தெங்கும் நோக்கிப்

பலர்குடைந் தாடும் சுனையில்,

அரக்கநில் லாகண்ண நீர்கள்

அலமரு கின்றவா பாராய்,

இரக்கமே லொன்று மிலாதாய்.

இலங்கை யழித்த பிரானே,

குரக்கர சாவ தறிந்தோம்

குருந்திடைக் கூறை பணியாய். 4

 

பலரும் நீராடுகின்ற இந்தப் பொய்கையின் கரையில், நாங்கள் எல்லாத் திசைகளிலும் விழித்துப் பார்த்து மருகுகிறோம். எங்கள் விழிகளில் இருந்து கன்னத்தில் பெருகிக் கவியும் கண்ணீரை அடக்க முடியாமல் தவிக்கிறோம். எதற்காக..? எங்களின் இந்த நிலையைப் பிறர் அறிவார்களோ என்று பயந்து வருந்துகிறோம். ஆனால், எங்களின் நிலையைப் பார்த்தும்கூட உனக்கு எங்கள் மீது இரக்கம் ஏற்படவில்லையோ? குரங்குப் படை கொண்டு இலங்கை அரசை அழித்த பிரானே… நீ குரங்குகளுக்கும் அரசன் ஆனவன் என்பதை நாங்கள் அறிந்தோம். குருந்த மரத்தின் மேல் நீ வைத்திருக்கும் எங்கள் சேலைகளைக் கொடுத்து அருளேன்… கண்ணா!

 

528:

காலைக் கதுவிடு கின்ற

கயலோடு வாளை விரவி,

வேலைப் பிடித்தென்னை மார்கள்

ஓட்டிலென் னவிளை யாட்டோ ,

கோலச்சிற் றாடை பலவுங்

கொண்டுநீ யேறி யிராதே,

கோலங் கரிய பிரானே.

குருந்திடைக் கூறை பணியாய். 5

 

இந்தப் பொய்கையில் நீண்ட நேரம் தவித்திருக்கும் எங்களின் கால்களை, கயல் மீன்களும் வாளை மீன்களும் ஒன்று சேர்ந்து கடிக்கின்றன. ஆடையின்றி இப் பொய்கையினுள்ளே மாட்டிக் கொண்ட எங்களின் இந்தத் துன்பத்தை எங்கள் தமையன்மார்கள் கேள்விப் பட்டால், கைகளில் வேல் ஏந்தி ஓடிவந்து உன்னைத் துரத்துவார்கள். அதன் பிறகு உன் விளையாடல் என்னவாகும்? ஆகவே, எங்களின் அழகிய சிற்றாடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, மரத்தின் மேல் இன்னும் ஏறிச் செல்லாதே! கறுத்த நிறம் கொண்ட கண்ணா..! நீ மரத்தில் இருந்து கீழிறங்கி, குருந்த மரத்தில் இருக்கும் எங்கள் சேலைகளைக் கொடுத்து விடு.

 

529:

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்

தாள்களெங் காலைக் கதுவ,

விடத்தே ளெறிந்தாலே போல

வேதனை யற்றவும் பட்டோ ம்

குடத்தை யெடுத்தேற விட்டுக்

கூத்தாட வல்லஎங் கோவே,

படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள்

பட்டைப் பணித்தரு ளாயே. 6

 

அகன்ற இந்தத் தாமரைப் பொய்கையில் உள்ள தாமரைத் தண்டுகள், எங்களின் கால்களைக் கடிக்கின்றன. அது, கொடிய விஷமுள்ள தேள்கள் காலில் கொட்டுவதைப் போன்ற வேதனையைத் தருகிறது. குடக்கூத்து ஆடுவதில் வல்லவனான எங்கள் அரசே! நீ செய்யும் இந்தத் தீங்குறும்புகளை விட்டுவிட்டு, எங்களுடைய பட்டாடைகளை திரும்பிக் கொடுத்து அருள் செய்வாய்.

 

530:

நீரிலே நின்றயர்க் கின்றோம்

நீதியல் லாதன செய்தாய்,

ஊரகம் சாலவும் சேய்த்தால்

ஊழியெல் லாமுணர் வானே,

ஆர்வ முனக்கே யுடையோம்

அம்மனை மார்காணி லொட்டார்,

போர விடாயெங்கள் பட்டைப்

பூங்குருந் தேறியி ராதே. 7

 

நாங்கள் இந்தத் தண்ணீரில் நின்றே தளர்ந்துவிட்டோ ம். நியாயம் இல்லாதவற்றைச் செய்யும் உன்னிடம் இருந்து தப்பி ஓடவும் வழியில்லை. எங்கள் ஊரும் வீடும் தொலைவில் உள்ளன. ஊழிக்காலத்தில் உலகங்களை எல்லாம் காக்கும் உணர்வுடையவனே! நீ எங்களைத் துன்புறுத்தினாலும்கூட, நாங்கள் உன் மீது மிகவும் அன்பு கொண்டுள்ளோம். உன்னோடு நாங்கள் சேர்ந்திருப்பதை எங்கள் தாய்மார்கள் அறிந்தால், நிச்சயமாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள். பூங்குருந்து மரத்தில் ஏறி தொல்லைகள் செய்யாதே… எங்கள் பட்டாடைகளைத் தந்துவிடு.

 

531:

மாமிமார் மக்களே யல்லோம்

மற்றுமிங் கெல்லாரும் போந்தார்,

தூமலர்க் கண்கள் வளரத்

தொல்லையி ராத்துயில் வானே,

சேமமே லன்றிது சாலச்

சிக்கென நாமிது சொன்னோம்,

கோமள ஆயர்கொ ழுந்தே.

குருந்திடைக் கூறை பணியாய். 8

 

ஆயர்பாடியில் உள்ள மாமிமார்களும், தாய்மார்களும் மற்றவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். முன்னிரவெல்லாம் கொடுமையான வம்புகளைச் செய்துவிட்டு, பிறகு பின்னிரவில் தூங்கி விழித்த பூப்போன்ற கண்களை உடைய கண்ணா..! நீ செய்யும் தீமையான குறும்புகள், தகுதி அற்றவை. நாங்கள் உண்மையாக, உறுதியுடன் கூறுகின்றோம்… இடையர்களின் தலைவனான இளங்கொழுந்தே! குருந்த மரத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளை எடுத்துத் தந்துவிடு…

 

532:

கஞ்சன் வலைவைத்த வன்று

காரிரு ளெல்லில் பிழைத்து,

நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்

நின்றஇக் கன்னிய ரோமை,

அஞ்ச உரப்பாள் அசோதை

ஆணாட விட்டிட் டிருக்கும்,

வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட

மசிமையி லீ.கூறை தாராய். 9

 

உன்னை அழிப்பதற்காக கம்சன் அன்று ஒருநாள் கொடிய சதிவலையை விரித்தான். இருண்ட இரவில் அந்த சதியில் இருந்து பிழைத்தாய். இன்றோ, தண்ணீரில் நின்று கொண்டு கண்ணீர் விட்டும் கதறும் கன்னியரான எங்கள் நெஞ்சம் துக்கம் அடையும்படி செய்கின்றாய். யசோதை அன்னையோ, நீ பயப்படும்படி உன்னை அதட்டி வைக்காமல், தீங்குறும்புகள் செய்யும்படியே உன்னை வளர்த்துவிட்டாள். வஞ்சனை செய்து உன்னைக் கொல்லவந்த பூதனைப் பேயின் பாலை அருந்துவதுபோல் அவள் உயிர் பறித்தவனே… வெட்கம் அற்றவனே… எங்கள் சேலைகளைத் தந்துவிடு.

 

533:

கன்னிய ரோடெங்கள் நம்பி

கரிய பிரான்விளை யாட்டை,

பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த

புதுவையர் கோன்பட்டன் கோதை,

இன்னிசை யால்சொன்ன மாலை

ஈரைந்தும் வல்லவர் தாம்போய்,

மன்னிய மாதவ னோடு

வைகுந்தம் புக்கிருப் பாரே. 2 10

 

கோபியர்களுடன் எங்கள் தலைவனான கரியபிரான் கண்ணன் செய்த விளையாட்டை, கோதை நாச்சியார் இன் தமிழ் இசைப் பாடல்களாகப் பாடி வைத்தாள். பொன் பூசிய மாடங்கள் சூழ்ந்த தென்புதுவை நகரான திருவில்லிபுத்தூர் நகர் தலைவரான பட்டர்பிரானின் மகளான கோதை அருளிய இந்தப் பத்துப்பாடல்களையும் கற்கவல்லவர்கள், வைகுந்தம் புகுந்து மாதவனுடன் கூடியிருப்பார்கள்.

 

Leave a Reply