ஆண்டாள் சரிதம்
அது திரேதா யுகம். மிதிலை நகரை சிறப்புற ஆண்டு வந்தான் ஜனக மகாராஜன். கர்மத்தாலேயே சித்தியடைந்தவன் என்று ஜனக மன்னனைச் சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட ஜனக மன்னன், யாகசாலை ஒன்று அமைப்பதற்காக கலப்பை கொண்டு பூமியை உழுதான். யாகசாலைக்காக நிலமகளைக் கீறி வந்த அப்போது, அந்தக் கலப்பையின் படைச் சாலிலே ஸ்ரீதேவியின் அம்சமாக ஒரு மகள் தோன்றினாள். அவளை ஜனகன் தன் மகளாகப் பாவித்து, சீதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். மணப் பருவம் எய்திய அம்மகளை அயோத்தி மன்னன் தசரதனின் குமாரனாக அவதாரம் செய்த திருமகள்நாதன் ராமபிரான் மணந்து கொண்டான். மனைவியைக் காரணமாகக் கொண்டு புவியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தான். ஸ்ரீதேவி புவியில் தோன்றி, புவியிலுள்ள மறச் செய்திகள் மறையவும், அறச் செயல்கள் தழைத்து உலகம் உய்யவும் வேண்டியே, திருமாலின் அவதாரமாகிய ராமனுக்குத் துணைவியானாள்.
அதேபோல் இது கலி யுகம். தென்பாண்டி நாட்டைச் சேர்ந்த வில்லிபுத்தூரில் சிறப்புறத் திகழ்ந்துவந்தார் பட்டர்பிரான். அவருக்கு பெரியாழ்வார் என்றும் பெயருண்டு. பக்தியாலே சித்தியடைந்தவர் என்ற சிறப்பு அவருக்கு உண்டு. அவர் அங்கே கோயில் கொண்டிலங்கும் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலையும் பாமாலையும் ஒருங்கே சமர்ப்பித்து பக்தி யாகம் செய்து வருபவர். அவருடைய வேள்விச் சாலை, அவர் அமைத்திருந்த நந்தவனம்தான். அந்த நந்தவனத்தில் ஒரு நாள் அவர் துளசி தளங்களைப் பறித்தவாறே வருகையில், அதன் அடியில் ஒரு குழந்தை மலர்ந்து சிரிப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை எடுத்து தன் மகள் போலே வளர்த்து வந்தார். கோதை என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. பூமாதேவியே இவ்வுலக மக்களை நன்னெறிப்படுத்துவதற்காக சீதையைப் போலே மீண்டும் கோதையாக அவதரித்தாள். அவளுடைய அந்தரங்க பக்தியெல்லாம் அந்த அரங்கன் மேலேயே இருந்தது.
இப்படி ஆண்டாள் பிறந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்டது, ஆடிப் பூர நன்னாள். இதனாலேயே அந்த ஆடிப்பூரம் மிகுந்த சிறப்பும் சீர்மையும் பெற்றது. இதை மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் இப்படிச் சொல்கிறார̷் 0;.
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்கு
உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.
– என்றும்,
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.
– என்றும் பாடிப் போற்றுகிறார்.
இப்படி அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாக அவதரித்த ஆண்டாள், சிறுவயது முதலே, தம் தந்தையாரான பெரியாழ்வாரிடம் இருந்து பக்திச் சிறப்பையும் கவிச் சிறப்பையும் கற்று வளர்ந்தார். அதிலே கிருஷ்ணனைப் பற்றியும், அவனுடைய லீலைகளைப் பற்றியும் அவர் சொல்லும் கதைகள் அவளுடைய உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. அதில் கிருஷ்ணனின் பால லீலைகள் அவளுடைய மனத்தைக் கவர்ந்தன. எந்நேரமும் குழந்தை கிருஷ்ணன் தன்னிடம் விளையாட வருவது போலவும், அவன் தன்னுடனேயே இருப்பது போலவும் அவள் எண்ணிக் கொண்டாள். சிறுமியான கோதைக்கு, அந்தக் கண்ணன் அவள் உள்ளம் திருடிய கள்வனாகத் தெரிந்தான்.
தந்தை முதலியோர் கண்டு வியக்கும்படி, இளமை முதலே எம்பெருமான் பக்கலில் பக்திப் பெருவேட்கை கொண்டிருந்தாள் கோதை. சிறுவயது முதல் தன்னுடன் மனத்தால் விளையாடி எப்போதும் தன்னுடனேயே இருந்து வந்த அந்தக் கண்ணனையே தாம் மணம் செய்துகொள்வதாகக் கருதினாள். அப்படி, அவனது பெருமைகளையே எப்போதும் சிந்தித்து, துதித்து வாழ்ந்து வந்தாள் கோதை நாச்சியார்.