e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-33.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 33
அவ அசடாவே இருக்கட்டும்!
– வேதா டி. ஸ்ரீதரன் –
பொதுவாகவே எம்எஸ்ஸைப் பற்றித் தெரிந்தவர்கள் அனைவரும் அவரைத் தாயாகவே போற்றுவதுண்டு என்று அண்ணா சொல்லி இருக்கிறார். அண்ணாவுக்கும் அவர் அப்படியே.
எம்எஸ்ஸிடம் ஏதாவது பொது சேவை என்று பொய்க் காரணம் சொல்லி அவரை ஏமாற்றி விட முடியும். பெரும்பாலான கச்சேரிகளில் கிடைக்கும் பணம் எம்எஸ்ஸுக்கும் போகாது, பொது சேவைக்கும் போகாது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களே எடுத்துக் கொள்வார்கள்.
இதேபோல ஒருவர் எம்எஸ்ஸை வைத்து இசைக் கச்சேரி நடத்த வேண்டும் என்று விரும்பினார். அவர் அண்ணாவை நேரில் சந்தித்தார். எம்எஸ்ஸிடம் சிபாரிசு பண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்ணாவுக்கு அதில் விருப்பம் இல்லை. அவரிடமிருந்து தப்பிப்பதற்காக, எம்எஸ் ஊரில் இல்லை, ஹைதராபாத் போயிருக்கிறார், வருவதற்குப் பத்து நாள் ஆகும் என்று அண்ணா அவரிடம் பொய் சொல்லி விட்டார்.
அவர் கிளம்பிப் போனதும், இந்த நபர் நேரே எம்எஸ் வீட்டுக்குப் போய் விசாரித்தால் என்ன செய்வது என்ற சந்தேகம் அண்ணாவுக்கு ஏற்பட்டது. அண்ணா சொன்ன பொய் அம்பலத்துக்கு வந்து விடும். அது பெரிய மானப் பிரச்சினையாக ஆகி விடும் என்ற அச்சம் வந்தது. எனவே அவர் எம்எஸ் வீட்டைத் தொடர்பு கொண்டு விஷயத்தைத் தெரியப்படுத்த விரும்பினார். உடனடியாக எம்எஸ் வீட்டுக்கு ஃபோன் பண்ணினார்.
அங்கிருந்து பதில் கிடைத்தது: எம்எஸ் ஊரில் இல்லை, ஹைதராபாத் போயிருக்கிறார், வருவதற்குப் பத்து நாள் ஆகும்.
அனேகமாக, அண்ணா தனது வாழ்க்கையில் சொன்ன பொய் இது ஒன்று தான். கடைசியில், அந்தப் பொய்யும் உண்மை ஆகி விட்டது.
சதாசிவம் மறைவுக்குப் பின்னர் தான் எம்எஸ்ஸுக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. அப்துல் கலாம் தான் அப்போதைய ஜனாதிபதி. அவர் எம்எஸ் ரசிகர். தானே எம்எஸ்ஸுக்கு ஃபோன் பண்ணி அவருக்கு பாரத ரத்னா செய்தியைத் தெரிவிக்க விரும்பினார். போனில் அவர் விஷயத்தைத் தெரிவித்ததுமே, எம்எஸ், ‘‘ஐயோ, மாமா இல்லியே! இருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்’’ என்று சொன்னாராம். உடனேயே பேரன் ஒருவரிடம் ரிசீவரைக் கொடுத்து விட்டு உள்ளே போய் விட்டாராம்.
இது மரியாதைக் குறைச்சலான விஷயம் என்று எனக்குத் தோன்றியது. ஜனாதிபதி தொலைபேசியில் பேசுகிறார், எம்எஸ் அவரைத் தவிர்க்கிறார் என்றால் அதற்கு என்ன காரணம்? இதை அண்ணா என்னிடம் சொன்ன போது எனக்கு இந்தக் கேள்வி தான் பெரிதாக எழுந்தது.
அதற்கு அண்ணா சொன்ன பதில் ‘‘இது தான் எம்எஸ். பிற குடும்பத்து ஆடவர்களுடன் தனியாகப் பேசிக் கொண்டிருப்பதை அவர் தவிர்த்து விடுவார்’’ என்று தெரிவித்தார்.
கர்நாடக சங்கீத மேதையாகத் தான் உலகம் அவரை அறிந்திருக்கிறது. ஆனால், சங்கீத மேன்மையையும் விட, அவரது பெண்மை இயல்புகளும், பணிவும், விருந்தோம்பலும் உயர்வானவை என்று அண்ணா சொல்வதுண்டு.
எம்எஸ் சரியான அசடு, அவரை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் என்று ஓர் அன்பர் பெரியவாளிடம் போய் முறையிட்டாராம். எம்எஸ்ஸுக்குப் பெரியவா புத்திமதி சொல்லித் ‘‘திருத்த’’ வேண்டும் என்பது அந்த மனிதரின் பிரார்த்தனை.
பெரியவா அவரிடம், ‘‘அவள் அசடாகவே இருக்கட்டும்!’’ என்று அகமும் முகமும் மலர்ந்து சொன்னாராம்.
எம்எஸ்ஸும் கடைசி வரையில் இவர்கள் எல்லோர் பார்வையிலும் ‘‘அசடாகவே’’ இருந்தார்.
அண்ணா என் உடைமைப் பொருள் (33): அவ அசடாவே இருக்கட்டும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.