1. தையொரு திங்கள்

ஆண்டாள்

ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த

 

நாச்சியார் திருமொழி

 

1 ஆந் திருமொழி - தையொரு திங்கள்

 

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

 

திருப்பாவையில், கண்ணனே உபாயம் என்றும், அவன் மனத்துக்குப் பிடித்தமான அடிமை செய்வதே தாம் வேண்டும் பறை என்றும், தன் உறுதியைக் கூறினாள் ஆண்டாள். ஆனாலும், தான் விரும்பியபடி அவளால் கண்ணனைப் பெற முடியவில்லை. ஆகவே அவனைப் பெற்றே தீரவேண்டும் என்ற வைராக்கிய ஆசை அவளுக்குள் ஏற்பட்டது. அதனால் சித்தம் கலங்கி, பிரிந்தவர்களை ஒன்றுசேர்க்கும் இயல்புடைய மன்மதனாகிய காமதேவனிடம், ஓஅனங்கதேவா! வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியேஔ, என்று வேண்டுகிறாள̷் 0; இது, நாச்சியார் திருமொழியின் முதல் பத்து பாசுரங்களான தையொரு திங்கள் பாசுரங்களில் காணப்படுவது.

504:

தையொரு திங்களும் தரைவிளக்கித்

தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*

ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து

அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*

உய்யவும் ஆங்கொலோ? என்று சொல்லி

உன்னையும் உம்பியையும் தொழுதேன்*

வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை

வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! 1

தை மாதம் முழுவதும் தரையினைத் தூய்மையாக்கி, குளிர்ந்த வட்ட வடிவக் கோலம் இட்டு அலங்கரித்தேன். மாசி மாதத்தின் முதல் பருவமான வளர்பிறைக் காலத்தில், வெண்பட்டு மணல் தூவி, தெருவினையும் அணிசெய்தேன். மன்மதனே! உன்னையும் உன் தம்பி காமனையும் வணங்கி, ஒநான் உய்வு பெறுவேனோ? என்று சொல்லி நோன்பு நோற்றேன். எங்கும் பிரகாசிக்கும்படி வெம்மையான தழல்நெருப்பை உமிழும் சக்கரத்தைக் கையில் கொண்ட அந்தத் திருமலைநாதன் வேங்கடவனுக்கு அந்தரங்கக் கைங்கரியம் செய்யும்படி என்னை விதிக்கவேண்டும்.

505:

வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து

வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து,*

முள்ளும் இல்லாச் சுள்ளி எரிமடுத்து

முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா,*

கள் அவிழ் பூங் கணை தொடுத்துக் கொண்டு

கடல்வண்ணன் என்பதோர் பேர் எழுதி,*

புள்ளினை வாய் பிளந்தான்என்பதோர்

இலக்கினில் புக என்னை எய்கிற்றியே. 2

வெள்ளையான பட்டுப்போன்ற மெல்லிய மணலை தெருவில் நிரப்பி, கண்ணன் வரும் வழியை மென்மையானதாக ஆக்கி வைத்தேன். பிறகு, கீழ்வானம் வெளுப்பதற்கு முன்பே நீர்த்துறைக்குச் சென்று நீராடித் தூய்மையானேன். முட்கள் இல்லாத சுள்ளிகளைப் பொறுக்கி எடுத்து, அதனை நெருப்பில் இட்டு வேள்வி செய்தேன்… காமதேவனே, உன் உதவியை எதிர்பார்த்து நோன்பு நோற்கிறேன். கடல்வண்ணனாகிய கண்ணனின் பேர் எழுதி, புள்ளின்வாய் பிளந்த அவனிடத்தில் நான் சேரும்படி இலக்காக வைத்து, தேன் ஒழுகும் பூக்களால் ஆன அம்பினைத் தொடுக்க வேண்டும்.

506:

மத்தநன் நறுமலர் முருக்கமலர்

கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி,

தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து

வாசகத் தழித்துன்னை வைதிடாமே,

கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு

கோவிந்த னென்பதோர் பேரேழுதி,

வித்தகன் வேங்கட வாணனென்னும்

விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3

காலை, பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், ஊமத்தம்பூவையும் முருக்கம்பூவையும் உன் திருவடியில் போட்டு வணங்கி நோன்பு நோற்றேன். தத்துவம் இல்லாதவன்… அதாவது நீ பொய்யன் என்று நான் நெஞ்சு கொதித்து, என் வாயினால் உன்னை வையாதபடி நீயே பார்த்துக் கொள். கொத்துக் கொத்தாகப் பூக்களை அடக்கிய மலர்க்கணையைத் தொடுத்து, கோவிந்தன் எனும் பெயரை இதயத்தில் எழுதிக்கொண்டு, வியக்கத்தக்க வித்தகனாகிய வேங்கடவாணன் ஆகிய விளக்கினில் நான் புகும்படி நீயே செய்யவேண்டும்.

507:

சுவரில் புராணநின் பேரேழுதிச்

சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,

கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்

காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,

அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4

புராணப் பெருமை உடைய மன்மதனே… சுவர்களில் உன் பெயர் எழுதி வைத்தேன். சுறாமீன் வரையப்பட்ட துணிக் கொடிகளையும், குதிரைகளையும், சாமரங்கள் ஏந்திய பெண்களையும் கரும்பு வில்லினையும் உனக்கு காணிக்கையாகத் தருகின்றேன்… நன்றாகப் பார் மன்மதனே! சின்னஞ்சிறு பிராயம் முதலே ஒருபடிப்பட்டு எழுந்த என் தடமுலைகள், துவாரகா நாதனான அந்தக் கண்ணனுகே என்று சங்கல்பம் செய்து தொழுதேன். மன்மதனே… விரைவில் நீ என்னை அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

508:

வானிடை வாழுமவ் வானவர்க்கு

மறையவர் வேள்வியில் வகுத்தஅவி,

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,

ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்

வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5

ஒரு வேள்வியை தவசீலர்கள் செய்யும்போது, அந்த யாகத் தீயில் இடுவதற்கான அன்னம் முதலிய ஆகுதிப் பொருள்களை மிகத் தூய்மையாக வைத்திருப்பர். இந்த ஆகுதியானது வானத்தில் வாழும் தேவர்களுக்கு வழங்குவதற்காகவே வைக்கப்பட்டது. அதைப்போய், கானகத்தில் வசிக்கும் நரி அந்த வேள்விச் சாலையில் புகுந்து, மோப்பம் பிடித்து உண்ணுவதும் தகுமோ? தகாது. அதுபோல், பாஞ்சஜன்ய சங்கினையும், சுதர்ஸனச் சக்கரத்தையும் தன் மேனியில் கொண்ட உத்தமனான அந்தத் திருமாலுக்கு என்றே இருப்பவை என் தடமுலைகள். அவை, இந்த உலகத்தில் வாழும் ஏதோ ஒரு சாதாரண மானிடவனுக்கு உடைமையாகும் என்ற பேச்சு எழுந்தால், நான் உயிர்வாழ மாட்டேன்… மன்மதனே!

509:

உருவுடை யாரிளை யார்கள்நல்லார்

ஓத்துவல் லார்களைக் கொண்டு வைகல்

தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்

திருந்தவே நோற்கின்றேன் காமதேவா,

கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்

கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத்

திருவுடை முகத்தினில் திருக்கண்களால்

திருந்தவே நோக்கெனக் கருள்கண்டாய். 6

காம நூல்களில் புலமை கொண்ட அழகிய இளையவர்களான நல்லவர்களை முன்னிட்டுக் கொண்டு, நீ வருகின்ற தெரு வழியே தினமும் எதிரே சென்று, பங்குனிப் பண்டிகைநாளுக்கான நோன்பினை திருத்தமுடன் செய்கின்றேன் காமதேவனே! கரிய மேகங்களைப் போன்ற நிறம் கொண்டவன், காயாம்பூ வண்ணன், கருவிளைப் பூ வண்ணனாகிய அவனின் தாமரை மலரைப் போன்ற அழகிய திருமுகத்தில் இருக்கும் திருக்கண்களால் என்னை அவன் ஓரவிழிப் பார்வை பார்க்க, காமதேவனே… நீயே அருள் செய்ய வேண்டும்!

510:

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்

கட்டி யரிசி யவலமைத்து,

வாயுடை மறையவர் மந்திரத்தால்

மன்மதனே உன்னை வணங்குகின்றேன்,

தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்

திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்,

சாயுடை வயிறுமென் தடமுலையும்

தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7

பசுங்காய் உடைய நெல்லுடன் கரும்பும் கொண்டு, கரும்புக் கட்டி, அரிசி அவல் ஆகியவற்றைச் சேர்த்துப் படைக்கிறேன்… காம நூல்களில் புலமை கொண்ட அந்தணர்கள் மந்திரம் ஓதுவிக்க, அவற்றால் உன்னை வணங்குகிறேன் மன்மதனே! மூவுலகையும் தன் அடியால் முன்னர் அளந்தவனான அந்த வாமனப் பெருமான், தன் திருக்கரங்களால் என்னையும் ஒளிபொருந்திய என் வயிறையும் தட முலைகளையும் தீண்டும் வண்ணம் அருள்புரி. அதன் மூலம், இந்த உலகில் நெடுங்காலம் நிலைத்திருக்கும் புகழைத் தருவாய்.

511:

மாசுடை யுடம்பொடு தலையுலறி

வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு,

தேசுடை திறலுடைக் காமதேவா.

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,

பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்

பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்

கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்

என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8

அழுக்கு ஏறிய உடலுடன், தலை மயிர் வறண்டு, வாய் வெளுத்து, ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு நோன்பினை நோற்கின்றேன். ஒளி பொருந்திய காமதேவனே, இப்படி நோன்பு நோற்கும் என்னுடைய நிலையை நன்றாகப் பார்த்துக் கொள். நான் இப்படி தளர்ந்திருந்து நோன்பு நோற்றாலும், நான் பேசுவது ஒன்றும் இங்கு உண்டு! அது, எம்பெருமான் இந்தப் பேதைப் பெண்மையை தலைவியாகக் கொள்ளும் வண்ணம், கேசவ நம்பியான அவனின் திருவடி பிடித்து பணி புரியும் பெரும் பேறினை அருள்வாய், என்பதுதான்!

512:

தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்

தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,

பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே

பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,

அழுதழு தலமந்தம் மாவழங்க

ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய்,

உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து

ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9

மூன்று பொழுதுகளும் என் மனத்தால் உன் அடியினை வணங்கினேன். தூய்மையான மலர்களை உன் அடிகளில் தூவித் தொழுது போற்றுகின்றேன். எந்தவிதமான குற்றமும் இன்றி, பாற்கடல் வண்ணன் பரந்தாமனுக்கே பணி செய்து வாழவேண்டும் அப்படி என்னால் வாழப் பெறாவிட்டால், அழுது அழுது மனம் கலங்கி, அம்மா என்று அரற்றும்படி ஆகிவிடும். இந்தப் பாவமும் உன்னையே சேரும். ஏர் பூட்டி உழும் காளையை நுகத்தடியால் தள்ளி, தீனி கொடுக்காமல் விலக்கிவிட்டால் அதன் நிலை எப்படி ஊட்டம் இல்லாது மெலிந்து போகுமோ என் நிலையும் அப்படி ஆகும். எனவே, மன்மதனே எனக்கு உதவி செய்வாய்.

513:

கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்

கழலிணை பணிந்தங்கோர் கரியலற,

மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த

மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,

பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்

புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,

விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்

விண்ணவர் கோனடி நண்ணுவரே. (2) 10

கண்ணனை அடைவதற்கான உபாயமாக, கரும்புவில்லும் மலர்க் கணையும் கொண்ட காமதேவனின் கழல் இணை அடிகளில் வணங்கினாள் ஆண்டாள். குவாலய பீட யானை தன் துதிக்கை தூக்கி அலறும்படி அதன் கொம்பை ஒடித்தவனும், பகாசுரப் பறவை அலறிவிழும்படி அதன் வாயைப் பிளந்தவனுமாகிய மணிவண்ணனுடன் தன்னைச் சேர்த்து வைக்க்குமாறு வேண்டினாள் ஆண்டாள். மலை போன்று பொலிவுள்ள மாட மாளிகைகள் உள்ள புதுவை நகர்க்கோன் பெரியாழ்வாரின் மகளான இந்த கோதை அருளிய தமிழ் மாலையைப் பாட வல்லவர்கள், விண்ணவர் தலைவனான அந்தத் திருமாலின் அடியினை அடைவார்கள்.

Leave a Reply