ஆலய அமைப்பு
அழகிய கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம்! சிறந்த சுதை வேலைப்பாடுகள் கொண்ட விமானம்! இதன் முன்பகுதியில் ஓர் எழிலான மண்டபம் உள்ளது. இதன் கிழக்கில் பதினாறு கால் மண்டபமும் இருக்கின்றது. சிவபெருமான் சந்நிதியைச் சுற்றி மூன்று திருச்சுற்றுகளும் உள்ளன.
கோயிலைச் சுற்றி அரணாக அகழிகளும், நெடிய மதிற்சுவர்களும் உள்ளன.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் முனீஸ்வரர் சந்நிதி உள்ளது. அடுத்து அகன்ற பிரகாரமும், மண்டபமும், வடக்கு நோக்கி வேணு புஜாம்பிகை சந்நிதியும், அருகே காளியம்மன் சந்நிதியும், எதிரே கொடி மரமும், அதன் கீழ் பிள்ளையார் சந்நிதியும் உள்ளன. கொடிமரத்துக்கு முன்பு ஈசனை நோக்கி நந்திகேஸ்வரர் உள்ளார்.
இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் “பசுபதீஸ்வரர்’ சந்நிதி உள்ளது. இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் சுப்ரமணியர் மற்றும் உற்சவ கல்யாண சுந்தரர் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டாவது சுற்றில் நால்வர், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சட்ட நாதர், சுப்ரமணியர், சரஸ்வதி, இலக்குமி, அன்னபூரணி, நடராசர், சண்டிகேசுவரர் ஆகியோரின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.
பைரவர் மற்றும் நவக்கிரக மூர்த்திகள் இங்கு ஒரே வரிசையில் அமர்ந்துள்ளது அற்புதக் காட்சியாகும்.
கருவறையை ஒட்டிய அர்த்தமண்டபம், கர்ப்பகிரகத்தின் அளவைப்போல் மூன்று பங்கு உடையதாய் இருக்கின்றது; அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடைய கருங்கல் தூண்களுடனும் மேற்புறத்தில் வண்ண ஓவியங்களுடனும் அமைந்துள்ளது.
மகாமண்டபம் 70 அடி நீளமும் 3 6 அடி அகலமும் உடையது. இதில் செப்புத் தகடுகளால் வேயப்பட்ட தல வரலாற்றினை காண்கிறோம். அருகே சிற்பங்களுடன் கூடிய கொடிமரமும் இருக்கின்றது. இத்தலத்தின் கிழக்கே சூரிய புஷ்கரணியும், மேற்கே வாலி பிரகாரம் தீர்த்தமும், வடகிழக்கே தேவதீர்த்தமும் உள்ளன.
நீண்டது பகல் பொழுது!
ஒரு சந்தர்பத்தில் அன்னை பார்வதிக்கு பந்து விளையாட வேண்டுமென ஆசை ஏற்பட்டது. அதை சிவனிடம் கூறினாள். சிவனோ, நான்கு வேதங்களையே பந்துகளாக்கி, அம்மையிடம் தந்தார். அம்மையோ தன் தோழியர்களுடன் ஒரு நாள் மாலை வேளையில் பந்தாடத் தொடங்கினாள். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்ததும், விளையாட்டிற்கு இடையூறு வந்துவிடுமோ என்றெண்ணிய சூரியன் மறையாது நீண்ட நேரம் நிலைத்திருக்க, பகல்பொழுது நீண்டு கொண்டே போயிற்று.
உலகங்கள் சோர்ந்தன. உலக இயக்கத்திற்கு நேர்ந்த தடையை விலக்கச் சென்ற நாரதரையும், பின்பு நேரில் சென்ற சிவபெருமானையும் அன்னையார் கவனிக்கவில்லை. தன்னைக் கவனியாது இருந்த பார்வதி மேல் சினம் கொண்டார் சிவன். பந்தை அவர் உதைக்க, அது மண்ணுலகிலிருந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வந்து விழுந்தது. தன் தவறை உணர்ந்து பார்வதி சிவனிடம் மன்னிப்பு கேட்க, இறைவனோ தேவியை, “பசுவாகக் கடவது’ எனச் சபித்தார்.
இறைவனின் ஆணைப்படி உமை பசு உருவம் கொண்டாள். அவளது சகோதரன் கேசவன், மாட்டிடையனாகப் பின் தொடர்ந்தார். இருவரும் பூவுலகம் வந்தனர். பந்து வந்து வீழ்ந்த கொன்றைக் காட்டில் சரக்கொன்றை மர நிழலில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள் பார்வதி.
கேசவனும், பசு உருவில் இருந்த உமையும் கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். முனிவரின் பூஜைக்கு பால் குறைந்து போக, சுயம்பு மூர்த்தியின் மீது பசு பாலைச் சொரிவதைக் கண்ட கேசவன், பசுவைக் கோலால் அடித்தார். அப்போது பசு தள்ளியதில் ஒரு காலின் குளம்பு, சுயம்பு லிங்கத்தின் மீது பட்டது. உடனே தேவி, தன் சுய உருவம் அடைந்தாள். கேசவன் மானிட வடிவம் நீங்கி, ஆதிகேசவப் பெருமாள் ஆகி தென்புறம் திருக்கோயில் கொண்டார்.
தொடங்கியது தவம்
அன்னை இறைவனை அடைய வடக்கு நோக்கித் தவமிருந்தாள். இறைவனும் தவத்தினை ஏற்றார். இங்கு இறைவன் இறைவியை மணந்து அழகுமிகு கல்யாண சுந்தரராக காட்சி அளிக்கிறார். பந்தணைந்த சுவடும், பசு மிதித்ததால் உண்டான குளம்புச் சுவடும் சுயம்பு லிங்க மூர்த்தியான பசுபதீஸ்வரரின் மேல் இருப்பதை இன்றும் இங்கு காணலாம்.
இயற்கையைப் போற்றுவோம்!
சூரியனையே தன் இரு கண்களில் ஒன்றாக உடையவள் தேவி. அவளுடைய அருள் விளையாட்டுக்கு சூரிய அஸ்தமனமோ, உதயமோ ஒரு தடையில்லை. பின் ஏன் இப்படி ஓர் வரலாறு? “இயற்கைக்கு மாறாக எதைச் செய்தாலும், அது மனித குலத்தைப் பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்’ என்ற அறிவியல் உண்மையை, பந்தநல்லூர் தல புராணம் வாயிலாக அன்றே அறிவித்துவிட்டான் ஆண்டவன். நாம்தான் இன்று வரை அந்த அறிவுரையைப் பின்பற்றாது அல்லல்படுகின்றோம். நாம் இயற்கையைப் போற்றும் ஞானம் பெற, பந்தநல்லூர் பரமசிவமே வழி காட்டட்டும்.
இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும், நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
இத்தலத்திற்கு செல்ல கும்பகோணம், குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரருக்கும், அன்னைக்கும் அர்ச்சனையும்}சிறப்பு அபிஷேகமும் செய்து வழிபட்டால் திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்பனந்தாள் -மணல்மேடு பேருந்து வழித் தடத்தில், திருப்பனந்தாளிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது பந்த நல்லூர் என்ற இத்தலம்
News: https://www.dinamani.com/edition/story.aspx?artid=321566