தட்சன், தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான். சிவபெருமானைத் தவிர அனைத்து தேவதைகளையும் அழைத்து யாகத்தை நடத்தினான். இந்த யாகத்தில் கலந்துகொண்டதால், சூரியனுக்கு தண்டனை கிடைத்தது. தன் தவறுக்கு பரிகாரம் தேட முற்பட்ட சூரியன், வன்னி மந்தார வனத்தில் தவமிருந்தார். சூரியன் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவர் பாவம் போக்க அருளினார். தனது ஒளிக்கிரணங்கள் விநாயகப் பெருமான் மீது பட்டு, தான் வணங்க அதை ஏற்குமாறு கோரினார். அவ்வாறே அருளினார் விநாயகர். அதன்படி, தட்சிணாயன உத்தராயன காலங்களில் தெற்கு மற்றும் வடக்குப் புறமாக இவர் மீது சூரிய ஒளி படுகிறது. இதனால் இவருக்கு வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தல புராணம்.
மேலும், இலங்கையில் சிறையிருந்த சீதையை மீட்கச் செல்லும் வழியில், ராமபிரான் இங்குள்ள வெயிலுகந்த விநாயகரை வணங்கியதாகவும், அதன் பிறகு நடந்த போரில் பல விக்னங்களைக் களைந்து வெற்றி கிட்டியதாகவும் சொல்வர்.
இந்த விநாயகப் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்குப் பகுதியிலும், உத்தராயன காலங்களில் வடக்குப் பக்கமாகவும் சூரிய வெளிச்சம் படும். இது ஓர் அதிசய நிகழ்வு. உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கும் சித்தி புத்தி சக்திகளுக்கும் நடக்கும் திருக்கல்யாணத்தின்போது, பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, தேங்காய், மஞ்சள், குங்குமம் மற்றும் கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்படும். துயர் தீர்க்கும் விநாயகப் பெருமானாகவே பக்தர்கள் இவரைப் போற்றி வணங்குகின்றனர். திருமணத்தடை, குழந்தைப் பேறு, கல்வியில் சிறந்து விளங்க என்று இவரை பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
இங்கே விநாயக சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும். உப்பூர் சத்திரம் எனும் இந்த கிராமம், தொண்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் வழியாக காரைக்குடி செல்லும் பேருந்துகள் மூலமும் இந்தக் கோவிலுக்குச் செல்லலாம்.