இங்கேதான், உண்ணாமுலையம்மை சிவபெருமானிடம் இடப்பாகம் பெற எண்ணி, கிரிவலம் வந்து தவம் செய்தார். இங்குதான் இடப வாகன சிவனார், அன்னை பார்வதிக்கு தன் உடம்பில் இடப் பாகம் தந்து ஜோதி ரூபமாகக் காட்சி தந்தார். இங்குதான் அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து முக்தி அடைந்தார் அருணகிரிநாதர் வாழ்வில் வெறுப்படைந்து, தற்கொலை செய்ய முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்டார். லிங்கமே மலையாகக் காட்சி தருகிறது என்பதால், இந்த மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் உள்ளிட்ட ஞானியர் பலர் வாழ்ந்து முக்தியடைந்துள்ளனர்.
9 கோபுரம் 7 பிராகாரங்களுடன் அமைந்துள்ள மிகப்பெரிய ஆலயம். தென்னிந்தியாவிலேயே 2 வது உயரமான கோபுரம் (217 அடி) இங்கே உள்ளது. இந்தக் கோயில் 6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். சேர, சோழ, பாண்டிய, ஹொய்சாள மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
அண்ணுதல் என்றால் நெருங்குதல். அண்ணாத என்றால் நெருங்க முடியாத என்று பொருள். பிரமனும் விஷ்ணுவும் அடி முடி காணப் புறப்பட்டு, நெருங்க முடியாததால், அதாவது நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை எனப் பெயர் வந்ததாம்.
சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த சிவன் அம்பிகையை பிரிவதுபோல் ஒரு லீலை நடத்தினார். சக்தி இத்தலத்தில் மீண்டும் சிவனிடம் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராகக் காட்சிகொடுத்தார். பிருங்கி முனிவர் உண்மை உணர்ந்தார். இப்படி அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை வெளிப்படுத்திய பெருமை உடைய தலம் இது.
லிங்கமே மலை என்பதால், இந்த மலைதான் இங்கே புனிதம் வாய்ந்தது. திருவண்ணாமலை கிரிவலம் என்பதும் இந்த மலையை சிவலிங்கமாகக் கருதி வழிபட்ட சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளின் செயலால் ஏற்பட்டதுதான். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ள மலை இது என்பர். கிருத யுகத்தில் நெருப்பு மலையாம் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாம் துவாரயுகத்தில் பொன்மலையாம். கலியுகத்தில் கல்மலையாக உள்ளதாம்.
கிரிவலத்தை எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தொலைவுக்கும் பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்.
கிரிவலப்பாதையில் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக ஒவ்வொரு லிங்கம் உண்டு. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் என இந்த எட்டு லிங்கங்களை வணங்கிச் செல்ல வேண்டும். சித்தர்கள் நம்மோடு நடந்து வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, பேசிக்கொண்டு செல்லக்கூடாது. அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடி நடக்க வேண்டும். அடிக்கடி மலையைப் பார்த்து கைகூப்பி, வணங்கி, வேறு திசை எங்கும் பார்க்காமல், பெüர்ணமி நிலவைப் பார்க்கலாம்.
கிரிவலச் சிறப்பு :
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில்தான் பார்வதிக்கு சிவபெருமான் இட பாகம் அளித்தார். எனவே அந்த தினத்தில் கிரிவலம் வருதல் சிறப்பு. முனிவர், ஞானியர், சித்தர்கள் தமிழ் மாதப் பிறப்பின்போதும் பிரதோஷ காலத்திலும் கிரிவலம் வந்தார்களாம். எனவே மாதப்பிறப்பு அன்று கிரிவலம் வருதல் நல்லது. பெüர்ணமியன்று கிரிவலம் மிகவும் நலம் பயக்கும். அமாவாசையன்று கிரிவலம் வந்தால், மனக் கவலைகள் மாயும். தம்பதியர் 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலை நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிட்டும்.
ஞாயிறு- சிவபதவி திங்கள்- இந்திர பதவி செவ்வாய்- கடன் வறுமை நீங்கும் சுபிட்சம் நிலவும். புதன்- கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் வியாழன்- ஞானியர் நிலையை அடையலாம் வெள்ளி- விஷ்ணு பதம் கிட்டும் சனி- நவகிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.
மனத்துயர் நீக்கும் தலம் இது. கேட்கும் வரங்களை அள்ளித் தரும் மூர்த்தி அருணாசலேஸ்வரர். கல்யாண வரம், குழந்தை வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். அண்ணாமலையாருக்கும் அம்மைக்கும் கல்யாண உற்ஸவம் நடத்தி வைத்தும், அன்னதானம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர், தொட்டில் கட்டுகின்றனர். இறந்தவர் நினைவாக மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்) எடைக்கு எடை நாணயம், பழம், காய்கனி, வெல்லம் ஆகியவை நேர்த்திகடனாக வழங்கப்படுகிறது. நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாப் பொடி, பால், தயிர், பழவகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகமும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகமும் செய்கிறார்கள். சுவாமிக்கு வேட்டியும் அம்மைக்கு புடவையும் சாத்தி, வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
கார்த்திகை மாதம் கார்த்திகை நன்னாளில் சிவனார் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்த நாளிலேயே இங்கு தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை அண்ணாமலையார் சன்னதியில் தீபம் ஏற்றுவர். அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றப்படும். அந்த தீபங்கள் ஒன்றாக்கப்பட்டு, அண்ணாமலையார் அருகில் வைப்பர். ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் இது என்பர். இந்த தீபமே மலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
மாலை நேரத்தில், கொடிமரத்துக்கு அருகிலுள்ள மண்டபத்துக்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, உள்ளிருந்து அர்த்தநாரீஸ்வரரும் எழுந்தருள்வார். அவர் முன் அகண்ட தீபம் ஏற்றப்பட்டதும், மலையிலும் மகாதீபம் ஏற்றப்படும். அண்ணாமலையாரின் ஜோதி வடிவ தரிசனம் அது. மகா தீபம் ஏற்றும்போது மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை சந்நிதிக்கு வெளியில் நாம் தரிசிக்க முடியும்.
இங்கே நந்தி மிகவும் விசேஷமானது. மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை உண்டு. அன்று காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் வைத்து பூஜை நடக்கும். அப்போது, அண்ணாமலையார் நந்தியின் முன் எழுந்தருள்வார்.
இங்கே முருகனே முதல்வன். ஆலயத்துள் நுழைந்ததும் முதலில் நாம் தரிசிப்பது முருகன் சந்நிதியைத்தான். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டுமாறு சவால் விடுக்கிறான். அருணகிரியாரும் முருகப் பெருமானை வேண்டுகிறார். முருகனும் இங்குள்ள 16கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தர, அவருக்கு கம்பத்திளையனார் என்ற பெயர் ஏற்பட்டது. வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்து இளையனார் என்ற பெயரிலும் முருகப் பெருமான் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர்.
கிளி கோபுரம்:
அண்ணாமலை ஆலயத்தில் மிகவும் புகழ்பெற்ற கோபுரம் இது. ஒருமுறை அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வருமாறு வல்லாள மன்னன் மூலம் பணித்தான். அருணகிரியாரும் தன் பூவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்தி, கிளி வடிவில் தேவலோகம் சென்றார். இந்த நேரத்தில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். திரும்பி வந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் புரிந்தாள். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருவதால், இதற்கு கிளி கோபுரம் என்று பெயர் ஏற்பட்டது.
இந்தத் தலத்தின் மூலவர் அருணாசலேஸ்வரர். அண்ணாமலையார் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் பெயர் அபிதகுஜாம்பாள். உண்ணாமுலையாள் என அழகுத் தமிழ்ப் பெயர். மகிழமரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. பிரம்மதீர்த்தம், சிவகங்கை இவை தலத்தின் தீர்த்தங்கள். இந்தத் தலம் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடப் பெற்ற தலம். தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22வது தலம்.
கார்த்திகை மாதம் பிரம்மோற்ஸவ விழா – தீபத்திருவிழா 10 நாட்களும் களை கட்டும். மகாசிவராத்திரி, தை மாத மாட்டுப் பொங்கல், ஆடிப்பூரத்தன்று அம்மன் சந்நிதி முன்பாக நடக்கும் தீ மிதித் திருவிழா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அண்ணாமலையாரின் தரிசனத்துக்கு
மேலும் விவரங்களுக்கு : கோயில் தொடர்பு: போன் 04175 25243 8.