அரசர்கள் போற்றித் தொழுத அரசர்கோவில்

ஆலய தரிசனம்

இத்தலத்தை அடுத்து அரசர் கோயில். கிழக்கு திசையில் படாளம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. படாளம் கூட்டுரோடில் இருந்து 8 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் உள்ளது. இத்திருக்கோயில் தற்போது மதுராந்தகம் ராமர்கோயில் நிர்வாக அதிகாரியின் நிர்வாகத்தில் உள்ளது. காஞ்சிபுரம் இந்து அறநிலைய ஆட்சித்துறை துணை ஆணையர் பொறுப்பில் உள்ளது. கோயிலின் அனைத்துப் பொறுப்புகளும் வேலூர் இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் தர்மகர்த்தா திரு. பிச்சை முத்து இக்கோயிலின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மிகப் பழமையான கோயில் என்றார் அர்ச்சகர். அப்படியே என் கண்கள் வாசல் நிலையிலும் கல் சிற்ப வேலைப்பாடுகளிலும் சுழன்ற போது, ஒன்று தட்டுப்பட்டது.

5" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2011/06/arasarkoil_arasar-koil1.jpg" style="float: left;" width="429" height="248" />

கோயில் மிகப் பழமையானது என்பதைப் பறை சாற்றும் வண்ணம் கோயில் நிலைப்படியில் அந்தக் காலக் கைவண்ணத்தில் தென்கலைத் திருமண் காப்பு செதுக்கப்பட்டிருக்கிறது. இப்போது மேற்புறத்தில் சற்று மாற்றி வண்ணம் பூசியிருக்கிறார்கள்.

சோழமன்னர் காலத்தில் கட்டப்பெற்ற இத்தலம் “”திரு அரசர்” என்ற மன்னன் ஆட்சிக் காலத்தில் நிர்வகிக்கப்பட்டு சிறப்புற புகழ் பெற்றதால் இவ்வூருக்கு “”அரசர் கோயில்” எனும் பெயர் வரக் காரணமாய் அமைந்ததாம். இக்கோயிலின் ஸ்தலவிருட்சமான அரசமரமானது ஈசானிய மூலையில் அமைந்திருந்ததாம். அதன் கீழ் பிரம்மா என இவ்வூர் கல்வெட்டுக்களில் கண்டதாக செவிவழிச் செய்தி உண்டு என்கிறார்கள். அதனால் இங்கு பூதேவி, ஸ்ரீதேவி இருவரும் பிரம்மாவுக்குக் காட்சி அளித்தனர் என்று சொல்கிறார்கள்.

வடக்கு தெற்காக “”தட்சிணப்பிரவாகிணி” என்ற சிறப்புப் பெயருடன் பாலாறு பாய்கிறது. பாலாறு தெற்குப் பக்கம் ஓடி அங்கே வீற்றிருக்கும் புலிப்புரக்கோயில் ஈசுவரனுக்கும், அரசர் கோயில் உள்ள இப்பெருமானுக்கும் பாதார்ப்பணம் செய்துவிட்டு மீண்டும் திசை மாறிக் கடலில் கலந்து விடுகின்றது ஒரு சிறப்பு.

நுட்பமான சிற்ப வேலைப் பாடுகளுக்கு பேர்படைத்த ஒரு சிற்ப அதிசயம் இத்தலத்தில் தாயார் சன்னதி முகப்பு மண்டபத்தில் இருக்கிறது. சிலாரூபங்களைப் புகுத்தாமல், பதுங்கும் சிறுயாளிகள் தலையில் மெலிந்த நீண்ட பட்டை தீட்டிய கிளைத் தூண்கள், சற்றே மலர்ந்த தாமரை பலகை பீடங்களைத் தாங்கிட அவை நிஜக்கொடிகள் போல காண்போர் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இவற்றுக்கு சிகரம் வைத்தது போல் உள்ளது ஒரு விஷயம். நகாசு வேலைப்பாடுடன் கூடிய சிறிய கல் இழைகளின் ஊடே அமைந்துள்ள துவாரத்தில், ஈர்க்கைக் குச்சி ஒன்றைச் செலுத்தினால் மறுபுறம் நான்காகப் பிளந்து துளையின் வழியே வெளிவரும் அதிசயம் இங்குக் காணலாம். கோயில் அர்ச்சகர் இதைச் செய்து காட்ட கையில் இருந்த கேமிராவுக்குள் இக்காட்சியைச் சிறைப்படுத்தினேன்.

பெருந்தூணைச் சுற்றியுள்ள குழல் போன்ற சிறிய தூண்களைக் கல் கொண்டு தட்டினால் சப்தஸ்வர நாதம் எழுகிறது.

காஞ்சியில் யாகம் தொடங்கிய பிரும்மா தட்சிணப் பிரவாகினியான இப்புனித பிரதேசத்தில் மண் எடுக்கும் பொழுது வரதராஜப் பெருமாள் அகப்பட்டதாகவும், அவரை பிரம்மா இங்கே பிரதிஷ்டை செய்ததாகவும் காஞ்சியில் வரதப்பெருமாள் எழுந்தருளுவதற்கு முன்பே இங்குத் தோன்றிவிட்டார் என்றும் ஒரு கதையைச் சொல்கிறார்கள்.

இத்தலத்தில் பெருமாள் கோபுரவாயில் பார்த்திட, பெருந்தேவித் தாயார், ஆண்டாள் சன்னதிகள், கமலவிமானம், அமலசிகரவிமானம் கொண்டு பெருமாள் சன்னிதியை நோக்கி அமைந்துள்ளன. பிரயோகச் சக்கரமேந்திய சக்கரத்தாழ்வார், உக்ரம் வெளிப்படும் வகையில் கண்களில் செம்பு பொருத்தப் பெற்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் … உயர்ந்த வேலைப் பாடுடன் அமைந்துள்ளது. தூணில் நரசிம்மர் மிகச்சிறிய புடைப்புச் சிற்பமாக இருந்தாலும், அதன் தெளிவான நேர்த்தி வியப்பளிக்கும் வண்ணம் இருக்கிறது.

கி.பி.1251 இல் அரசேறிய சடையவர்மன் சுந்தரபாண்டியன் சோழனை வென்று திருவரங்கம் சென்றும், காஞ்சியைத் தாக்கியும், சிறப்புடன் விருதுகள் பெற்று இக்கோயிலுக்கு நிலங்களை தானமிட்ட வரலாறும், விசயநகர மன்னன் கிருஷ்ணதேவராயரின் கர்ணீதருக்கு மங்கள வாழ்வளிக்க வடமலையார் எனும் அதிகாரி இவ்வூரில் குடியேறுபவர்களுக்கு ஓராண்டு எல்லா வரி விலக்குகளையும் அளித்ததாகவும் ஆதாரங்கள் கல்வெட்டில் உள்ளன. சம்புகுலத்து ராசநாராயண சம்புவராயன் காலத்தில் இக்கோயிலை செப்பனிட்டு பூஜை கிரியைகளுக்கு நிலம் அளிக்கப்பட்டதால், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் சிறப்புற இருந்ததை நாம் அறிகிறோம்.

தற்போது இடிந்து போய்ப் பாழ்பட்டுள்ள இக்கோயிலுக்கு சில ஆன்மிக அன்பர்கள் உதவும் உள்ளத்தோடு சில கைங்கர் யங்களைச் செய்து வருகிறார்கள். பெருந்தேவித் தாயாரின் அழகும் அருளும் எல்லோரையும் அப்படி ஈர்க்கிறது. தாயாரின் சிறப்பம்சம் – சிலாரூபத்தில் ஆறு விரல்கள் அமையப் பெற்றிருப்பது. எனவே ஆறு விரல் பெருந்தேவித் தாயார் என்று அழைக்கப் பட்டதாம். தற்போது தாயாரின் சுந்தர அழகு கண்டு பக்தர் ஒருவர் சுந்தர மகாலட்சுமித் தாயே என்று அழைக்க, அப்படியும் பெயர் சொல்லி வணங்குகிறார்கள்.

இப்படிப்பட்ட திருக்கோயில்களைக் காக்க நாம்தான் ஏதாவது செய்தாக வேண்டும். காரணம் அவை வெறுமனே பக்தியை மட்டும் பிரதானமாகக் கொண்டவை அல்ல; நம் தமிழ் மூதாதையர்களின், பல மன்னர்களின் சரித்திரமே அவற்றில் அடங்கியுள்ளது. எனவே இம்மாதிரியான கோயில்களை வெறும் கண்கொண்டு பார்க்காமல், நம் பாரம்பரியப் பெருமையை, கட்டடக் கலைத்திறனைக் காட்டும் கலைப் பொக்கிஷங்களாகக் காண வேண்டும்.

Leave a Reply