ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஆலய தரிசனம் விழாக்கள் விசேஷங்கள்
– Advertisement –

ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள்!

விழுப்புரம் அருகே திருக்கோயிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பிரதான சாலையில், சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ளது ஸ்ரீஞானானந்த தபோவனம். 50 வருடங்களுக்கு முன் இங்கே சமாதியில் அமர்ந்து, இன்றும் ஸ்தூல வடிவில் அன்பர்களுக்கு நல்வழி காட்டும் மகான் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் அருளாளயத்தை தரிசிக்கலாம்!  
இந்த ஸ்வாமிகள் வெகுகாலம் வாழ்ந்தவர் என்ற நம்பிக்கை அன்பர்களிடம் நிலவுகிறது. காரணம், பல்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றைத் தம்முடன் கொண்ட தொடர்புகளுடன் ஸ்வாமிகள் அவ்வப்போது சொல்லியிருக்கிறார். சுவாமிகளின் வயது, அவருடைய பூர்வாசிரமம், பிறந்த நட்சத்திரம் மாதம் இவை பற்றியெல்லாம் அறிந்து அவற்றைப் பதிவு செய்ய அதிகம் முயன்றார், ஸ்வாமிகளிடம் பேரன்பும் பக்தியும் கொண்டிருந்த, கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்த வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். ஆனால் அவருக்கு ஸ்வாமிகள் நேரடியாக எந்த பதிலையும் தரவில்லை. மரம் பழுத்து கனிகள் நன்றாக இருக்கும் போது, அந்தக் கனிகளைப் பறித்து உண்ணுவதுதான் அறிவுடைமை. அதை விடுத்து, மரத்தை நட்டவன் யார், தண்ணீர் எப்படி கிடைத்தது, அதன் காலம் வயது என்ன இப்படியெல்லாமா ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்? என்று பதில் கேள்வி கேட்பாராம்.  அதனால் கி.வா.ஜ., முயற்சிகள் பல செய்தும் பலன் கிட்டவில்லை. எனினும் பல்வேறு கட்டங்களில் அன்பர்களிடம் பேச்சுவாக்கில் ஸ்வாமிகள் சொன்ன செய்திகளை வைத்து, ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகளின் ஜன்ம நட்சத்திரம் தை கிருத்திகை என்றும், ஸ்வாமியின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றும் ஒருவாறு ஊகித்தறிந்தார்கள். 

ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள், கர்நாடகத்தில் உள்ள மங்களாபுரியில் அவதரித்து மிகச் சிறு வயதிலேயே துறவறத்தில் நாட்டம் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி இமய மலை நோக்கிச் சென்றார். அங்கே, ஆதிசங்கரர் நிறுவிய ஜோதிர் மடத்தின் பீடாதிபதியாகிய பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீ சிவரத்னகிரி ஸ்வாமிகளால் ஆட்கொள்ளப்பட்டார். அவரிடம் சந்யாச தீட்சை பெற்று, இமயத்தின் மடியில் தவமியற்றி வந்தார்.  தனது குருவின் மஹாசமாதிக்குப்பின் அடுத்த பீடாதிபதி குறித்த சர்ச்சைகள் ஏற்பட்ட போது, தன் குருநாதரில்லாத இடத்தில் தாம் இருக்கக் கூடாது என்று மனம் கசந்தது. உடனே அந்த  பீடத்தைத் துறந்து இமயமலையின் பனிக்குகைகளில் நெடுங்காலம் கடுந்தவமியற்றினார். 

பின்னர், நேபாளம், பர்மா, இலங்கை முதலிய அண்டை நாடுகளிலும், பாரதத்தின் பல பகுதிகளிலும், பாதயாத்திரையாக சஞ்சாரம் செய்து, துறவு வாழ்க்கையை நியமப்படி கடைப்பிடித்தார். இறுதியில் கடந்த நூற்றாண்டில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்திலும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் வியாக்ரபாதரும் மற்ற சித்தர்களும் வாழ்ந்த புராதனமான சித்தலிங்கமடம் என்ற தலத்திலும், தங்கி தவ வாழ்க்கையை மேற்கொண்டு, அன்பர்களுக்கு அருளாட்சி புரிந்தார்.  

பின்னர், திருக்கோவிலூரில் மத்வ  சம்பிரதாயஸ்தர்களால் ஆராதிக்கப்படும் ஸ்ரீ ரகோத்தம ஸ்வாமிகளின் மூல பிருந்தாவனத்துக்கு அருகில், சித்தர்கள் பலர் வாழ்ந்து அருளாசி வழங்கி அடங்கிய தட்சிண பினாகினி என்னும் தென்பெண்ணை நதியின் வடகரையில், மார்க்கண்டேயரைப் பெற்ற மிருகண்டு முனிவரின் தவச்சாலையாய் விளங்கிய புனிதமான இடத்தில், ஸ்ரீ ஞானானந்த தபோவனம் என்னும் அத்யாத்ம வித்யாலயமாகிய ஆஸ்ரமத்தை நிறுவினார் ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள்.

அதன் பின்னர், ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் பாமர மக்களும் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு உய்ய தமது ஆஸ்ரமத்திலேயே, ஸ்ரீ ஞானகணேசர், ஞானஸ்கந்தர், ஞானாம்பிகை. ஞானபுரீஸ்வரர், ஞானமஹாலக்ஷ்மி. ஞான வேணுகோபால ஸ்வாமி, ஞான ஆஞ்சனேயர், ஞானதுர்க்கை. நவக்ரஹ மூர்த்திகள், ஞானபைரவர், சண்டிகேஸ்வரர், ஞானநடராஜர் முதலான மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து ஆலயம் சிறப்புறத் திகழ வழி செய்தார்.  

தபோவனத்தில் இருந்தபடி அருளாட்சி புரிந்த மகான் ஸ்ரீஞானானந்தரை பக்தர்கள் பெருமளவில் அணுகினார்கள். அவர்களுக்கு எளிய  வகையில், புரிந்த மொழியில் உபதேசம் செய்து, நல்வழிப் படுத்தினார். அவரது பத்து கட்டளைகள் மிகவும் சிறப்பானதாக இன்றளவும் போற்றப்படுகின்றது. சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே; பொறுமையாயிரு சோம்பலாயிராதே; சிக்கனமாயிரு கருமியாயிராதே; அன்பாயிரு அடிமையாயிராதே; இரக்கங்காட்டு ஏமாந்து போகாதே; கொடையாளியாயிரு ஓட்டாண்டியாய் விடாதே; வீரனாயிரு போக்கிரியாயிராதே; இல்லறத்தை நடத்து காமவெறியனாயிராதே; பற்றற்றிரு காட்டுக்குப் போய்விடாதே; நல்லோரை நாடு அல்லோரை வெறுக்காதே! – என்ற அவரது உபதேசங்கள்  அவரது எளிமையான உபதேச வழிகளைக் காட்டும். 

குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவர் ஸ்ரீ ஞானானந்தர். குழந்தைகளுடன் விளையாடி, அவர்களுக்குத் தன் கருணைப் பார்வையைப் பொழிந்தவர். அவரை பெரியோர்களும் மகான்களும் கூட  ’தாத்தா ஸ்வாமி’ என்றே அழைத்தார்கள். தபோவனத்திலேயே ஒரு தவச்சாலை அமைத்து, சீடர்களையும் உருவாக்கி நல்வழி காட்டினார். ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகளுக்கு அனுக்கிரகம் செய்து நாம சங்கீர்த்தனத்தை உலகெங்கும் பரப்பியதில் ஸ்வாமியின் பங்கு அளப்பரியது. 

தனது இடைவிடாத ஆழ்ந்த தவத்தால் அகில உலகையும் பாவனமாக்கி அனுக்ரஹித்த ஆனந்த ஞானப்பழமான ஸ்வாமிகள், 1974 ஜனவரி மாதம், அகண்ட பரவெளியிலே கலந்தார். அதற்கு முன்பே தாம் சூட்சும வடிவில் அமரப் போகும் அருளாளயத்தை  வடிவமைத்துக் கொடுத்து, அங்கேயே சந்நிதி கொண்டார். அதுபோல் அன்பர்களுக்காக தம்மைப் போல் ஒரு சிலா விக்ரஹம் பிரதிஷ்டை செய்து, அதனைத் தானான திருமேனி என்று ஸ்ரீராமானுஜர் அருளியதைப் போல் அன்பர்க்கு அருளி, தம் தெய்வப் பேரருளை அன்பர்க்கு நீங்காது இருக்க அனுமதித்தார். அன்று போல் இன்றும் அவரது தெய்வீக அருள் தங்களுக்கு வழிகாட்டுவதை அன்பர்கள் உணர்ந்து  தபோவனம் வந்து தியானித்து, பாத பூஜை செய்து, தரிசித்து மகிழ்கின்றார்கள்.  

இத்தகைய தபோவனத்தில், ஸத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளுக்கும், ஸத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் அதிஷ்டான அருளாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ஞானமஹாலிங்கத்திற்கும், மணிமண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஸத்குருநாதரின் சந்நிதிக்கும்,  ராஜகோபுரத்திற்கும்,  ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

Leave a Reply