பலம் தரும் பரிகாரத் தலம்: மழலை வரம் அருளும் தாயார்!

ஆலய தரிசனம்

அவ்வாறே பாண்டவர்கள் புருஷமங்களம் கிராமத்தில் அமர்ந்து யாகத்தைச் செய்தனர். யாகத்தின் முடிவில், எப்படி யானையைக் கொன்று அதன் மூலம் துரோணர் கொல்லப்பட்டாரோ, அந்த எண்ணம் போகும் வகையில், கண்ணனே பச்சை நிற யானையின் மீது அமர்ந்து, ருக்மிணி சத்யபாமா சகிதம் தோன்றி ஆசியளித்து, மன நிம்மதி பெறச் செய்தார். அதனால், இந்தப் பெருமாள் பச்சைவாரணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். ‘வாரணம்’ என்றால் ‘யானை’ என்று பொருள்.

”இன்றும், இந்தக் கோயிலுக்கு நிம்மதி தேடி வருவோருக்கு மன நிம்மதி அளித்து, வாழ்க்கையை இனிதாக்குகிறார் பெருமாள்” என்கிறார் கோயில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சார்யர் (செல்:94445 58608). யானை மீது காட்சியளித்ததால், தீபஸ்தம்பத்தில் யானையின் உருவம் உள்ளது. சென்னை- பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது இந்தக் கோயில். பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் பயணிக்கிறோம். திருமழிசை செல்லும் திருப்பத்துக்கு முன்னர், நசரத்பேட்டை பேருந்து நிறுத்தத்தை ஒட்டி, இடதுபுறம் ஒரு சிறிய சாலை. அதில் செல்கிறோம். சுமார் 2 கி.மீ தொலைவில் அகரம்மேல் கிராமம் வருகிறது. சாலையின் வலப்புறத்தில் அழகான ராஜகோபுரம் தெரிகிறது. முதலில் வெளிப்புற அனுமன் சந்நிதி. கண்ணன் சந்நிதிக்கும் அனுமனுக்கும் என்ன சம்பந்தம்? காரணம̷் 0; உள்ளே ஸ்ரீராமர், சந்நிதி கொண்டுள்ளாரே! முக்கியத்துவம் வாய்ந்தவராயிற்றே இந்த ஸ்ரீராமன்.

அப்படி என்ன முக்கியத்துவம் இவருக்கு?! ஆச்சார்யர் ஸ்ரீமுதலியாண் டான் ஸ்வாமியால் திருவாராதனம் செய்யப்பெற்று பூஜிக்கப்பட்ட ராமபிரான் என்பது போதாதா முக்கியத்துவத்துக்கு?!

சுமார் 960 வருடங்களுக்கு முன், புருஷமங்களம் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் ஸ்ரீஅனந்தநாராயண தீட்சிதர்- நாச்சியாரம்மாள் தம்பதி. நெடுங்காலமாக குழந்தைப் பேறு இல்லை. பகவானை விட்டால் வேறு கதி?! இருவரும் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர். ஏழுமலையானை தரிசித்துவிட்டு, ஊருக்குத் திரும்பும் வழியில், திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளை தரிசித்து வணங்கி, அருகேயுள்ள ஸ்ரீராமர் கோயிலில் அன்றிரவு தங்கினர்.

ராமபிரான் மனத்துள்ளே நிலைத்திருக்க, உறக்கத்தில் இருந்த அம்மைக்கு, ராமபிரான் தாமே வந்து அவர்களுக்கு மகவாகப் பிறப்பதாகக் கூறினார். மனத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க, ஊர் திரும்பிய சில மாதங்களில் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது- அதுவும் ராமனின் திருநட்சத்திரமான, சித்திரை மாத புனர்பூச நட்சத்திரத்தில்! எனவே, குழந்தைக்கு ராமபிரானின் பெயரான தாசரதி என்ற திருநாமத்தையே சூட்டினர்.

இவரே பின்னாளில் முதலியாண்டான் ஸ்வாமி என்று அழைக்கப்பட்டவர். ஸ்ரீமத் ராமானுஜரின் மருமகன் இவர். ஸ்ரீமத் ராமானுஜருக்கு பாதுகையாகவும், திரிதண்டமாகவும் விளங்குபவர். ஸ்ரீராமானுஜர் துறவறம் ஏற்றபோது, ‘எல்லாவற்றையும் அடியேன் துறப்பேனாயினும், முதலியாண்டானைத் துறத்தல் இயலாது’ என்று சொல்லி துறவறம் ஏற்றார். அந்த அளவுக்கு ஸ்ரீமத் ராமானுஜருக்கு தொண்டுபுரிந்த தாசராக விளங்கியவர் இந்த தாசரதி. ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமியின் அவதாரத் தலமான இங்கே, சித்திரை மாதம் பத்து தினங்கள் உற்ஸவம். புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்வாமியின் சாற்றுமுறை நடக்கிறது. ஸ்ரீமத் ராமானுஜரின் பரிபூரண அருள் பெற்ற இந்த ஸ்வாமியை தரிசித்தால், நீண்ட ஆயுள் பெறலாம்.

இங்கே எழுந்தருளும் தாயார் அமிர்தவல்லித் தாயார். இவர் குழந்தைச் செல்வம் அருள்பவர் என்பது விசேஷம். மணமாகி வருடக்கணக்கில் ஆனபோதும் பிள்ளைப் பேறு இல்லாத தம்பதியருக்கு எளிமையான பரிகாரம் இந்தத் தலத்தில்! தொடர்ந்து ஆறு வாரங்கள்… செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில், தூய பசு நெய்யால் தாயார் சந்நிதி வாசல் பீடத்தை மெழுகி, சர்க்கரைப் பொடியால் கோலம் இட்டால் சந்தான பாக்கியம் சாத்தியம் என்பது பலரது அனுபவம்.

திருக்கோயில் மிகத் தூய்மையாகக் காட்சி தருகிறது. அழகான ஐந்து நிலை ராஜகோபுரம். உள்ளே சென்றால், முதலில் கல்லாலான தீபஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம் இவற்றுக்கு அடுத்து, வழக்கம்போல் கருடாழ்வார் சந்நிதி. கோயிலுள் செல்லும்போதே, இடப்புறம் அனுமன் சந்நிதியும், வலப்புறம் ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமி பூஜித்த ஸ்ரீராமன் சந்நிதியும் உள்ளன. சீதாதேவி, லட்சுமணர், சகிதமாக உள்ள ஸ்ரீராமபிரானின் உற்ஸவ விக்கிரகம் அழகு மிக்கது. கையில் வில்லும் கிரீடமும் மிகத் திருத்தமாக அமைந்திருக்கிறது.

சந்நிதி கருடாழ்வாரை வணங்கி ஸ்ரீபச்சைவாரணப் பெருமாளை தரிசிக்கிறோம். இருபுறங்களிலும் தேவியர் அமர்ந்திருக்க, இடக் காலை மடக்கி, வலக் காலைக் கீழே ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். அற்புதமான தர்பார் தரிசனம். கையில் செங்கோல் கொண்டு, அரசர் கோலத்தில் கம்பீரமாக தரிசனம் தருகிறார் பெருமாள். வலப்புறம் ஆழ்வார் ஆச்சார்யர்களின் உற்ஸவ விக்கிரகங்களை தரிசிக்கிறோம்.

ஆலயத் தூணில் பெருமாளின் அமர்ந்த கோலம் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. பிராகார வலம் வருகிறோம். தாயார் சந்நிதி. அழகே உருவாக, வரமும் அபயமும் தரும் கரங்கள் கொண்ட அமிர்தவல்லித் தாயாரை தரிசிக்கிறோம். தாயார் சந்நிதி முன் உள்ள பீடத்தில்தான் குழந்தை வரம் வேண்டி வரும் பெண்கள், பசும் நெய்யால் மெழுகி, சர்க்கரைப் பொடியால் கோலம் இடுகிறார்கள்.

பிராகார வலத்தில் இரண்டு நாகர் சிலைகளை தரிசித்து, ஆண்டாள் சந்நிதியை அடைகிறோம். ஆண்டாள் சந்நிதியின் இடப்புறத்தில் ஸ்ரீரங்கநாதர் தரிசனம் தருகிறார். அவர் சந்நிதிக்கு நேர் எதிரில், பரமபதவாசல் உள்ளது. இது வித்தியாசமான அமைப்புதான்! ஸ்ரீரங்கநாதரோடு கூடிய ஆண்டாள் சந்நிதி என்பதால், இவர்களை தரிசித்தால், திருமண வாழ்க்கை உறுதி என்கிறார்கள்.

உற்ஸவங்கள்: பெருமாளுக்கு பங்குனி பிரம்மோற்ஸவம். பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்! கார்த்திகை மாதத்தில் பவித்ரோத்ஸவம். நவராத்திரி ஒன்பது நாட்களும் தாயாருக்கு உற்ஸவம். ஸ்ரீராம நவமி உற்ஸவமும், ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்ஸவமும் சிறப்பு.

மன நிம்மதி தேடி, மழலை வரம் நாடி, மணக் கோலம் வேண்டி வரும் பக்தர்கள் அதிகம் என்றால், ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமியின் அவதாரத் தலத்தில் ஒருமுறையேனும் பாதங்களைப் பதிக்க மாட்டோமா என்ற ஏக்கத்தில் வரும் பக்தர்கள் இன்னும் அதிகம். இவ்வகையில், நல்லன எல்லாம் அருளும் பெருமாளை தரிசிக்க அவசியம் சென்று வாருங்கள்.

கோயில் படங்கள்:

குறிப்பு: படம் பெரிய அளவில் பிக்ஸர் பெரிதாக தேவைப்பட்டால் request@www.deivatamil.comil மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply