ஏப்ரல் 26-ம் தேதி கருடசேவை நடைபெற்றது. 29-ம் தேதி ஸ்ரீ நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு, நெல் அளவைக் கண்டருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையடுத்து, சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிகாலை 3 .30 மணிக்கு ஸ்ரீ நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருத்தேருக்குப் புறப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு சித்திரைத் தேர் மண்டபத்தை அடைந்தார். அதிகாலை 4.30 மணியளவில் திருத்தேரில் எழுந்தருளினார்.
பின்னர், காலை 6 மணிக்கு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு சித்திரை வீதிகளிலும் ஸ்ரீ நம்பெருமாள் சித்திரைத் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, காலை 10 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது.
தேரோட்டத்தில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.