உலகப்பற்றையே ஊன்றுகோலாக்கி ஆன்ம சாதனை புரிந்தவர்

விழாக்கள் விசேஷங்கள்

கவி கனானந்தர்

ஆகா! மீனுக்கும் நீருக்கும் உள்ள அன்புத் தொடர்பு தான் எத்தகையது! நீரைப் பிரிந்து ஒரு கணம் மீன் உயிர் வாழ்கிறதா? நீரைப் பிரிந்த அந்தக் கணமே துடிதுடித்து உயிரை அல்லவா துறந்து விடுகிறது! உண்மைக் காதல் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!

பிரிவுத் துயர் தாளாமல் மீன் இப்படி உயிர் துறக்கிறது என்றால், சேர்க்கையை நாடிச் சென்று, விட்டில் பூச்சி விளக்கொளியிலே தன் இறக்கைகளை எரித்துக் கொண்டு மரிக்கிறது! பிரிவிலும் சேர்க்கையிலும் துன்பம் தரும் இந்த அன்பில் அப்படி என்னதான் இன்பம் இருக்கிறதோ, புரியவில்லை! உலகமும் இந்த அன்பை விடுவதில்லை; கவிகளும் விடுவதில்லை.

கனானந்தர் என்னும் ஹிந்திக் கவி சொல்வதைக் கவனியுங்கள்:

“தன் அன்பன் தன்னைத் துறந்து செல்வதால் ஒருவன் சாகிறான். தன் அன்பனின் ஒளியில் மதிமயங்கி அவனைச் சந்திக்கச் சென்று அத்தீயிலே தன்னை எரித்துக் கொள்கிறான் இன்னொருவன். இது என்னடா வேடிக்கை! இந்தப் பித்துக் கொள்ளி மனம் ஏன் இப்படித்தான் மாய்கிறதோ? பிரிவிலும் சேர்க்கையிலும் மீனும் – விட்டிலும் படும் இந்த அவஸ்தையைக் கண்டும் இந்த மனம் இப்படி ஏன்தான் அன்பு கொள்ளுகிறதோ?’

இப்படிக் கூறும் கவி கனானந்தர் உண்மையிலேயே அன்புக்கு அடிமை. சுஜான் என்னும் பெண்ணிடம் மனத்தைப் பறிகொடுத்தவர். தமது சொந்த வாழ்விலே மீனின் நிலைமையையும் விட்டிலின் நிலைமையையும் அடைந்தவர். ஆயினும் உள்ளத்திண்மை காரணமாக மீனாக மரித்து விடவில்லை. அப்படிச் செய்தற்கும் அழகான அருமையான காரணத்தைக் கூறுகிறார்:

“நீரைப் பிரிந்து துடிதுடித்துச் சாகும் மீன் வேதனையுறுகிறது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் என் உள்ளத் துடிப்புக்கு அதன் துடிப்பு ஈடாகுமா? தன் உயிர்க் காதலனான நீருக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டு அல்லவா இந்தப் பயந்தாங்கொள்ளி உயிரைத் துறந்து விடுகிறது. இத்தனை அன்பாயிருந்த மீனை இந்த நன்றி கெட்ட நீர் பிரிந்து விட்டதே என்று ஒருவர் கூறினால், அது நீருக்குக் களங்கம்தானே? நீரோ ஜடப் பொருள். அதற்கு அன்பின் பெருமை தெரிந்திருந்தால், இப்படி மீனைப் பிரியுமா? ஜடப் பொருளான நீரின் கையில் சிக்கி இப்படித் துடிதுடித்துச் சாக நேரிடுகிறதே என்பதற்காக மீன் ஒரு கால் அழலாம். ஆம், அறிவு கெட்ட மீன் அப்படிச் செய்வது ஒருவேளை சரியாகக் கூட இருக்கலாம். ஆனால் என் மனத்தின் நிலையை உயிர் உள்ளவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும். உயிருக்குயிராக நேசிப்பவர்கள் தான் உணர முடியும். முட்டாள் மீனைப் போல உயிரை விட என் மனம் இடம் கொடாது. பிரிவுத் துயரிலும் இன்பம் காணவே என் மனம் முயலும். அப்படி உயிரை விட்டு விட்டால் மீனுக்கும் எனக்கும் வேறு என்ன வித்தியாசம்?’

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்த கனானந்தர் என்னும் இக்கவி முகம்மது ஷாரங்கீலே என்னும் பாதுஷாவின் ஆஸ்தானத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த ஆஸ்தானத்தைச் சேர்ந்த அழகிதான் சுஜான் என்பவள். அவள் மீது அளவிலா அன்பு கொண்டு விட்டார் கனானந்தர். அதன் காரணமாக ஆஸ்தானத்தைச் சேர்ந்த மற்ற அங்கத்தினர்களுக்கு உள்ளுக்குள் பொறாமை உணர்ச்சி தலை தூக்கியது. கனானந்தர் நன்றாகப் பாடுவார் என்று பாதுஷாவிடம் சொன்னார்கள். அவர் பாடிக் கேட்க வேண்டும் என்ற ஆசையில் பாதுஷா தமது அவையிலே அவரைப் பாடச் சொன்னார். “தமக்குப் பாட வராது’ என்று மறுத்து விட்டார் கனானந்தர். அவையோருக்கு அவரை இலேசில் விட்டுவிட மனமில்லை. “சுஜான் பாடச் சொன்னால் பாடுவார்” என்று பாதுஷாவிடம் காது குத்தினார்கள். பாதுஷாவும் அவர்கள் சொன்ன முறையைக் கையாண்டு அவரைப் பாட வைத்து விட்டார். கனானந்தர் மெய்யாகவே பஜனை முறைகளையும் ராக-தாள ஞானத்தையும் நன்கு அறிந்தவர். சுயமாகவே எத்தனையோ பதங்கள் கூடக் கவனம் செய்தவர். சுஜானின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் அரசவையிலே வெகு அருமையாகப் பாடினார். அரசரும் அவையோரும் மெய்மறந்து அவரது கான ரசத்தைப் பருகினார்கள். கந்தர்வகான உலகத்திலிருந்து இறங்கி இப்பூவுலகுக்கு வந்தபின் தான் பாதுஷாவுக்குக் கனானந்தர் தம்மைப் பெரிதும் அவமதித்து விட்டதாகத் தோன்றியது. உடனே அவருக்கு நாடு கடத்தல் தண்டனை அளித்து விட்டார்.

கனானந்தர் சுஜானைத் தம்முடன் வந்து விடுமாறு அழைத்தார். அவள் மறுத்து விட்டாள். அதற்காக அவர் நீரைப் பிரிந்த மீனின் நிலையை அடைந்து விடவில்லை. அதாவது மரித்து விடவில்லை. மீனின் அன்புத் துடிப்பை மனத்தில் கொண்டு பிரிவுத் துயரைப் பாடலில் மறக்க முயன்றவராய் விருந்தாவனத்தை அடைந்தார். அங்கே நிம்பார்க்க சம்பிரதாயத்தில் தீட்சை பெற்றுப் பெரும் பக்த கவியாக மாறி விட்டார். ஆயினும் அவரால் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சுஜானை மறக்க முடியவில்லை; மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை. ராதையையும் கண்ணனையும் தம் இஷ்ட தெய்வமாகக் கொண்டு அவர் வழிபட்டாலும், சுஜான் அவரது மனக் கண்ணெதிரே ராதையாகவோ கண்ணனாகவோ திகழ்ந்தாள். அதனால்தான் அவரது பாடல்களிலே அவரது முத்திரையோடு சுஜானின் பெயரும் பெருவாரியாக இடம் பெற்றுள்ளது. இக லோக வாழ்க்கையின் இன்ப – துன்பங்களைத் தமது பரலோக வாழ்க்கையின் படிகளாகச் சமைத்துக் கொண்டு அற்புதமான மாமழை பொழிந்து மக்களின் மனத்தில் வற்றாத இன்பத்தைச் சுரக்கச் செய்தவர் கனானந்தர். “இன்ப – வாரிதி’ என்னும் பொருள் தரும் “கனானந்தர்’ என்னும் பெயரே இதற்குச் சான்று.

சுஜான் என்னும் தம் காதற் கிழத்தியைப் பிரிந்த கவி, சாதக பட்சியாக ஏங்குகிறார். தனக்கு உயிர் ஊட்டி இன்பம் அளிக்கும் மேகத்தின் மின்னலொளியைக் காண வேண்டிச் சாதக பட்சி வானையே நோக்கி நிற்கிறது. அந்த மேகம் எங்கிருக்கிறதோ, விளங்கவில்லை. தாகம் மிகுந்து தவிக்கிறது. மழை பொழியவில்லையெனில் அதற்கு நிம்மதி கிடையாது. அதை எப்படி வருவிப்பது? மாரிக் காலம் வந்தால் தானே மேகம் மூட்டம் போட்டு மழை பெய்யக் கூடும்? சாதக பட்சி தவங் கிடக்கிறது. அதற்காக̷ 0; அதே போலக் காதலியைக் காண இயலாத கவி, அவள் தரிசனத்துக்காக ஏங்கி நிற்கிறார். அவரது கண்களாகிய சாதக பட்சிகளும் தங்கள் மனத்துக்கு நிறைவூட்டும் மேகம் எங்கே எனத் தவிக்கின்றன. காதலியின் கடைக் கண்மணி யென்னும் மழைத்துளி விழாமல் அவற்றுக்கும் அமைதி ஏற்படுவதாயில்லை. அதற்காக மாரிக் காலத்தை எதிர் நோக்கி அவை ஏங்கி நிற்கின்றனவா என்றால் அதுதான் இல்லை. விழிகள் நிர்மலமான வானம் போலிருக்கும் பொழுதே கண்ணீர்த் துளிகள் மழைத் துளிகளென விழுகின்றன. காதலியைக் காண இயலாத விரக வேதனையில் ஏங்கி நிற்கும் விழிச் சாதனங்களுக்கு வெற்று வானமே மழை பொழிந்ததாக ஏற்றிக் கூறுகிறார்கள் – இரு பொருள் தரும் அந்தப் பாடலில்…

விரகத் தீ தகிக்கிறது என்று கூறுகிறோமே, அந்த விரகத் தீக்கும் சாதாரணத் தீக்கும் உள்ள வேற்றுமையைக் கவி கூறும் அழகே அழகு.

சாதாரணத் தீ கண்களுக்குப் புலனாவது. ஆனால் இந்தத் தீயோ உடலுக்குள் எத்தனைதான் குடைந்து குடைந்து தேடி ஓடியும் காணக் கிடைக்கவில்லை. உள்ளத்தை இப்படித் தகித்துக் கொண்டிருக்கும் இந்த விசித்திரத் தீ எது? எப்படித் தகிக்கிறது என்பதும் விளங்கவில்லை. நெருப்பு என்றால் புகை இருக்கும் என்னும் பேருண்மையையும் பொய்யாக்கி விட்டது இந்தத் தீ. அது மட்டுமா? தீ தகிக்கத் தகிக்க உடலில் சூடு அல்லவா ஏற வேண்டும்? ஆனால் உடல் சில்லிட்டு அல்லவா போகிறது? தீ தகிக்கத் தகிக்க நீர் நீராவியாகப் போகும் என்பார்கள். அதுவும் பொய். விழிகளிலிருந்து நீர் வழிகின்றது. பெருமூச்சுக் கூட விடப் பிடிக்க மாட்டேன் என்கிறது. இந்த விரகத் தீயில் மனம் அப்படிப் பேதலித்து விட்டது. இத் தீயை அணைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டன. அதை அணைக்க முயல முயல அது மேலும் கொழுந்து விட்டு எரிகிறது. என் அன்புக்கன்பான சுஜானே! “இன்பவாரிதி’ – அதாவது “கனானந்த்’ என்னும் இந்த மேகத்தைப் பார்த்த பின்னும், இப்படி ஒரு தாபம் ஏற்படுவதுண்டா? எத்தனை தான் கன மழை பொழிந்தாலும், ஆசை என்னும் இந்த விசித்திரத் தீ அவியும் வகையைக் காணோமே! ஒன்றுக்கொன்று நேர்மாறான இயல்பு கொண்ட நீருக்கும் நெருப்புக்கும் இதென்ன விசித்திர ஒற்றுமை!

– இப்படி விரகத் தீயினால் தாக்கல் படும் கவிக்குத் தாம் அன்றொரு நாள், கண் அம்புக்கு இலக்கான கதை நினைவுக்கு வருகிறது. எந்த அடிபட்டாலும் படலாம், கண்ணெறி படக் கூடாது என்பார்களே, அது முக்காலும் உண்மை என்பதை நம்ப வைத்து விடுகிறார்.

சாதாரண அம்பாயிருந்தால், எங்கே குறி பார்த்து எய்துகிறோமோ, அங்கே தான் போய்த் தைக்கும். ஆனால் இந்தக் கண் அம்பு இருக்கிறதே, இது கண்ணில் போய்த் தைக்கிறது. இதயத்தைப் போய்த் துளைக்கிறது. அம்பின் அடியைத் தாங்கும் வீரர்கள் கூட இந்தக் கண் அம்பு தைத்து விட்டால் கதிகலங்கி விடுகிறார்கள். அம்பு தைத்த இடத்திலே தான் வலிகாணும். இந்தக் கண் அம்போ மயிர்க்காலுக்கு மயிர்க்கால் உடல் முழுவதும் வேதனையைத் தரும். மனம் தடுமாறும். தட்டாமாலை சுற்றும். அம்புக் காயம் பட்டவன், தாகம் எடுத்தால் தண்ணீர் குடித்துத் தாகத்தைத் தணித்துக் கொள்வான். கண் அம்பு பட்டவனுக்கோ எப்பொழுது பார்த்தாலும் தாகம், தாகம், தாகம்தான். பருகிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசை இருந்து கொண்டே இருக்கும். பருகப் பருகத் தணியாது தான். இப்படி அம்பு எய்துபவன் எதிரியா? இல்லை; உற்ற நண்பன். அல்ல; அன்பன். கண்ணெனும் சாத்தினால், எழில் என்னும் மறைவில் நின்று கொண்டு குறி வைக்கிறான். வெறும் அம்பை எய்பவன் எய்து கொண்டே இருக்கட்டும், நாமும் தாங்கிக் கொண்டே இருப்போம் என்று பார்த்துக் கொண்டே இருக்க மாட்டோ ம். ஆனால் இந்தக் கண்ணெனும் அம்பு கொண்டு யாராவது நம்மைத் தாக்குவார்களானால், அவரை நோக மாட்டோ ம். கடைக் கண் வீச்சு என்னும் இந்த அம்பு தைக்கத் தைக்க இதயத்துக்கு இனிக்கிறது. இன்னும் தைக்காதா என்று ஏக்கமுறவே செய்கிறது.

இப்படித் தன்னலந் தோய்ந்த காதலை வளர்த்த கவி, சிறுகச் சிறுகத் தெய்வக் காதலிலே மனத்தைச் செலுத்துகிறார். ஆயர்பாடிக் கோபிகைகள், ஆயர்குலச் செல்வன் மீது வைத்த அன்பு நினைவு வருகிறது. “சர்வம் பிரும்ம மயம் ஜகத்’ – “அகிலமனைத்தும் ஆண்டவனின் உருவம்’ என்னும் பேருண்மையைப் புலப்படுத்த நாடு எங்கிலும் வழங்கி வரும் கதையையே தமது கவிதைக்கும் நிலைக் களனாகக் கொள்கிறார்:

ஆயர்குல மங்கையொருத்தி தயிர்ப் பானையைத் தலையில் எடுத்துக் கொண்டு தயிர் விற்கப் புறப்படுகிறாள். அவள் கண்களிலே கண்ணன் நிறைந்திருக்கிறான். இதயத்தை வெண்ணெய் உண்ட வாயன் நிறைத்திருக்கிறான். எனவே, தன்னிலை மறந்த அவள், அவன் பெயரைச் சொல்லியே தயிர் விற்கிறாள். தயிருக்குப் பதிலாகக் “கண்ணன் வாங்கலையோ கண்ணன்’ என்று கூறுகிறாள். வாங்க வருகிறவளும் எப்படி என்கிறீர்கள்!… கண்ணனின் நினைவாகவே இருப்பவள். “இங்கே கொண்டு வா. என்ன விலை?’ என்று கேட்கிறாள். “எப்படி உறைந்திருக்கிறது? ருசியும் நன்றாயிருக்கிறதே!’ என்று மகிழ்கிறாள். நாமரசக் கரும்பு! இனிப்புக்குக் கேட்பானேன்? விருந்தாவனம் முழுவதும் “கனானந்த்’ என்னும் “இன்ப வாரிதி’ மேகமெனச் சூழ்ந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் சாதக பட்சிகள்! கார்முகில் வண்ணனையும் கனானந்த மேகத்தையும் கண்டு வருக. ஆயர்குல மங்கைகளின் வியாபாரப் பொருளாகவே ஆகி விடுகிறான் கண்ணன். “தயிரோ தயிரு’ என்பதற்குப் பதிலாகக் “கண்ணனோ கண்ணன்’ என்னும் கூப்பாடுதான் எங்கும் ஒலிக்கிறது!

இப்படிப்பட்ட கண்ணன் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியவனாகவும் தோன்றுகிறான். எட்டாக் கனியாகவும் காட்சி அளிக்கிறான். ஆடுபவனும் அவனாக இருக்கிறான். ஆட்டுவிப்பவனும் அவனாக ஆகி விடுகிறான். கண்ணன் லீலையைத்தான் புரிந்து கொள்ள முடிவதில்லையே!

இவ்வாறு மருகும் கவிக்கு அவனையல்லால் வேறு சரண் இல்லையெனத் தோன்றுகிறது. “ஆண்டவனே! என்னைப் போன்ற அறியாதவர்களை அறியவல்லவர் யாரே? என்னைக் காத்தருள்வாயாக’ என்று கூற வருபவர் மௌனம் சாதிக்கிறார். அதுமட்டுமா? தமது அந்த மௌனத்திலேயே தமது முறையீடும் வேண்டுகோளும் புதைந்திருப்பதாகக் கூறுகிறார். ஆண்டவன் கருணை என்னும் செவியுள்ளவன். அந்தச் செவிகளையே கண்களாகவும் உடையவன். பக்தனின் மௌன முறையீட்டைக் கருணை என்னும் செவிகள் வாயிலாகக் கேட்டு அருள் என்னும் நோக்கால் தீர்த்து வைக்கக் கூடியவன் என்னும் பொருள்படத் தமது எண்ணத்தை மௌன மொழியில் தெரிவித்துக் கொள்கிறார்…

உலகப் பற்றையே ஊன்றுகோலாகக் கொண்டு, உயர்ந்து வாழ முனைந்து, உன்னத நிலையை அடைந்த கனானந்தர் இயற்றிய பாடல்கள் பல. அவற்றில் நாம் ருசித்து ரசிக்க முயன்றவை ஒரு சில.

ரா. வீழிநாதன்

 

Leave a Reply