வேதமும் விழிப்பு உணர்வும்

விழாக்கள் விசேஷங்கள்

காரணம் அறியாமையே! விழிப்புணர்வைத் தந்து வளர்க்கும் வேதம் ஒரு சுயமுன்னேற்றம் காணச் செய்யும் நூல், வேதமே பக்தி இலக்கியம், வேதம் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டி என அறிந்தால் நாம் எவ்வளவு பெரிய துணையை வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று புரியும். அந்த உதவியை உதறித் தள்ளவும் மாட்டோ ம். குழம்பித் தவிக்காமல் தெளிந்து நிமிர்ந்து துணிந்து வாழ்க்கையைச் சந்திப்போம்!

வேதமும் வேதாந்தமும்

வேதம் வேறு; வேதாந்தம் வேறு. வேதம், முன்வினைப்படி வாழ ஓர் உடலுடன் வந்த நம்மை வாழச் சொல்லி ஊக்குவித்து வாழ்க்கை இன்பங்களை வளைத்து நேர்மையாக அனுபவிக்கத் துணைபுரியும் ஆசானாகும். விழிப்புணர்வை விதைத்து வெற்றி பெற வைப்பதாகும்.

“காவியைக் கட்டிக்கொள், கமண்டலம் ஏந்திக் கொள், காட்டிற்குப் போ’ என்று கட்டளை இடுவது வேதமில்லை! மாறாக, “பெரிய வீட்டைக்கட்டு, பேரழகான பெண்ணை மணந்துகொள், பெற்றவருடனும், உற்றவருடனும் சுகமாக நூறு வயது வாழ்க!’ என்று வாழ்த்துவதே வேதம்! அதாவது கடமையைக் கைவிடாமல் செய்துமுடிக்கச் சொல்வதே வேதம்.

வாழ்க்கைச் சுகம் கண்டபிறகு அதிலேயே தோய்ந்திராமல் மேலே அடுத்துள்ள ஆத்மதரிசனம் காணச் சொல்வதும், பரமாத்ம சேர்க்கைக்குப் பக்தி கொள்ளச் செய்வதும் வேதம்.

பேரின்பம் காண முன்னேறிய நிலையிலேயே வேத வாழ்க்கை முடிந்து வேதாந்தம் வருகிறது. வேதம் உலகில் வாழச் செய்தபிறகு வேதாந்தம் கடவுளில் வாழத் தூண்டுகிறது.

அப்போதுதான், துறவு, யோகம், தவம், தியாநம், ஞானம், பக்தியில் பழுத்தல் முதலியவை.

ஆனால் இந்த இரண்டையும் குழப்பிக் கொண்டு, வாழவேண்டிய சமயத்தில் விரக்தியை வளர்க்கவும், வைராக்கியம் கொள்ள வேண்டிய நேரத்தில் வாழ்வில் நப்பாசையையும் இன்றைக்கு நம்மவர் நினைப்பதால் இரண்டுங்கெட்டான் நிலையே கிட்டுகிறது. வாழ்வு சலிக்கிறது.

முன்வினை வாழவே

முன்வினை முடியாமல் முனிவனாதல் ஏது? முன்வினைப்படி வாழ்க்கையை நன்கு வாழுங்கள். அதற்கு வழிகாட்டும் வேதத்தை அறியுங்கள்.

கோயிலும் கடவுளும் எதற்கு? நாம் நன்றாக வாழத்தானே? காய்பழுக்கலாம்; பிஞ்சு பழுத்தால் அது வெம்பலாகிவிடும். ஆகவே, புலன்களால் நல்ல வாழ்க்கையை இறைவனை எண்ணிப் பிறர்க்குத் துன்பம் தராமல் அறப்படி அமைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் வினைகள் விலகும்.

யாகமும் அக்கினியும்

வேதத்தில் யாகம் என்பது, “நற்செயலில் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயலுதலே.’ மனிதன் நோக்கமின்றி வாழக் கடாது. ஆகவே, ஓர் இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுதலே யாகத்தில் அக்கினியை மூட்டுதல் – ஆவாஹணம் செய்தலாகும்.

செயலில் பிரியமில்லாமல் சோம்பிக் கிடப்பவனால் இன்பம் காண முடியாது. “நான் இதைச் செய்வேன̷் 0;’ “நான் விஞ்ஞானியா வருவேன்’ “நாட்டிற்குப் பாடுபடும் தியாகியாவேன்’ “நான் குறிப்பிட்ட சாதனை செய்வேன்’, “நான் எப்படியும் இந்தப் பெரிய நிலையை எட்டிப் பிடிப்பேன்’ “குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வருவேன்’ “மொழிக்கு, என் இன மக்களுக்குப் பாடுபடுவேன்’ என்ற மாதிரி ஏதாவது ஒரு சாதனையை வெற்றிகரமாகச் செய்து புகழோ, பொருளோ, சுகமோ பெற நிச்சயித்த உறுதி மேற்கொள்ளுதலே, உத்வேகத்தைக் கிளப்பி விட்டுக் கொள்ளுவதே, அக்கினியை வளர்த்தல். வாழ்வின் நோக்கமே இந்தத் தீ! (இதுவே விழிப்புணர்வு)

இந்திரனைப் போற்றுவோம்

நோக்கம் நிச்சயமானதும் அதுவரை ஊக்கமிராத மனம் பலம் பெறுகிறது. மனம் நோக்கம் பற்றியே நினைக்கிறது. ஒளி என்பது அறிவும், ஆனந்தமும் – இவை உடையதாக மனம் பலம் பெற நோக்கத்தை அடையும் விருப்பம்’ எனும் அக்கினியை அந்த ஒளிபொருந்திய மனமான இந்திரன் காக்கிறான். அவனுக்கு, மனமாகிய இந்திரனுக்கு உதவியாக தேவர்கள் வருகின்றனர்.

இந்தத் தேவர்களே, மனத்திற்கு அறிவுதந்து உதவும் ஐம்புலன்கள். இந்தப் புலன்களையும் அரக்கர் தாக்கி அழிக்காதபடி இந்திரனே வஜ்ராயுதத்தால் காக்கிறான்.

வஜ்ராயுதம் என்பது வேறொன்றுமில்லை, மனத்திடம் உள்ள வைராக்கியமே. ஆகவே நாம் ஒளிமிகு உள்ளமான இந்திரனைப் போற்றுவோம்.

அரக்கரின் தாக்கம்

அரக்கர்கள் தேவர்களைப் போரிட்டுத் தாக்குகின்றனர். இதில் தேவர்கள் வெற்றியும் பெறுவர், தோற்பதும் உண்டு.

புலன்களாகிய தேவர்கள் தோற்றால் நிலை என்னாகும்? பார்க்கலாமா?

அரக்கர் என்ற தீயசக்திகள் கண்களைத் தாக்கும் போது, தேவர்ஆகிய கண் தோற்றால் அசிங்கத்தை அறமற்றதைக் காணவும் கண்கள் கூசுவதில்லை. மூக்கு தோற்றால், அசிங்கத்தையும் முகர அலையும், நாக்கு தோற்றால் கெட்டதைப் பேச, கண்டதைத் தின்ன அலையும். காதுகள் தோற்றால் அசிங்கத்தைக் கேட்க ஆசை கொள்ளும். இப்படியே தேவர்கள் தோற்க மனமான இந்திரனும் தோற்று அரக்கத்தனம் அராஜகத்தை மனம் ஏற்கும். இது நமக்கு அழிவு. ஆகவே அரக்கரைத் தோற்கடிக்க இந்திரன் வ௤ராயுதம் கொண்டு வெல்ல அவனுக்குப் போற்றி நம்மை ஆஹுதியாக அளித்து, நம் உற்சாகத்தை அறத்தால் தூய்மைப்படுத்தி சோமபானமாக்கி இந்திரனுக்குத் தருவோம்.

ஆட்டுத் தோலானதில், சோமச்செடிச்சாறு வடிகட்டப்படுவது போல அறச்சிந்தனையால் புலன்களில் ஆசையை (ரசனையை) வடிகட்டி நல்லதில் ஈடுபாடு எனும் உற்சாகத்தை இந்திரனுக்கு அளிப்போம்.

இந்திரனின் குதிரை

பிராணாயாமாதிகளால், ஆறுகளில் ஓடும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது போல நாடிகளில் ஓடும் பிராணனை அடக்கி இந்திரனாகிய மனத்திற்குப் போருக்குச் செல்ல குதிரை எனும் வாகனமாக அளிப்போம். பிராணபலமுள்ள குதிரையேறி வைராக்கியம் எனும் வ௤ராயுதமேந்தி ஒளிமிகு மனமான இந்திரன் தீயசக்திகளான மட்டமான சங்கதிகளுடன் – அரக்கருடன் போர் செய்யப்படும். இந்திரன் வெற்றிபெற அக்கினியான நோக்கத்தை அடையும் ஆவல் ஓங்கிவளரட்டும்!

வேதயாகம்

இப்படி நற்செயல்களில் போரில் போல, நன்நோக்கத்துடன் மனம் ஈடுபட்டு மகோத்தமான வெற்றியை இனிய செல்வமும் சுகமும் உள்ள வாழ்க்கையாக அடையவேண்டும் என்பதையே யாகமாக வேதங்கள் முழங்குகின்றன.

சொர்க்கம்

வாழ்க்கையில் ஒரு பிடிப்பு அதன் ரசனையாக உண்டாவது அக்கினியான நோக்கம் (ஆசை) ஏற்பட்ட பிறகுதான். அறவழியில் வாழ்க்கையில் எண்ணியதை ஈடேற்றி இன்பம் காணுதலே, வாழ்க்கையை ரசித்தலே சோமபானம். இது எப்போதும் இந்திரனாகிய மனத்திற்கே நன்முயற்சியில் ஈடுபடல் எனும் யக்ஞத்தில் இந்திரனுக்கு அர்ப்பணிப்பு (ஆஹுதி) ஆகிறது.

ஆத்ம தரிசனம்

இப்போது பரவசமான உணர்வில் இந்திரன் சொர்க்கத்தைப் படைக்கிறான். அதில் ஆத்மா ஒளி பொருந்திய சூரியனாக இந்திரனால் நிறுவப்படுகிறது. இதுவே வாழ்வின் நோக்கம். இதை எட்டிய பிறகு வாழ்வில் துக்கமில்லை. மனத்தில் இருள் இல்லை.

முதலில் “நோக்கம்’ அடைய என ஓர் ஆசைப்பிடிப்பை விழிப்புணர்வை அக்கினியாக மூட்டினோம். பிறகு, புலன்களும், மனத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, வைராக்கிய விவேகத்தால் மனம் தூயதாகி தீயவற்றை அசுரரைப் போல அழித்து, விவேகமும், துணை செய்ய இந்திரனாகிய மனம் ஆத்ம சூரியனை ஆநந்த சொர்க்க வாழ்வில் நிறுத்தும் நிலையைப் பெற்று உயர்ந்தோம்.

இறைவனருள்

இதற்கு, மோட்ச உலகை மூன்று பங்காகக் கொண்டு துன்ப நிழலும் இல்லாத ஒளிமிகு கோடி சூர்யப்பிரகாச மோட்ச உலகில் இருந்தபடிக்கு தம் அருளை, ஒருபங்கு பூ உலகில் வாழும் ஜீவரின் இதய நிலத்தில் துளியக்கினியாக “உயரவேண்டும்’ “மேன்மைபெற வேண்டும்’ என்ற எண்ணமாகத் தோற்றுவித்து, படிப்படியாக அவரை உயர்த்தி ஜீவர்களின் (நம்) நலம் கருதியே எல்லா வேலைகளையும் புரிகிறவனே இறைவன். நம்மை உய்விப்பது தவிர வேறுவேலையே இல்லாதவன் என ருக்வேதம் முழங்குகிறது.

வாமனாவதாரம்

உலகமெல்லாம் அசுரரின் ஆக்ரமிப்பிற்கும் வந்துவிட்டது – இதயமெல்லாம் இருள் சூழ்ந்த நிலைபோல! மூவுலகையும் மாவலி வென்று அசுர சாம்ரா௤யத்தை நிறுவி விட்டான். யார் மீட்பது? தேவர்களுக்குக் குடியிருப்பே இல்லை. இந்த நிலையில் தேவர்கள் தமக்கென சிறு இடமாவது வேண்டும் என்று கேட்டனர். மாவலி நல்லவன் தந்துவிட்டான். கிழக்கே சிறு இடம் தந்தான். அங்கே தேவர்கள் அக்கினியைச் சிறு அளவில் நிறுவினர். கிழக்கே வெளுத்து, பிறகு சிவந்தது. “உஷை’ எனும் அழகும் இளமையும் கொண்ட காலைத்தேவி பிறந்தாள். இருளை போர்வையைப் போல விலக்கினாள். கிழக்கில் நிறுவப்பட்ட அக்கினி, சூரிய தேவனாகி சிறுகச் சிறுக கிரணங்களைப் பரப்பி, கீழ், மேல், பக்கங்களில் என்று உலகம் முழுவதையும் பகலாக்கிவிட்டான். கிழக்கு, உச்சி, மேற்கு என மூன்று பகுதிகளும் ஒளியாயிற்று.

இப்படித்தான், வாமனாவதாரமான திருமால், ஐந்து வயதுப் பாலகனாய், சிறிய பாதங்களுடன் குறள் வடிவமாக மாவலியிடம் போய் “என் திருவடிகளால் மூன்றடி வைப்பு மண் வேண்டும்” என்று யாசித்தான். வாமனனின் மழலை மொழிகேட்டு மயங்கி மாவலி தந்துவிட்டான். உடனே ஓங்கி வளர்ந்து திரிவிக்கிரமனான வாமனன் ஓரடியால், பூவுலகம், கீழுள்ள உலகங்களையும் அளந்து விட்டான். “மூன்றாம் அடிவைப்பு எங்கேயோ? அதை திரிவிக்ரமா, நீயே அறிவாய்” என்கிறது ருக்வேதம். மேலும், ருக்வேதம், திரிவிக்ரமன் வாமனனாய் வந்து மழலை சொன்னானல்லவா, அதில் மயங்கி நிலம் அளித்ததை, “சந்தஸ்’ துணையால் திரிவிக்ரமன் மாவலியின் நிலம் பறித்தான் என்கிறது. (ருக். 1, 7, 10 மண்டலம் – விஷ்ணுசூக்தங்கள்) த்ரிணீ பதா விசக்ரமே’ (ருக்மந்திரம்) பகவானே அறிவான் ஆகையாலேயே ஸ்ரீ ஆண்டாளும், நாச்சியார் திருமொழியில்

“கொண்ட கோலக்குறளுருவாய்ச் சென்று

பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்

அண்டமும் நிலனும் அடியொன்றினால்

கொண்டவன் வரில் கூடிடு கூடலே”

என்றிருப்பதைக் காட்டி ஒருவர் பட்டரிடம் “மூவடி அளக்கவில்லையோ?” என்க, பட்டர், ருக்வேத மந்திரமான “பரோ மாத்ரயா தனுவா…” துதியைக் காட்டி, “மூன்றாம் அடிவைப்பை வேதபுருஷனும் தெரியாது என, “பகவானே அறிவான்” என்று விட்டான்” என சமாதானம் கூறினாராம்.

கடவுள் கருணை

அப்படி அவன் திருவடியால் உலகங்களை ஒரு தாய் தன் குழந்தையை அணைப்பது, தடவுவது போலவே, அருளால் மெல்லத் தடவினார். “பகவான் அருளவே திருவடியில் அளந்தது” என சாயனரும் வேதப் பொருளிட்டார். ஆகவே வேதமே பக்தி இலக்கியம் எனப் புரிகிறது.

“பகவானைச் சரணடை என்கிறது வேதம். பிறகு சரணடையும் புத்தியையும் பகவானே அருளவேண்டும்” என்றும் பிரார்த்திக்கிறது. இதனால் “மகாவிச்வாசம் இருந்தால் சரணாகதி செய்யலாம். அதையும் பகவான் தரவேண்டும்! இது கடவுளின் கருணை, என்று உபாயமும் (வழியும்) உபேயமும் (பயனும்) இறைவனே என்று காட்டி விடுகிறது வேதம்.

உள்ளத்து ஒளி

இதை மெய்ப்பிப்பதாக கடவுள் தம் கருணையால் மனிதரின் உள்ளத்தில் சிறு ஒளியை அனுப்பி வைக்கிறார். அது ஓர் உயர்ந்த எண்ணமாக உண்டாகிறது. இதுவே அக்கினி. இதை மனிதர் போற்றி, முதலில் நாம் பார்த்ததுபோல், மனம், புலன்களை ஒரே திசையில் திருப்பி, தீயவற்றில் திரும்பாமல், இலட்சியத்தை எட்ட வேண்டும். அதை நாம் செய்வதற்கு ஏற்ப கடவுளின் கருணை அதிகமாக, இந்திரன் தேவர்கள் மூலம், அவர்கள் உள்ளிருந்து கிட்டுவதாக, மனம், புலன்களில் இறைவனருள் பிரவகித்து, மேலும் மேலும் நம்மை உயர்ந்தவற்றில் ஈடுபடுத்தி, வாழ்க்கையில் வேண்டியதை அளித்து ஈடுபட்டதில் வெற்றிபெறச் செய்து முழு வாழ்க்கையிலும் நிறைவை ஏற்படுத்தி ஆன்ம சூரியனையும் காணவைக்கும்.

உள்ளத்து ஒளி இதயம் முழுவதும் பரவி, கடவுளை அதில் காணவும் வைக்கும். உள்ளத்து ஒளி பிறப்பதே உஷை யெனும் காலை மகள். இவள் அறியாமை எனும் போர்வை இருளைப் போக்குவாள். திரிவிக்ரமாவதாரம் போல இந்த ஒளி பரவி உள்ளம் முழுவதும் ஆத்ம ஒளியால் பகலாகும்.

உள்ளத்தொளியை அக்கினி போல மூட்டி,  நேரிய வழியில் சாதித்து வாழ்க்கை ரசனை எனும் சோமபானம் அருந்தி வேதம் கூறும் வழியில் விழிப்பு உணர்வைப் பெற்று வாழ  இறைவன் துணை புரியட்டும்.

-ஸ்வாமி

 

Leave a Reply