வேதத்தில் விண்மீன்கள்

விழாக்கள் விசேஷங்கள்

 

உடலைச் சுடும் பகலவனின் ஆதிக்கம் நீங்கி மென்மையான இருள் பரவுவதால் உலகமே இரவில் ஒரு மாயப் போர்வையைப் போர்த்துக் கொள்கிறது.

இப்படிப்பட்ட இரவுக்கு அழகு சேர்ப்பவை எவை என்று கண்டுபிடிப்பதற்கு நாம் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். சற்று அண்ணாந்து பார்த்தாலே போதும். கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து நம்மை நோக்கிக் கண் சிமிட்டும் நட்சத்திரங்களால் தான் இரவுப் பொழுதே பொலிவு பெறுகிறது என்று திண்ணமாகச் சொல்லலாம்.

மனத்திற்கும் எட்டாத தூரத்தில் இவை இருந்தாலும் நம் வாழ்க்கையில் இத் தாரகைகள் செலுத்தும் ஆதிக்கம் அளவிட முடியாதது. யார் யாருக்குக் கணவனோ மனைவியோ ஆகப் போகிறார்கள், எப்போது சுபகாரியங்களைச் செய்ய வேண்டும், தவிர்ப்பதற்குரிய நாட்கள் எவை – இவற்றையெல்லாம் தீர்மானிப்பது இந்தத் தாரகைகளே. மணப்பொருத்தம் பார்க்கும்போது “தாரா பலன்” என்னும் நட்சத்திரப் பொருத்தம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாத்திரத்தின்படி ஒருவரது குணநலன்கள், இப் பிறப்பில் அவரை எதிர்நோக்கவுள்ள நன்மை தீமைகள், ஆகியவை அவர் பிறக்கும் நாளில் மேலோங்கி நிற்கும் நட்சத்திரத்தைப் பொறுத்தவை.

விண்வெளியில் மின்னும் தாரகைகள் எண்ணிறந்தவையாய் இருந்தாலும் சாத்திரங்கள் இவற்றுள் 27 நட்சத்திரங்களை மிக முக்கியமானவையாய் குறிப்பிடுகின்றன. சுடர்மிகு சுருதியான வேதம் இந்த இருபத்தியேழை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறது – கிருத்திகையிலிருந்து விசாகம் வரையுள்ளவை தேவ நட்சத்திரங்களாகவும் அநுஷத்திலிருந்து பரணி வரை உள்ளவை யம நட்சத்திரங்களாகவும் போற்றப்படுகின்றன. இவற்றைப் பற்றி வேதம் கூறும் சில வியப்புக்குரிய தகவல்களைப் பார்ப்போமா!

தற்காலத்தில் நட்சத்திரங்களை எண்ணும்போது அச்வினி, பரணி என்று நாம் ஆரம்பித்தாலும் முதல் தாரகையாக வேதம் கொள்வது கிருத்திகையைத்தான் “க்ருத்திகா; ப்ரதமம்” என்கிறது தைத்திரீய ப்ராஹ்மணம். ஆனால் முருகப் பெருமான் பிறந்த இந்த நட்சத்திரத்தை வேதம் ஏனோ சுப காரியங்களுக்கு ஏற்றதாகக் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் அதை ஆளும் “அதி தேவதை” ஒன்றுண்டு. அதன்படி க்ருத்திகையின் தேவதை தொட்டவை எல்லாவற்றையும் சுட்டெரிக்கும் அக்னி பகவான். ஆகையால் தான் நன்முயற்சிகள் எவற்றையும் இந்த நட்சத்திரத்தில் தொடங்குவதில்லை போலும்!

அடுத்து வருவது தனிப்பெருமை கொண்ட தாரகையான ரோஹிணி. ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவின் பிறப்பால் அளவற்ற ஏற்றம் கொண்ட நட்சத்திரம். ப்ரஜாபதி என்றழைக்கப்படும் பரமாத்மாவையே தேவதையாகக் கொண்ட இந்த நட்சத்திரத்தை தேவர்கள் மிகவும் விரும்புகிறார்களாம் – “ப்ரியா தேவானாம்” என்கிறது வேதம்.

கண்ணன் ரோஹிணியில் பிறந்தான் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது ஸ்ரீமத் பாகவத புராணம். ஆனால் ஆழ்வார்கள் இதுபற்றி வேறு விதமாகவும் பாடுகிறார்கள். ஸ்ரீ பெரியாழ்வார் தனது திருமொழியில் கண்ணனை நோக்கி “நீ பிறந்த திருவோணம்” என்கிறார். “திருவோணமாகிய இன்று உனக்கு பிறந்தநாள். இன்றாவது நீ நீராட வேண்டாமா!” என்று யசோதைப் பிராட்டி கண்ணனிடம் மன்றாடுவதாக பாசுரமிடுகிறார் பிள்ளைத்தமிழ் பாடுவதில் முன்னோடியான பெரியாழ்வார். இன்னும் சில பாசுரங்களிலும் திருவோணமே குட்டிக் கண்ணனின் தாரகை எனக் கூறப்பட்டுள்ளது. “திண்ணார் வெண் சங்குடையாய்! நீ பிறந்த திருவோணம்”, “அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்” (ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து கணக்கிட்டால் பத்தாவதாக வருவது திருவோணம்).

நமக்குக் குழப்பமாக உள்ளது. புராணம் பொய் சொல்லாது; ஆழ்வார்களோ மாசற்ற மதிநலம் உடையவர்கள். அப்படியானால் கண்ணன் தோன்றியது ரோஹிணியிலா? திருவோணத்திலா?

உண்மை என்னவென்றால் ச்ரவண (திருவோண) நட்சத்திரத்தை எம்பெருமானுடைய சொந்தத் தாரகையாகக் கொண்டாடுகிறது வேதம். இதற்கு அதிபதி ஆதிமூலமான மஹா விஷ்ணுவே – “ச்ரோணா நக்ஷத்ரம் விஷ்ணு: தேவதா” என்கிறது மறை. ஆகையால் இறைவன் எந்த அவதாரம் எடுத்தாலும் அந்தத் தாரகை திருவோணத்தின் அம்சமாகவே கொள்ளப்படுகிறது. இதற்கு இன்னொரு உதாரணம் நரசிம்ஹ அவதாரம். சிங்கப்பிரான் தோன்றியது ஸ்வாதி நக்ஷத்திரத்தில் என்று சிறு குழந்தை கூடச் சொல்லும். ஆனால் பெரியாழ்வாரோ நரசிங்கன் அவதரித்தது திருவோணத்தில் என்கிறார். (“திருவோணத் திருவிழாவில் அந்தியம் பொழுதில் அரியுருவாகி அரியை அழித்தவன்”). ஆக, எம்பெருமான் எந்த நட்சத்திரத்தில் தோன்றினாலும் அது திருவோணமாகவே பாவிக்கப்படுகிறது. இந்தத் தாரகையின் பெருமை சொல்லில் அடங்காது. வாமனனாகவும் ஹயக்ரீவனாகவும் அவதாரம் செய்த போதும் பெருமாள் தேர்ந்தெடுத்தது திருவோணத்தைத் தான்.  புண்ணியத்துக்கே இருப்பிடமாக வேதத்தால் போற்றப்படுகிறது திருவோணம். இதன் கீழ் பிறந்தவர்கள் பெருமையும் வலிமையும் மிக்கவராய் உலகையே ஆளும் திறன் படைத்தவராய்த் திகழ்வர் என்கிறது திவ்யப்ரபந்தம் “திருவோணத்தான் உலகாளும் என்பார்களே.”

மஹிமை பொருந்திய மற்றொரு நட்சத்திரம் புணர்வஸு ஆகும். ரகுகுல திலகனும் ஆதர்ச புருஷனுமான ஸ்ரீராமன் தனது தோற்றத்தால் பெருமைப்படுத்திய தாரகையான புனர்வஸுவின் அதிதேவதை இமையோர்களுக்கெல்லாம் தாயான அதிதி. உலகுக்கே ஆதாரமாக இந்நட்சத்திரத்தைப் போற்றுகிறது சுருதி.

நரம் கலந்த சிங்கமாய்த் தோன்றிய நரஸிம்ஹனின் அவதார நட்சத்திரமான ஸ்வாதீ, நம் எதிரிகளைத் தோற்றோடும்படிச் செய்ய வல்லதாம். அது மட்டுமல்ல – சிங்கப்பிரானின் அருளால் நல்லன அனைத்தையும் அளிக்கவல்ல இந்த நட்சத்திரத்தில் தோன்றியவர்கள் தான் கருட பகவானும் ஸ்ரீ பெரியாழ்வாரும்.

சிவபெருமானின் பிறப்பால் பெருமை பெற்றது திருவாதிரை. மூல நட்சத்திரத்தைப் பலர் ஏற்காவிட்டாலும் கல்வித் தெய்வமான ஸரஸ்வதியும் திறன் விளங்கு மாருதியான அநுமனும் தோன்றியது மூலத்திலேதான்.

நட்சத்திரங்கள் 27 என்றுதானே நாமெல்லாம் நினைப்பது? அல்ல, 28 என்கிறது வேதம். உத்திராடத்துக்கும் திருவோணத்துக்கும் இடைப்பட்டதான “அபிஜித்” என்ற இந்த 28வது நட்சத்திரம், படைப்புக் கடவுளான நான்முகனுக்கே ஊக்கமளித்தபடியால் இத் தாரகையில் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்கிறது வடமறை.

இப்படி நட்சத்திரங்கள் அனைத்தையும் பற்றி வியப்பளிக்கும் செய்திகள் பல இருந்தாலும், விரிவுக்கஞ்சி கடைசி நட்சத்திரமாக வேதம் கணக்கிடும் பரணி (அபபரணி.) நினைத்தாலே அச்சமூட்டுபவரும் அழையா விருந்தாளியாக வந்து அனைவரது உயிரையும் பறித்துச் செல்பவருமான யமதர்மராஜா, பரணியின் அதிதேவதை. செய்வினைகளுக்கேற்ற தண்டனையை பாரபக்ஷமின்றி வழங்கக் கடமையாற்றும் தர்ம தேவதையை உலகுக்கெல்லாம் தலைவனாகப் போற்றுகிறது வேதம்.

ஆனால், எல்லோர் உயிரையும் பறிக்கும் யமனின் பாசக்கயிற்றுக்கு வசப்படாதவரும் உண்டு என்றால் வியப்பாக இல்லை! விஷ்ணு பகவானின் மெய்யடியார்களிடம் தனது ஆதிக்கம் செல்லாது என்று யமனே கூறுகின்றானாம். “யாரை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள், விஷ்ணு பக்தர்களை மட்டும் தொடவே வேண்டாம்” என்று தன் ஏவலர்களிடம் யமன் கூறுவதை மெய்ப்பிப்பது யாவரும் அறிந்த அஜாமிளனின் வரலாறு.

பால் மணம் மாறாத பாலப் பருவத்திலேயே பக்தி மேலீட்டால் கடுந்தவம் புரிந்து பரமனது அருள் பெற்ற துருவன் வழிகாட்டும் நட்சத்திரமாக விண்ணில் ஒளி சிந்துகிறான். வேதம் போற்றும் மற்றொரு விண்மீன் அருந்ததி ஆகும். கற்புடை மாதருக்கெல்லாம் இலக்கணமாகக் கூறப்படும் அருந்ததியை மணமக்கள் காணாமல் விவாகச் சடங்குகள் முற்றுப் பெறுவதில்லை.

பரம்பொருளின் படைப்பில் நட்சத்திரங்களின் இடம் மிக உயர்ந்ததாகும். தொலை தூரத்திலிருந்து சுடர் விடும் இந்த விண்மீன்கள் ஸாக்ஷாத் பரமாத்மாவின் உருவமே என்கிறது வேதத்தின் தலைசிறந்த பாகமாகக் கருதப்படும் புருஷ ஸுக்தம் (“நக்ஷத்ராணி ரூபம்”).ஹஸ்த நட்சத்திரம் இறைவனது திருக்கைகளாகவும், சித்திரை அவனது சிரமாகவும், ஸ்வாதி கருணை பொங்கும் அவனது இதயமாகவும், விசாகம் அவனது அழகிய துடைகளாகவும் போற்றப்படுகின்றன. இவ்வாறுநட்சத்திரங்களை பரமாத்மாவின் ஒப்புயர்வற்ற உருவமாக உபாசிப்பவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அறிய வேண்டியவை அனைத்தையும் அறிந்தவராவர் என்கிறது வேதம்.

கோவை சடகோபன்

 

 

Leave a Reply