காவியங்களில் உவமைகள் இடம் பெறுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் அருட்பா போன்ற அனுபவ வெளிப்பாட்டுத் திருமுறைகளில் அழகான உவமைகளும் உள்ளன என்பது வியப்பிற்குரியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஞானியாகிய வள்ளல் பெருமான் திருவருட்பாவில் பல உவமைகளைப் போகிற போக்கில் தெளித்திருக்கிறார்.
தெய்வமணிமாலையில் ஒரு உவமை. ஒரு காக்கையை வைத்துச் சொல்ல வந்ததை அழகாகச் சொல்லிவிடுகிறார் வள்ளலார். காக்கைகள், கிடைக்கும் இடத்தில் அமர்ந்து ஓயாது கரைந்து கொண்டே இருக்கின்றன. சற்று நேரம் கழித்து ஒவ்வொன்றாகப் பறந்து போய்விடுகின்றன. பிறகு ஏதோ ஒரு மரக்கிளையிலோ, மதிலிலோ, வீட்டுச் சுவர்மீதோ அமர்ந்து மறுபடியும் கரைகின்றன. இதை யாராவது சட்டை செய்கிறார்களா? நமக்கு அதன் பொருளும் புரிவதில்லை. இந்தக் காக்கைகளைப் போல, பொருளில்லாமல் பேசிப் பேசிப் பொழுதைக் கழிக்கின்றனர் சிலர். தர்க்க வாதங்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இறைவனின் பெருமையைப் பேச வேண்டிய நேரத்தில் மௌனிகளாகி விடுகின்றனர். இது வள்ளலாரின் ஆதங்கம்.
கரையில் வீண் கதை எலாம்
உதிர்தரு காக்கைபோல் இருப்பர்
வரையில் வாய்கொடு
தர்க்கவாதம் இடுவர்;
சிலமணம் கமழ் மலர்ப்பொன் வாய்க்கு
மவுனம் இடுவர̷் 0;
– இது அருட்பா.
வள்ளல் பெருமானின் “அவா அறுத்தல்’ பகுதியைப் படித்தாலே நமக்கு வயிறு நிறைந்து விடும். சுவையான உணவு வகைகளை அடுக்கி நம்மை வியக்க வைப்பார். ஆனால் அப்படி வகை வகையாகச் சாப்பிடுவது மட்டும் தான் வாழ்க்கையா? என்று “பிரசாத விண்ணப்பம்’ பகுதியில் கேள்வி கேட்கிறார். எப்போது பார்த்தாலும் சிலர் சாப்பாட்டு நினைவாகவே இருப்பர். சிற்றுண்டி, உணவு, நொறுக்குத் தீனி, பழங்கள், சிற்றுண்டி, உணவு என இடைவெளியே இருக்காது.
மகாத்மாவின் ஆசிரம வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் உணவைக் குறைத்து வருவதைப் பார்த்த ஜம்னாலால் பஜாஜ் ஒரு நாள் கேட்டார். “பாபுஜி… ஆசிரமத்தில் தான் எல்லாம் கிடைக்கிறதே; பின் ஏன் உணவைக் குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’
“கிடைக்கிறதே என்று சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியுமா?’ என்று காந்திஜி திருப்பிக் கேட்டார்.
ஏதேனும் சாப்பிட்டபடியே வயிற்றை நிரப்பிக் கொண்டிருப்பவர்களைத் தன்னை முன்னிறுத்தி வள்ளற் பெருமான் சாடுகிறார்.
“குழிக்கு மண் அடைக்கும் கொள்கைபோல்
பாழும் கும்பியை ஓம்பினேன்’ என்பது அருட்பா.
குழியை நிரப்பிட மண்தள்ளும் போது யாராவது கணக்குப் பார்ப்பார்களா? மண்ணைத் தள்ளத் தள்ளக் குழி வாங்கிக் கொண்டே இருக்கும். நினைத்து நினைத்து இந்த உவமையை ரசிக்கலாம்.
இரண்டாம் திருமுறையில் ஒரு அழகான உவமை. இதைக்கூடத் தன்னை முன்னிறுத்தியே வள்ளற் பெருமான் எடுத்துரைக்கிறார்.
மக்களில் சிலர் தங்களைத் தருமவான் போலக் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் மனம் தூய்மையானது அல்ல. தங்களது போலிச் செயல்களால் இறைவனையே கட்டிப் போட்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். தூய்மை இல்லாத மனதில் இறைவன் தங்குவதில்லை. இதைச் சொல்ல ஒரு உவமையைப் பயன்படுத்துகிறார் வள்ளலார்.
“போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப்பவன் போலப்
புலைய நெஞ்சினேன், புனித நின் அடியைச்
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன்…’
பானைக்குள் பொற்காசுகளைப் போட்டு வைத்தால் பத்திரப் படுத்தலாம். பேழைக்குள் வைத்தாலும் தப்பலாம். ஓடுகிற தண்ணீரில் பொற்காசுகளைப் போட்டால் என்ன ஆகும்? வெள்ளத்தில் போட்ட பொற்காசு சேமிப்பு ஆகாது என்பதைப்போல, தூய்மை இல்லாத மனதில் நாம் விரும்பினாலும் ஆண்டவனைத் தங்க வைக்கமுடியாது என்கிறார் வள்ளலார்.
வள்ளற் பெருமான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததாக ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. ஏழு கிணறு பகுதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் ஒரு சாது அமர்ந்திருப்பாராம். அந்த வழியாகப் போகும் நபர்களை, “இதோ குரங்கு போகிறது, நாய் போகிறது, மாடு போகிறது’ என்றெல்லாம் மற்றவர்களிடத்தில் சொல்வாராம். ஒருநாள் வள்ளலார் அந்த வழியாகப் போனபோது, “இதோ, மனிதன் போகிறான்’ என்று கூறினாராம். இலக்கணப்படி உயர் திணையாகக் கருதப்பட்டாலும் குணாதிசயங்களைச் சிலர் அஃறிணை உயரினங்களாகவே மதிப்பிட்டார்கள். வள்ளற் பெருமானும் எருது, காக்கை, கழுதை எனச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்.
இப்பொழுது ஒரு கழுதையை அருட்பா படம் பிடிக்கிறது. பொதுவாகக் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள். வள்ளல் பெருமானே ஒரு இடத்தில் “குங்குமம் சுமந்த கழுதை’ எனக் குறிப்பிடுகிறார். கழுதை தன் போக்கில் போய்க் கொண்டு இருக்கும். பொதி மூட்டையும் பொன் மூட்டையும் அதற்கு ஒன்றுதான். அதுவும் கிழக்கழுதை என்றால் கேட்கவே வேண்டாம். அதைவிட மோசம் அந்தக் கழுதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது.
வள்ளற் பெருமான், மண்ணாசை பிடித்து மேலே மேலே வீடும் மனையுமாய் வாங்கிச் சேர்த்துக் கொண்டே போவோரைக் குறை கூறுகிறார். செய்தித்தாளைப் பார்த்து வீட்டு மனைகளை வாங்கிச் சேர்ப்போர், எதுவும் தங்களோடு வரப்போவதில்லை என்று அறிய மாட்டார்கள். இவை யாவுமே தங்களுக்கு நிரந்தரமான சொந்தம் இல்லை என்பதையும் உணரமாட்டார்கள். அவர்கள் நிலை எப்படி உள்ளது?
மண்ணைக் கட்டிக் கொண்டே அழுகின்ற நம்
மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக்கொண்டு ஊர் வழிபோம் கிழக்
கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே.
அருட்பாவை ஆழ்ந்து படிப்பவர்கள், இன்னும் பல உவமை அழகுகளைக் காண்பர் என்பது உறுதி.