சரணாகதி தத்துவம்
‘சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச் செழும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான்.
அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி பார்த்தன் மாமணித் தேர்விடும் பாகனாய்” நன்கமர்ந்து கீதையாம் அமுதமொழியில் அதையே பலவாறாக மொழிந்து அருளினான்.
‘வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்சந்தி” என்பது வேதவாக்யம். இதன் பொருள் “கொல்லத் தகுந்த குற்றமே செய்ருந்தாலும் அடிபணிந்வனைக் காட்டிக் கொடுப்பதில்லை” என்கிறது மறை. இதை விளக்கவே ஸ்ரீராம கிருஷ்ண அவதாரம் தோன்றிற்று.
சுவாமி ஸ்ரீதேசிகன் தாம் இயற்றி அருளிய அபயப்ரதான ஸாரம்’ என்ற நூலில், ஸ்ரீமத் ராமாயணத்தில் சரணாகதி அஞ்சுருவாணியாய் கோர்க்கும் பட்டது என்கிறார்.
ஸ்ரீமத் ராமாயணம் ஒரு தேர் என்று எடுத்துக்கொண்டால் அதனுடைய சட்டங்களையெல்லாம் சேர்த்து இடையிலே கடை ஆணி போடப்பட்டுள்ளது. அக்கடையாணிதான் சரணாகதி என்பது. சரணாகதி என்கிற ஆணியை ராமாயணத்தில் எடுத்துவிட்டால் ராமாயணமாகிற தேர் நிலைகுலைந்து விழுந்துவிடும் என்கிறார் அவர்.
ஸ்ரீபாலகாண்டத்தில் தேவர்கள் அனைவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடன்
செய்யும் சரணாகதி. அதே பாலகாண்டத்தில் ஸ்ரீதசரத சக்ரவர்த்தி, ஸ்ரீபரசுராமரிடம் செய்யும் சரணாகதி.
ஸ்ரீ அயோத்யா காண்டத்தில் ஸ்ரீ சீதாபிராட்டியின் முன்பு ஸ்ரீலக்ஷ்மணன், ஸ்ரீ ராமபிரானிடம் செய்யும் சரணாகதி அயோத்யா காண்டத்தில் ஸ்ரீவசிஷ்டர் முதலானோர்களை முன்னிட்டுக் கொண்டு சித்திரகூட பர்வதத்தில் ஸ்ரீ பரதன் ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி.
ஸ்ரீ ஆரண்ய காண்டத்தில் தபோதனர்கள் ஆன மகரிஷிகள் அனைவரும் ஸ்ரீராமபிரான் இடம் செய்த சரணாகதி அடுத்து கிஷ்கிந்தா காண்டத்தில் வானர
தலைவனான ஸ்ரீசுக்ரீவன் ஸ்ரீராமனிடம் செய்த சரணாகதி
ஸ்ரீ சுந்தரகாண்டத்தில் ஸ்ரீவிபீஷணன்,
ராமனிடம் செய்த சரணாகதி. அதே
காண்டத்தில் ஸ்ரீராமன், சமுத்ர ராஜனிடம்
செய்த சரணாகதி. ஸ்ரீஉத்தரகாண்டத்தில் தேவர்கள் திருப்பாற்கடலில் ஸ்ரீமன் நாராயணனிடம் செய்த சரணாகதி.
இப்படி ஸ்ரீமத் ராமாயணத்தில் காண்டம் தோறும் சரணாகதி அழுத்தம் திருத்தமாக பேசப்பட்டது அதை நன்கு கவனிக்க வேண்டும் அதனால்தான் ஸ்ரீமத் இராமாயணத்திற்கு ஸ்ரீ சரணாகதி சாஸ்திரம் என்றே பெயர் அமைந்தது
ஒரு பெரும் சபையில் பண்டிதர்கள் பலர் அமர்ந்து இருந்தார்கள். அதில் சில பேர் தர்க்கம் தெரிந்தவர்கள் சிலர் வியாகரணம் படித்தவர்கள் சிலபேர் மீமாம்ஸா சாஸ்திரம் கற்றவர்கள் இவர்களிடையே ஒருவர் வந்து அமர்ந்தார் இவரைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது அவர்கள் அவரிடம் “கஸ்மிந் சாஸ்த்ரே ரசோஸ்தி?’. ‘ நீங்கள் எந்த சாஸ்திரத்தில் வல்லுநர் என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “சரணாகதி சாஸ்த்ரே” சரணாகதி சாஸ்த்திரத்தில் என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் அத்துணை சாஸ்த்திர வல்லுனர்களும் திகைத்தனர்.
சாஸ்திரங்கள் உலகில் புகழ்பெற்றவைகள். ஆனால் ‘நீங்கள் சொல்லும் சரணாகதி சாஸ்த்திரம் என்பதை நாங்கள் கேள்விப் பட்டதே இல்லையே!’ என்றனர்.
அப்போதுதான் இந்தப் புதுவித்வான், “இது தெரியாதா உங்களுக்கு? மற்ற சாஸ்திரங்கள் கற்று பிரயோஜனமில்லையே! ”சரணாகதி சாஸ்த்திரம்” தெரியவில்லை என்றால் மற்றைய சாஸ்த்திரங்கள் இருந்தும் பயனில்லை.
எல்லா சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தாலும், ராமாயணம் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை என்பது இதன் மூலம் காட்டப்பட்டது.