108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் மலைநாட்டு திவ்ய தேசங்களில் பழமையான கோயிலான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் நடைபெறுகிறது.
ஆண்டில் இருமுறை ஆராட்டு உற்சவம் நடைபெறும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவப்பெருமாள் கோவில் கடந்த ஆண்டு ஜூலை 6.ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தென்னிந்திய அளவில் வைணவ பக்தர்களிடையே மிகவும் முக்கியமான திருக்கோவிலாக இக்கோவில் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதக்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
பங்குனித்திருவிழாவின் முதல் நாளான நாளை(27.ந்தேதி) காலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், காலை 8.45லிருந்து 9.21 மணிக்குள் வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்று, மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.
2.ம் நாள் (28.ந்தேதி) காலை 8 மணிக்கு நவநீத நாராயணீய சமிதி வழங்கும் நாராயண பாராயணம், மலை 6 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி, 3.ம் நாள் (29.ந்தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 6. மணிக்கு நம்மாழ்வார் குறித்து ஆன்மீக சொற்பொழிவு, இரவு 7.45 மணிக்கு தேவார பஜனை, இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி ஆகியன நடக்கிறது.
நான்காம் நாள் (30.ந்தேதி) காலை 8 .மணிக்கு பாகவத பாராயணம், இரவு 7 மணிக்கு சங்கீத நாட்டியம் இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல்,இரவு 10 மணிக்கு நளசரிதம் கதகளி, 5.ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, இரவு 7.30 மணிக்கு பரத நாட்டியம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று, தொடர்ந்து கருடவாகனத்த்தில்சுவாமி பவனி வருதல், கல்யாண சவுகந்திகம் கதகளி ஆகியனவும், 6.ம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 7.15 மணிக்கு பரத நாட்டியம் 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கர்ணசபதம் கதகளி ஆகியனவும் நடக்கிறது.
7.ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம் காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் தொடர்ந்து கீசக வதம் கதகளி ஆகியன நடக்கிறது.
8.ம் நாள் இரவு 7 மணிக்கு டான்ஸ், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10.30 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளி,9.ம் நாள் ( ஏப்ரல் 4ந்தேதி) இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை க்கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், இரவு 12 மணிக்கு கிராதம் கதகளி நடைபெறும்.
10. நாள்( ஏப்ரல் 5.ந் தேதி) காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல், கழுவன் திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச்சென்று மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு நிகழ்ச்சி, ஆறாட்டு முடிந்து கோவிலுக்கு சுவாமி திரும்புதல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.