திராவிட தேசத்தைப் போற்றும் சம்ஸ்க்ருத காவ்யம்

விழாக்கள் விசேஷங்கள்

ஸம்ஸ்க்ருத இலக்கியங்கள் இரண்டு வகைப்பட்டது. கத்யம், பத்யம் எனப்படும் இவற்றில் கத்யம் முழுக்க செய்யுட்களால் ஆனது. பத்யம் உரைநடையில் ஆனது. இந்த இரண்டு வகையையும் கலந்து படைக்கப்பட்டது. “சம்பு காவ்யம்” எனப்படும். இதன் தோற்றம் பிற்காலத்தியது. தேனும் கற்கண்டும் கலந்தது போல் மிகுந்த சுவையுடையது சம்பு காவ்யம் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சம்பு காவ்யங்களில் முதன்மையானது த்ரிவிக்ரம பட்டரின் (915-959) நளசம்பூ ஆகும். மிகப் பிரபலமானது இராமாயண சம்புவும், பாரத சம்புவும் ஆகும். இராதாக்ருஷ்ண சம்பு, கங்காவதார சம்பு என, பலசம்பு காவ்யங்கள் தோன்றியுள்ளன. சம்பு காவ்யங்கள் பெரும்பாலானவை நீதிக் கருத்துக்களை மையமாகக் கொண்டவை. சம்பு காவ்யங்களில் வித்யாசமானது வேங்கடாத்வரின் விசுவகுணாதர்ஷ சம்பு காவ்யம்.

இவர் காஞ்சிபுரம் அருகில் உள்ள அரசாணிப் பாலை கிராமத்தில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அப்பய்ய தீக்ஷிதரின் மரபில் வந்த இவர் நூற்றிற்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை கிடைக்கவில்லை. இவர் எழுதிய நூலிலிருந்து நூலை எழுதிய காலம் 163 7 என அறிய முடிகிறது. விசுவகுணாதர்ஷ சம்பு காவ்யத்தில் இரண்டு கந்தர்வர்களை பாரத தேசம் முழுவதும் பயணம் செய்ய வைத்து, தேசத்தின் முக்கிய நதிகள், புனிதத் தலங்களைப் பற்றிய விமர்சனங்களைச் செய்துள்ளார். இரண்டு பேரில் ஒருவன் விசுவாவசு. இவர் காண்பனவற்றில் எல்லாம் உள்ள நிறைகளை மட்டுமே கண்டு சொல்வார். மற்றவர் கிருசாது. இவர் காண்பனவற்றில் குறை தேடி ஆராய்ந்து வெளிப்படுத்துவார். இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களே இந்தக் காவ்யம்.

நாட்டில் உள்ள புண்ணிய நதிகள், புனித பூமிகளின் இரு பக்கங்களையும் பேசி உண்மையை உணர வைத்துள்ளார். சில இடங்களில் குணங்களைக் கூட குறையாகச் சொல்லியுள்ளார். இது விஷயமாக ஒரு கதை சொல்லப்படுகிறது. புனித விஷயங்களுக்கு மாசு கற்பித்ததால், இவரின் கண்கள் குருடாகி விட்டதாகவும், அதற்காக இவர் லக்ஷ்மீ ஸஹஸ்ரம் பாடி மீண்டும் கண் பார்வை பெற்றதாகவும் சொல்வர். எது எப்படியோ நமக்கு சிறந்த காவ்யம் கிடைத்துள்ளது.

தர்ஷணம் என்றால் பார்த்தல், காட்டுதல், கண்ணாடி எனப் பல பொருள் உண்டு. குணம் என்றால் இயல்பு என்றும், விஷ்வ என்பதற்கு உலகம் என்றும் பொருள் கொண்டு பார்த்தால் உலக இயல்பைக் காட்டும் காவ்யம் எனப் பொருள் வரும்.

விசுவாவசுவும் கிருசாநுவும் விமானம் மூலம் இமயம் ஆரம்பித்து காசி, கங்கை, யமுனை, அயோத்தி, ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் வழியாகப் பயணித்து தமிழகம் வந்து, சென்னை, காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், தஞ்சை அருகே பயணத்தை முடிக்கிறார்கள். இடையில் கண்ட காட்சிகளில் உள்ள குறையை கிருசாநு சொல்ல, அதை மறுத்து விசுவாவசு அதன் பெருமையையும், புனிதத் தன்மையையும் பேசுகிறான். நதிகள், நகரங்கள் தவிர வேத விற்பன்னர்கள், க்ஷத்ரியர்கள், சாஸ்திர அறிஞர்கள், கவிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோ ரின் நிறைகுறைகளையும் பேசுகிறார்கள்.

காவ்யத்தில் உள்ள ஒவ்வொரு செய்யுளும், வரியும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவனவாகவே உள்ளன. இன்று சிலர் சொல்லும் குறைகளுக்குக் கூட விடைகள் இந்நூலில் உள்ளன. பாரத தேசத்தின் பெருமையை எடுத்துக் கூறும் அற்புத நூல். இந்நூலில் தமிழ் வேதமாய் நாலாயிர திவ்யப் பிரபந்தம் குறித்து விசுவாவசு சொல்லும் கருத்தை மட்டும் காண்போம்.

திராவிட மொழி எனப்படும் தமிழுக்கு இலக்கணம் அளித்தவர், அகத்திய மாமுனி. இவர் கடல் முழுவதையும் உள்ளங்கையில் எடுத்துப் பருகியவர். தமிழில் பற்பல நூல்களை எழுதியவர்கள் புலன்களை அடக்கி ஆண்ட சடகோபர் (நம்மாழ்வார்) போன்றவர்கள். நூல்களில் உள்ள செய்திகளை எடுத்துச் சொன்னவர்கள் மிகத் தூய்மையான ஆசாரியர்கள். இத்தகைய தமிழ் மொழியின் பெருமை, வாக்கினால் சொல்லி முடிக்க முடியாதது.

குறையை மட்டுமே கண்டு சொல்லும் கிருசாநுவால் கூட குறையுள்ள மனிதர்கள் பாரத மக்கள் எனச் சொல்ல முடியாது. வாழ்ந்த, நமது மூதாதையர்களின் பெருமையைப் படித்து, நாமும் அப்படி வாழ முயற்சிக்கலாமே!

குச்சனூர் தி.கோவிந்தராஜ்

Leave a Reply