அஹோபிலம் ஓர் அற்புத அனுபவம்

3. ஆந்திரம்

 

எந்தத் தோற்றம் ஹிரண்யகசிபுவின் இதயத்தில் மாபெரும் அச்சத்தை உண்டுபண்ணியதோ, அதே தோற்றம்தான் பிரகலாதனுக்கு  கருணை வடிவாகக் காட்சியளிக்கிறது.  எந்த மடியும் தொடைகளும் அக்கிரமக்காரனின் பலிபீடமாக மாறினவோ அதே மடியும் தொடையும்தான் அருள்புரியும் அன்னை லக்ஷ்மியின் அழகான சிம்மாசனமாக அலங்காரமானது. அப்பேர்ப்பட்ட நரசிம்மர் அவதரித்த திருத்தலம் அஹோபிலம்.

>அஹோபிலம் என்ற பெயர் எப்படி வந்தது?

நாராயணனை நரசிம்மனாகத் தரிசிக்கும் ஆர்வத்துடன் கருட பகவான் இத்தலத்தில் அமர்ந்து கடும் தவம் செய்தார். கருடனின் தவத்தை மெச்சி அவருக்கு நரசிம்மராகக் காட்சியளிக்கத் திருவுளம் கொண்டார் பரந்தாமன்.

சத்திய சொரூபமாக மகாபுருஷனாக, நெருப்பின் உக்கிரத்தோடு நரசிம்மர் அம்மலைத் தொடரில் ஓர் உயரமான குகையில் அவருக்குக்  காட்சியளித்தார். கருடன் அங்கு பறந்து சென்று வீழ்ந்து வணங்கினார்.

“அஹோபிலம், அஹோபிலம் என்று துதித்துப் பணிந்தார். இக்காரணத்தால் தான் “அஹோபிலம்’ (பிலம் என்றால் குகை) என்று பெயர் வந்தது. கருடன் தவம் செய்த மலை என்பதால், இம்மலைத் தொடர் “கருடாசலம்’ என்று இன்றைக்கும் அழைக்கப்படுகிறது.

திருமங்கையாழ்வார் தன் திருப்பாடல்களில் தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்! என்று அஹோபிலத்தைக் குறிப்பிட்டுள்ளார். அழகான தமிழில் அஹோபிலத்தை “சிங்கவேள் குன்றம்’ என்றழைத்தார்.

மேல் அஹோபிலம் கீழ் அஹோபிலம் என்று இரண்டு தளங்களாக அஹோபிலம் அமைந்திருக்கிறது. ருத்ர ரூபமாக மட்டுமே அறியப்பட்ட நரசிம்மர் தன் மற்ற தோற்றங்களையும் சேர்த்து ஒன்பது நரசிம்மர்களாக எழுந்தருளியிருப்பது மேல அஹோபிலத்தில் மட்டும்தான். பிரகலாதனின் பிரசித்தி பெற்ற சரித்திரம் தெரிந்தவர்க்கெல்லாம் ஹிரண்யனை அழித்த ருத்ர நரசிம்மரைப் பற்றித் தெரியும் மற்ற நரசிம்மர்கள்?

ஆவல் அஹோபிலத்துக்கு அழைத்துப் போகிறது.

கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதரின் ஆலயம்.  பேருந்துகளோ, தனியார் வாகனகங்களோ, மேல் அஹோபிலத்தின் குறிப்பிட்ட பகுதிவரை கொண்டுவிடத் தயாராயிருக்கின்றன. அதற்கப்புறம், ஆண்டவன் கொடுத்த கால்களே நம்மை நகர்த்தும் சக்கரங்கள்.

நவநரசிம்மர்களைத் தரிசிக்க மனமும் உடலும் தயாராகிவிட்டன. நான்கு திசைகளிலும் சூழ்ந்திருக்கும் மலைக்குன்றங்கள் அடர்ந்த மரங்கள், இசைபாடும் புள்ளினங்கள், ஆர்ப்பரிக்கும் வண்டுகள், குவிந்து இருக்கும் முள் புதர்கள், பாதம்பட்டதும் புரண்டு அதலபாதாளத்தில் கொண்டு தள்ளக் காத்திருக்கும் சிறு கற்கள், முண்டும் முடிச்சுமான முரட்டுப்பாதை, போகும் வழியெங்கும் ஆசியுடன் படையாகப் பின் தொடரும் வானரங்கள்.

கரடிகளும் சிறுத்தைகளும் உலா வருவதுண்டு என்ற தகவல் தாவரங்களின் ஒவ்வோர் அசைவையும் உன்னிப்பாகக் கவனிக்க வைக்கிறது. பாதங்களை அழுந்தப் பொருத்தி மலைச் சரிவில் எட்டு கி.மீ. ஏறியதும், பரந்த ஆகாயத்தின் நீலப்பின்னணியில்  பிரமாண்டமாக விசுவரூபமெடுத்து நிற்கிறது உக்ரஸ்தம்பம். இங்கே மலைப்பாறை இரண்டாகப் பிளந்து இரு வெவ்வேறு பகுதிகளாக நிற்பதைக் காணலாம்.  உற்றுப்பார்த்தால் பாறைப் பிளவின் அமைப்பில் நரசிம்மரின் திருமுகத் தோற்றத்தை உருவகப்படுத்திக் கொள்ள இயலுகிறது.

மலையின் இந்தப் பகுதியைக் கவனமாகப் பார்த்தால், ஹிரண்யனின் அரண்மனை மண்டபமாக இருந்திருக்கலாம் என்று தோற்றமளிக்கும் இயற்கை அமைப்பு. உக்ரஸ்தம்பத்தின் உச்சிக்குப் போய் வருவது என்பது பிரம்மப்பிரயத்தனம். அப்படிப் போனவர்கள் நட்டு வைத்த காவிக்கொடி அந்த உச்சியிலிருந்து காற்றில் கையசைத்து வேடிக்கை காட்டுகிறது.

தூணைப் பிளந்து வெளிப்பட்ட நரசிம்மர் ஹிரண்யனை எந்த இடத்தில் வைத்து சம்ஹாரம் செய்தார்? அந்த இடத்தில் தான் ஜ்வாலா நரசிம்மரின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஒன்பது நரசிம்மர்களில் முதலாவதாக ஜ்வாலா நரசிம்மர் தரிசிக்கப் பயணம் துவங்குகிறது.

கருடாசலம் வேதாசலம் மலைகளுக்கு இடையே அமைந்திருக்கும் “அச்சலச்சாயா மேரு’ என்றழைக்கப்பெறும் மலைக்குன்றம்… பாதை வளைந்து நீள்கிறது. துருத்தியிருக்கும் பாறையின் மீதிருந்து மழைக்காலத்தில் சீறிப் பொழியும் அருவி பவநாசினி ஆறாகப் புரண்டு ஓடுகிறது. நீரின் விசையால் கீழே இழுத்துச் செல்லப்படாமல் இருக்க… மலைப்பாறைகளில் தடிமனான இரும்புச் சங்கிலி பதிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பிடித்துக் கவனமாக நகர்ந்து மேடேறியதும் ஜ்வாலா நரசிம்மரின் ஆலயம்.

அடர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள் மறைந்திருக்கும் கிடுகிடுப் பள்ளத்தாக்கை ஒட்டி, படமெடுத்த சர்ப்பம் போல் முன் தள்ளியிருக்கும் பாறை. பாறைக்குக் கீழே, இயற்கையாக அமைந்திருக்கும் திறந்த குகை அமைப்பு. குகைக்குள் நடுநாயகமாக முக்கியமான மூன்று விக்கிரகங்கள்.

மத்தியில் உக்கிர சொரூபமாக நரசிம்மர்  இடது கால் மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு வீற்றிருக்கும் கோலம். மடியில் ஹிரண்யன். இடது திருக்கரங்களில் ஒன்று அவன் தலையை அழுத்திப் பிடித்திருக்கிறது. வலது திருக்கரங்களில் ஒன்று அசையவிடாமல் அவன் கால்கள் இரண்டையும் சேர்த்துப் பற்றியிருக்கிறது. இரண்டு கரங்கள் அவன் வயிற்றைக் கிழித்து உள் அவயவங்களை வெளியே இழுக்கின்றன. இன்னும் இரண்டு கரங்கள் அவன் குடலை மாலையாகச் சூட்டப் பயன்படுகின்றன. மேலும் இரண்டு கரங்கள் சங்கு சக்கரங்களைத் தரித்திருக்கின்றன. நரசிம்மர் பாதத்தினருகே, பிரகலாதன் பக்தியுடன் தொழுது நிற்கிறான். நரசிம்மரின் ஆவேசம் காரணமாக இந்தக் குகை வெகுகாலம் நெருப்பு போல் கனன்று கொண்டிருந்தது. பச்சைப் புல்லைக் காட்டினால்கூட உடனே பற்றிக் கொள்ளும். அதனால்தான் நரசிம்மருக்கு  ஜ்வாலா நரசிம்மர் என்று பெயர் வந்தது. ஹிரண்யவதம் சிற்பத்தின் வலதுபுறம் அவதாரத் தருணம்.  நாராயணன் சங்கு சக்கரதாரியாக, தூணைப் பிளந்து நரசிம்மராக வெளிப்படும் தோற்றம். இடதுபுறத்தில் நரசிம்மருக்கும் ஹிரண்யனுக்குமான போர்க்கோலம்.

குகை ஆலயத்துக்குச் சற்றுத் தள்ளி பாறைகளின் இடுக்கில் அமைந்திருக்கிறது ரத்தகுண்டம். இங்குதான் நரசிம்மர் தன் குருதிக் கரங்களைக் கழுவிக் கொண்டார். அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ரத்தகுண்டம் என்று பெயர். இயற்கையில் அமைந்திருக்கும் இந்தச் சுனையில், நீரின் பிரதிபலிப்பு சிவப்பாக இருப்பதை இன்றைக்கும் காணலாம்.

ஜ்வாலா நரசிம்மரின் தரிசனம் முடிந்தது. அடுத்தது? அஹோபில நரசிம்ம சுவாமி.

கருடாத்ரி, வேதாத்ரி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பவநாசினி நதிக்கரையில் அமைந்துள்ளது அஹோபில நரசிம்மர் ஆலயம். இதுவே மேல் அஹோபிலத்தின் பிரதான ஆலயமாகக் கருதப்படுகிறது.

கீழ் அஹோபிலத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் மலைப் பயணத்துக்கு அப்புறம், கடல் மட்டத்திலிருந்து 2,800 அடி உயரத்தில் மேலும் அஹோபிலம் வந்ததும், அமைந்துள்ள ஆலயம் இது.

நவநரசிம்மர்களில் அதிகச் சிரமம் இல்லாமல் சென்று தரிசிக்கக் கூடியது. எளிமையான சிறு கோபுரம் சமதளத்தில் நேரெதிரே. நூறு அடி தள்ளி உற்சவ மண்டபம். ஆலயம் ஒரே தளமாக இல்லாமல் குன்றத்தின் அமைப்புக்கேற்ப ஏற்ற இறக்கத்துடன் பரந்திருக்கிறது.

மூலசந்நிதி அமைந்திருக்கும் பகுதி, திறந்த முதலையின் வாய் போன்ற  குகை அமைப்பு. குகையின் மத்தியில் அஹோபில நரசிம்மர் உருவத்தில் சிறியவராக இருந்தாலும் நரசிம்மரின் உக்கிரம் அதிகம். மூலவருக்கு அருகிலேயே லக்ஷ்மி சமேதராக உற்சவர். நேரெதிரில் மாடசந்நிதியில் பிரகலாதன்.

மூலவர் சுயம்புவாகத் தோன்றிய மூர்த்தி, உக்கிரரூபம், ஹிரண்யவதம் முடிந்ததும் தன் ஆக்ரோஷ ரூபத்துடன் இந்த குகையில் வந்து தேவர்களுக்கும் கருடனுக்கும் காட்சியளித்தார். சீதையைத் தேடி ராமர் அலைந்தபோது, இங்கே வந்து நரசிம்மரை பூஜித்து வணங்கினார். குகையின் இன்னொரு புறத்தில் ஆச்சரியமாக ஒரு சிவலிங்கம் பக்கத்திலேயே, ராமரின் திருக்கோலம்.

ஆதிசங்கரர் காபாலிகர்களிடம் தன் கரத்தை இழந்தபோது, இங்கே வந்து “லட்சுமி நரசிம்மகராவலம்ப ஸ்தோத்திரம் இயற்றினார். இழந்த கரம் மீண்டது. தன் வருகையை நிலைநிறுத்த இங்கே ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த நரசிம்மசுதர்சன சக்கரத்தையும் இங்குக் காண முடிகிறது.

சந்நிதிக்கு வெளியே பக்தர்களின் பாதங்கள் பட்டுவிடக் கூடாது என்று  இரும்புத் தடுப்புக்குள் வட்டமாக ஒரு பகுதி. இங்கே என்ன மர்மம் புதைந்து இருக்கிறது? ஆர்வம் விசாரிக்கச் சொல்கிறது.

இது வெகு காலமாகத் திறந்த குகையாக இருந்தது. உள்ளே இருள் மண்டிக் கிடக்கும். பாதாளத்தில் இதேபோன்றதொரு ஆலயம் இருந்தது என்று சொல்லப்படுகிறது.

பதினாறாம் நூற்றாண்டுத் துவக்கத்தில் (1513) அங்கு ஆறாம் ஜீயராக இருந்த ஸ்ரீசெஷ்ட பராங்குச யதீந்திர மகா தேசிகர் இந்தக் குகைக்குள் இறங்கிப் போனார். வைகுந்தனைத் தரிசித்துவிட்டு அவர் வெளியே வரவேயில்லை. அதன் பின் அந்த குகை மூடப்பட்டு விட்டது.

ஆலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தின் மேல் தளத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் மேலும் ஒரு பதினாறு கல் மண்டபம். அங்கிருந்து கோபுர தரிசனம். காணக்காண இயற்கை ரகசியமாகப் பொத்தி வைத்திருக்கும் மற்ற நரசிம்மர்களை அடுத்து தரிசிக்கப் போகும் ஆர்வம்  நமக்குள்ளே.

அடுத்து மாலோல நரசிம்மர்.

லக்ஷ்மி க்ஷேத்திரம் என்று அழைக்கப் பெறும் வேதாத்ரி பர்வதம். இந்த மலைக் குன்றங்களில், கனகசபா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது மாலோலன் சிறு குகை ஆலயம்.

நரசிம்மரின் கோபம் தணித்து, மகாலக்ஷ்மி அவருடன் எழுந்தருளிய தலம் இது. மா என்பது அன்னை லக்ஷ்மியைக் குறிக்கிறது. லோலம் என்றால் காதல் என்று பொருள். அன்னையைத் தன் இடது மடியில் இருத்தி சௌம்யரூபமாக, இடது திருக்காலை மடக்கி, வலது திருக்காலைத் தொங்கவிட்டு, சுக ஆசனத்தில் நரசிம்மர் இங்கு வீற்றிருக்கிறார்.

மாலோல நரசிம்மருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நவ நரசிம்மர்களில் எந்த மூர்த்தியை அடிப்படையாக வைத்து உற்சவரை அமைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, முதலாம் ஜீயரின் கனவில் நாராயணன், மாலோல நரசிம்மராகக் காட்சியளித்து சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார். இன்றைக்கும் ஜீயர்கள் மாலோல நரசிம்மரின் விக்கிரகத்தையே உற்சவ மூர்த்தியாக ஆன்மிக யாத்திரை போகும் இடங்களுக்கெல்லாம் எடுத்துப் போகிறார்கள். உற்சவருக்குத் தினசரி பூஜைகள் செய்து வருகிறார்கள்.

நவநரசிம்மர்களில் நான்காவது நரசிம்மர் க்ரோடகார நரசிம்மர். இவரைத் தேடிப் பயணம் தொடர்கிறது.

போகும் பாதையில் அடர்ந்த மரங்கள். மழைக் காலத்தில் புரண்டு ஓடும் நீரோடைகள்  குழிந்த பாதைகள், கரடுமுரடான காட்டுப்பாதை,  ஜ்வாலா நரசிம்மர் சந்நிதி அருகில் மலையில் உயரத்தில் உற்பத்தி ஆகிப் புரண்டு வரும் நீர் பவநாசினி ஆறாக இங்கே ஓடுகிறது. இந்த ஆறு தவிர இந்தப் பகுதியில் பைரவ குண்டம், கஜகுண்டம், வராக குண்டம், பீடகுண்டம் என்று பிரசித்தி பெற்ற பல தீர்த்தங்கள் இருக்கின்றன.

அஹோபில நரசிம்மரின் ஆலயத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீடடர் தொலைவில், க்ரோடகார நரசிம்மர் ஆலயம்.

ஆலயத்தில் நாராயணனின் இரண்டு அவதாரத் திருத்தோற்றங்கள்.

ஒன்றில் காட்டுப் பன்றியாக வராக அவதாரம் எடுத்த தோற்றம். தென்திசை நோக்கி வராக சுவாமி நின்ற நிலையில் காட்சியளிக்க அவரின் இடது தோளில் வீற்றிருக்கிறார் பூமாதேவி.

இன்னொரு பக்கம் லக்ஷ்மி நரசிம்மர். ஹிரண்யனை அழித்தபின், நரசிம்மரின் கோபத்தைத் தணித்து அவரை அமைதிப்படுத்திய லக்ஷ்மி தேவியுடன்  எழுந்தருளி இருக்கிறார்.

நாராயணன் எடுத்த இரண்டு அவதாரங்களும் (வராக, நரசிம்மர்) வெவ்வேறாயினும் வராக நரசிம்மசுவாமி என்று எழுந்தருளியிருப்பது  தனிச்சிறப்பு.

வராக நரசிம்மரைத் தரிசித்து, அடுத்து நரசிம்மரை நாடிப் பயணம் தொடர்கிறது.  ஹிரண்ய கசிபுவின் அரண்மனை இருந்த பகுதி இதுதான் என்றால், பிரகலாதன் ஓடி விளையாடி பாலகனாக உலாவந்ததும் இதே பகுதிதானே? அவனைப் பற்றிய அடையாளங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

யுகங்கள் மாறியும் மாறாமல் பிரகலாதனின் பதிவு இங்கே இருக்கிறது என்று பதில் வருகிறது. பிரகலாத மெட்டு (படி) என்று பிரகலாத மேடு என்றும் அழைக்கப்பெறும் பகுதியில் தான் பிரகலாதனின் அன்றைய குருகுலம் இயங்கியது என்று அறிந்து கொண்டதும் பயணம் பிரகலாதன் மெட்டு நோக்கித் திரும்புகிறது.

பிரகலாதன் படித்து விளையாடி நாராயணன் நாமத்தையே உச்சரித்திருந்த குருகுலம் இங்கே தான் அமைந்திருந்தது. பாறைகளைப் புரட்டி, ஒன்றன்மீது ஒன்று அடுக்கினாதுபோன்ற இயற்கை அமைப்பு, பாறைகளில் படிந்திருக்கும் சிறு வட்டங்கள், புரியாத சில கோடு அமைப்புகள் இவை பிரகலாதன் குருகுலத்தில் பயின்றபோது எழுதிப் பார்த்த லிபிகள் என்று சொல்லப்படுகிறது.

உயரத்தில் பொத்தி வைத்ததுபோல் சிறு குகைவாயில். நீர் கசியும் பாறை அடுக்குகளில் கவனமாக ஏறி, மலையில் மடிப்பில் பொதிந்து இருக்கும் இந்தச் சிறு குகைக்குள்  குனிந்து நுழைந்தால், எண்ணெய் விளக்கு ஒளியில் குறுகலான குகையின் உட்புறம் புலப்படுகிறது.

பட்டுத்துணி அணிவிக்கப்பட்ட நரசிம்மரின் சிறு விக்ரகம். அருகிலேயே பூர்த்தி அடையாத பிரகலாதனின் சிறு விக்ரகம். பக்தியின் நிரந்தர அடையாளமாக விளங்கும் பிரகலாதனையும் அவன் துதித்துத் தொழுத இறைவனையும் தரிசித்து, குகையிலிருந்து வெளியே மீண்டதும் ஐந்தாம் நரசிம்மரை நாடிப் பயணம் தொடர்கிறது.

பிரகலாத மேட்டிலிருந்து கவனமாக மேலே ஏறிவந்து, வேதாத்திரி மலையில் இருந்து கருடாத்ரி மலைத்தொடர் நோக்கிப் பயணம் திரும்புகிறது.

கருடாத்ரி மலைத் தொடரின் மேற்குப்புறம் அமைந்திருக்கிற கரஞ்ச நரசிம்மர். மேல் அஹோபிலத்துக்கு வாகனங்கள் வரும் சாலை வழியில், மரங்களின் நிழலில் ரம்யமாகக் காட்சியளிக்கிறது. அண்மையில் புதுப்பிக்கப்பட்ட இவ்வாலயம் நுழைந்ததும், முகப்பில் மண்டபம். இங்குள்ள தூண்களில் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள், மண்டபத்தின் இடதுபுறம் ஆஞ்சநேயரின் சந்நிதி. ஆஞ்சநேயர், நரசிம்மரின் சந்நிதி நோக்கி முகம் திருப்பி வணங்கியபடி நின்றிருக்கிறார்.

மூலவர் கரஞ்ச நரசிம்மர். மற்ற எந்த நரசிம்மரிடமும் காண முடியாத வில் ஆயுதம் தரித்து இங்கே நரசிம்மர் எழுந்து அருளியிருப்பது – வியப்பேற்படுகிறது. இந்தத் திருக்கோலம் ஸ்ரீ ஆஞ்சநேயருக்காக எடுக்கப்பட்ட சிறப்புத் திருக்கோலம்.

ஸ்ரீ ஆஞ்சநேயர்   (கருங்காலி மரத்தின்) கீழே ராமரை நோக்கித் தவம் இருந்தார். நாராயணன் அவருடன் விளையாட விரும்பினார். வெகு காலம் தவமிருந்தவரின் முன்னே அழகிய சிங்கராக நரசிம்மர் பிரத்யட்சமானார்.

ஸ்ரீ ஆஞ்சநேயருக்குத் திருப்தி இல்லை. “நான் வேண்டியது ஸ்ரீராமனின் தரிசனத்தை அல்லவா? சிங்கமுகத்துடன் நீ யார்?” என்று வினவினார்.

“இது நரசிம்மக்ஷேத்திரம் இங்கு என்னைத்தான் தரிசிக்க முடியும். நானும் ராமனும் ஒன்று!” என்று விளக்கம் தந்தார் பரந்தாமன்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஒப்புக் கொள்வதாக இல்லை. “என் ஸ்ரீராமன் பேரழகன். இப்படிக் கொடிய ஆயுதங்களாக நீண்ட நகங்களைக் கொண்டிருக்க மாட்டான். தன் தோற்றத்துக்கே அழகு சேர்க்கும் நாணேற்றிய வில்லைத்தான் தரித்திருப்பான். என் ராமனையே நான்  காண                   விழைகிறேன்.”

“ஆஞ்சநேயா… ராமனின்பால் உனக்கிருக்கும் மாறா பக்தியை மெச்சினோம். நரசிம்மரும் நானே, ஸ்ரீராமனும் நானே! இரண்டு அவதாரங்களாக வெளிப்படுத்திக் கொண்ட நாராயணனும் நானே? நன்றாகக் கவனி.”

ராமரும் நரசிம்மரும் நாராயணனின் அவதாரம்தான் என்பதை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விளக்க நாராயணனுக்குரிய ஆதிசேஷன் படமெடுத்துக் குடைபிடிக்க, அதன் நிழலில் வலது கையில் சக்கரத்தையும் இடது கையில் வில்லையும் தரித்து நரசிம்மர் காட்சியளித்தார்.

இந்த வித்தியாசத் திருக்கோலத்தில், இந்த ஆலயத்தில் இங்கு கரஞ்ச நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். மலைப்பாதையில் இறங்கி வருகையில், பழமையான நூற்றுக்கால் மண்டபம் கவனத்தை ஈர்க்கிறது.

பார்கவ நரசிம்மர்

வேதாத்ரி பர்வதத்தில் கீழ் அஹோபிலம் ஆலயத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுப் பயணம்.  சுருண்டு படுத்திருக்கும் மலைப்பாம்மின் உடல் மீது ஊர்ந்து ஏறிச் செல்லும் கட்டெறும்பு போல் பயணம் செய்கையில் அத்தனை ஏற்ற இறக்கங்களையும் அனுபவிப்பது தனி அனுபவம்.

சிறு குன்றத்தின் மீது உயரத்தில் அமைந்திருக்கும் ஆலயம் சற்றுத் தொலைவிலிருந்து பார்வையில் தட்டுப் படுகிறது. காவியும் வெள்ளையும் அடித்த செங்குத்தான படிகள் வரவேற்கின்றன. சூழ்நிலையிலேயே தெய்வீகம்.

படியேறும் முன், ஆலயத்தின் பக்கவாட்டில் சதுர வடிவில் ஒரு திருக்குளம் அமைந்திருக்கிறது. பார்கவ தீர்த்தம் என்று வழங்கப்பெறும் இந்தத் தடாகத்தில் நீர் வற்றியதே இல்லை. இதனால் இதற்கு அக்ஷய தீர்த்தம் என்றும் ஒரு பெயருண்டு.

பார்கவ என்ற பரசுராமன், தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது, நரசிம்மரைத் தரிசிக்க இந்தத் தலத்துக்கு வந்திருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க  இந்தத் தலத்தில் அவருக்குக் காட்சியளித்தார்.

நரசிம்மரைத் தரிசிக்க வேண்டி, நூற்று முப்பது உயரமான படிகளில் ஏறும்போது  உற்சாகத்தில் களைப்பு தெரிவதில்லை.

எளிமையான ஆலய அமைப்பு, நரசிம்மர் இங்கே ஹிரண்ய வதத் தோற்றத்தில், மடியில் அசுரனைக் கிடத்தி, இரு கரங்களால் அவன் வயிற்றைக் கிழிக்கும் நிலையில் காணப்படுகிறார். மற்ற கரங்களில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கிறார்.

சுவாமியின் பாதத்தருகே பிரகலாதன் தொழுத நிலையில் நிற்கிறார்.  பத்து அவதாரங்களும் சிற்பத்தின் தோரணத்தில் பதிவாகி இருக்கின்றன. சந்நிதிக்கு வெளியில், மகா விஷ்ணுவின் விக்கிரகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கிறது.

புண்ணிய அஹோபிலத்தில் ஏழாவது நரசிம்மராகக் காணப்படுபவர் யோகானந்த நரசிம்மர்.

வேதாத்ரி மலைத் தொடரின் மேற்கில், கீழ் அஹோபிலத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது யோக நரசிம்மரின் ஆலயம்.  நரசிம்மர் யோக முத்திரை தரித்துக் காட்சியளிக்கிறார்.

ஹிரண்ய வதம் முடிந்ததும் பிரகலாதனுக்கு நரசிம்மர் சில யோக முத்திரைகளைக் கற்பித்தார். அதன் ஒரு நிலையே இங்கு எழுந்தருளியிருக்கும் கோலம்.

நரசிம்மர் தென்திசை நோக்கி வீற்றிருக்கிறார். மேற்கரங்கள் இரண்டும் சங்கும் சக்கரமும் ஏந்தியிருக்கின்றன. கீழ்க் கரங்கள் இரண்டிலும் இரு கால்களிலும் யோக முத்திரை பதித்திருக்கின்ற. எட்டாவது நரசிம்மர்  சத்ரவடநரசிம்மர்.

கருடாத்ரி மலையில், கீழ் அஹோபிலம் ஆலயத்துக்கு அருகில் கிழக்குத் திசையில் அமைந்திருக்கிறது சத்ரவட நரசிம்மரின் ஆலயம்.

கரடுமுரடான பாதைகளுக்கும் பழக்கப்பட்டுப் போயிருக்கும் பாதங்கள்,சீரான தார்ச்சாலை வழியே ஆலயத்தைச் சென்றடைய வழி இருப்பது கண்டு துள்ளுநடை போடுகின்றன.

ஆறு கால் முக மண்டபம். தூண்களில் ஆஞ்சநேயரின் அழகிய சிற்பங்கள். தவிர வெவ்வேறு நரசிம்மர் சிற்பங்கள். அஹோபில நரசிம்மர்களிலேயே மிகவும் சுந்தர ரூபத்துடன் காணப்படுபவர் சத்ரவட நரசிம்மர். குடை போன்ற ஆலமரத்தடியில் வீற்ற நிலையில் காட்சிதந்ததால், நரசிம்மருக்கு இந்தத் திருநாமம் (சத்ர- குடை;  வடம்  – ஆலயம்)

அலங்கார புருஷராக, ஆபரணங்கள் தரித்து நரசிம்மர் இங்கே காணப்படுகிறார்.

இரண்டு மேற்கரங்களும் சங்கு, சக்கரங்களைத் தரித்திருக்கின்றன. வலது கீழ்க்கரம் அபயஹஸ்தமாக அருள்பாலிக்கிறது. இடது கீழ்க்கரம் இடது தொடையில் முத்திரையாகப் பதிந்திருக்கிறது.

தேவ சபையில் ஆஹா, ஊஹு என்ற இரண்டு கந்தர்வ இசைக் கலைஞர்கள், ஹிரண்ய வதம் முடிந்து உக்கிர நிலையில் இருக்கும் நரசிம்மரை அமைதிப்படுத்த இந்த இரண்டு கந்தர்வர்களும் தங்கள் இசையால் முனைந்தனர். அவர்கள் இன்னிசையை ரசித்து, நரசிம்மர் தன் தொடையில் தாளம் போடுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆலய முகப்பில் ஆஹா, ஊஹு இருவரின் திருவுருவங்களும் அமையப் பெற்றுள்ளன.

ஒன்பதாவது நரசிம்மராக, பவன நரசிம்மர். கருடாத்ரி மலையில் தென்புறம்  அடர்ந்த காட்டுப் பகுதியில் பவன நதிக்கரையில் அமைந்திருக்கிறது பவன நரசிம்மர் ஆலயம்.

ஒன்பது நரசிம்மர்களில் இந்த ஆலயத்துக்குச் செல்லும்  பயணமே மிகவும் கடினமானது.  டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய கரடுமுரடான மண்பாதைகளில், வேறு ஏதாவது வாகனங்களில் சென்றால், எலும்புகள் கழன்றுபோவது போல் உதறும்.  ஆனாலும் இந்த நரசிம்மரைத் தரிசிக்க அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

முந்தின நாளே புறப்பட்டு, மிகக் கடிமான ஆறேழு கிலோ மீட்டர்களைக் கடந்து திறந்த வெளியில் மரத்தடியில் இரவைக் கழித்து தரிசனம் முடித்துச் செல்லத் தயாராயிருக்கிறார்கள்.

அப்படி வரும் பக்தர்களில் சிலர், கைகளிலும் சிறு கூடைகளிலும் கோழிகளையும் சேவல்களையும் பலி கொடுப்பதற்காக எடுத்து வருகின்றனர்.

பலிகளை நரசிம்மர் ஏற்பாரா?

இங்கே புழங்கும் நாட்டுப்புறக் கதை இதற்கு  ஒரு பதில் தருகிறது.

கிருத யுகத்தில் இந்த மலைத் தொடர்களில் செஞ்சுலை என்றழைக்கப்பட்ட மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வந்திருக்கின்றனர்.

அந்தக் குடும்பங்களில் பிறந்தவள் தான் செஞ்சு லட்சுமி. திருமகளின் மறு அவதாரமாகத் தோன்றியவள்.

பருவ வயதில் அவளையொத்த அழகிகள் யாருமிலர். அவள் கரம்பற்ற ஆண்களுக்கிடையே போட்டா போட்டி. ஆனால் செஞ்சுலட்சுமிக்கோ ஸ்ரீமந்நாராயணன் பேரில் அளவிலாக் காதல்!

அஹோபில மலைகளில், பிரகலாதனுக்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த போது நரசிம்மரின் பார்வையில் இந்த செஞ்சுலட்சுமி தென்பட்டாள். காண்பவர் எல்லாம் நரசிம்மரின் கோரமுகம் பார்த்து நடுநடுங்கி ஒளிய, செங்சுலட்சுமி மட்டும் அவரைத் தரிசித்ததும் நாணத்தால் தலை குனிந்து நின்றாள்.

இந்த அவதாரத்தில் தனக்கிணையான துணை இவள்தான் என்று தீர்மானித்தார் நரசிம்மர். அவளைத் துணையாக்கி, மலைவாழ் மக்களுக்கும் பெரும் அந்தஸ்து தந்தார்.

தன் பிரியமான மனைவிக்காக மாமிச உணவை வேட்டையாடிக் கொணர்ந்து கொடுத்தார்.

தங்களில் ஒருத்தியாகப் பிறந்து வளர்ந்து, நரசிம்மரின் கரம் பற்றிய அன்னை செஞ்சுலட்சுமிக்குப் பிரியமான உணவைப் படைப்பதற்காகவே இந்த மலைவாழ் இனமக்கள் இங்கே பலி கொடுத்து வணங்குகிறார்கள்.

பரம்பரை பரம்பரையாகச் சனிக்கிழமைகளில் நரசிம்மருக்கு பலி கொடுப்பதற்காக இங்கே வரும் குடும்பங்கள் உண்டு.

பவன நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆலயத்தில் ஏழுதலை ஆதிசேஷன் படம் எடுத்துக் குடைபிடித்திருக்க வீற்றிருக்கும் நிலையில் இருக்கிறார் லட்சுமி நரசிம்மர்.

பவன நரசிம்மரைத் தரிசித்ததும் மேல் அஹோபிலத்தின் ஒன்பது நரசிம்மர்களையும் தரிசித்து முடித்த திருப்தி நெஞ்சில் நிறைகிறது. கடுமையான பயணம் முடித்துத் திரும்பியவுடன் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகக் கீழ் அஹோபிலம்.

இங்கே நரசிம்மர் பிரகலாத வரதராக எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்தில் நுழையுமுன் தெற்கே புஷ்கரணி. சதுர வடிவக் குளத்தைச் சுற்றி, பாறைகளால் ஆன படிகள்.

குளத்தை அடுத்து, அலங்காரமான உயரமான கோபுரம். ஆலயத்தில் நுழைந்ததும் மூன்று பிராகாரங்கள். முகப்பில் ரங்கமண்டபம், பதினாறாம் நூற்றாண்டின் அற்புதச் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள்.  மேல் அஹோபிலத்தில் தரிசித்துத் திரும்பிய நரசிம்மர்களைப் பற்றி ஒரு நினைவூட்டல் போல் நரசிம்மரின் வெவ்வேறு தோற்றங்கள்.

அடுத்து ஒரு சிறு மண்டபம். அதையடுத்து மூலவர் வீற்றிருக்கும் திருச்சந்நிதி.

சந்நிதிக்கு வெளியே இருபுறமும் அமைப்பான திக்பாலகர்கள். கருவறையில் தீப ஒளியாக பிரகலாத வரதர் என்று அழைக்கப்பெறும் மூலவர்.

திருப்பதி வெங்கடாசலபதி தனது திருமணத்துக்கு முன் இங்கே வந்து ஆசிகள் பெற்றுச் சென்றதாக ஐதிகம்.

அதனால் ஆலயத்தில் அவருக்கென்று தனி சந்நிதியும் இருக்கிறது. அங்கிருக்கும் மண்டபத்தில் திருக்கல்யாணக் கோலத்தில் இறைவன் எழுந்தருளுவது உண்டு என்பதால் இம்மண்டபத்துக்குக் கல்யாண மண்டபம் என்றும் பெயருண்டு. இவை தவிர, லக்ஷ்மி, ஆண்டாள், ஆழ்வார்களுக்கான தனிச்சந்நிதிகளும் அமைந்துள்ளன.

மூலவர் சந்நிதிக்கு நேர் வெளியே துவஜஸ்தம்பம். பண்டிகைக் காலங்களில் கொடியேற்றி உற்சவம் நடைபெறும் ஆலயத்தின் வெளிச்சுவர் அருகே நிமிர்ந்து நெடிதாக நிற்கிறது ஜயஸ்தம்பம். மற்ற மதத்தினர் ஆலயத்தை ஆக்கிரமித்துக் கொண்டபோது இந்தப் பகுதியை ஆண்ட இந்து மன்னர்கள் அவர்களிடமிருந்து ஆலயத்தை மீட்டதன் நினைவுச் சின்னமாக இந்த ஜயஸ்தம்பம்.

இவ்வாறு, கீழ் அஹோபில தரிசன யாத்திரை முடிவுக்கு வருகிறது.

 

 

Leave a Reply