வேதகால பெண்கள் நிலை

விழாக்கள் விசேஷங்கள்

அ) “ரிக் வேத’த்தின் பதினேழு சாகைகளை இயற்றியவர்கள்:

“ரோமஸா”, “லோமுத்ரா”, “அபத்தா”, “கத்ரு”, “விஷ்வவரா”, “கோஷா”, “ஜுஹு”, “ஷ்ரத்த-காமயனி”, “ஊர்வசி”, “ஷாரங்கா”, “யாமி”, “இந்திராணி”, “சாவித்திரி” மற்றும் “தேவயானி.”

ஆ) “சாமவேத’த்தின் நான்கு சாகைகளை இயற்றியவர்கள்:-

“நோதா” (அல்லது “பூர்வார்ச்சிகா”) “அக்ரிஷ்டபாஷா”, “ஷிகடனிவவரி” (அல்லது “உத்தரார்ச்சிகா”) மற்றும் “கண்பயனா.”

அந்த இருபத்தோரு பெண்களும், ஆண்களுக்கு இணையான அறிவாற்றலும், வேத வேதாங்கங்களில் பரிச்சயமும் கொண்டவர்களாக இல்லாமல், அவ்வாறு வேத சாகைகளை இயற்றியிருக்க முடியாது. இதிலிருந்து அவர்கள் மாணவர்களைப் போலவே, குருகுலத்தில் முறையாகப் பயின்றிருக்கிறார்களென்பது தெளிவாகிறது. “கல்வி பயின்ற பெண் ஒருத்தியை அவளுக்கிணையாகவோ, அதற்கும் மேலாகவோ, அறிவாற்றல் கொண்ட ஆணுக்கே மணமுடிக்க வேண்டுமென…” – யாக்ஞவல்கியரின் “ப்ருகதாரண்யக உபநிஷத்” குறிப்பிடுகிறது. அத்துடன் அத்தகைய அறிவாற்றல் கொண்ட பெண்ணைக் குழந்தையாகப் பெற, கிருஹஸ்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நியதிகளையும், சடங்குகளையும் கூட அந்த “உபநிஷத்’ விவரிக்கிறது.

பிரம்மச்சாரிகளைப் போலவே, இளம்பெண்களும் “முப்புரிநூல்’ அணிந்தே வேதங்களையும் “சாவித்திரி – வசனங்களை’யும் கற்கத் தொடங்கியிருக்கின்றனர். “ஆண்களைப் போலவே பெண்களும், வேதங்களைக் கற்றார்கள்…” – என்று “பாணினி’ குறிப்பிட்டுள்ளார்.

கிரஹஸ்தர்கள் தங்களது இல்லங்களில் யக்ஞங்களை மேற்கொண்ட போது, அவர்கள் உச்சரித்த “ஷ்ரௌத’ சூத்திரங்களையும் “க்ரிஃய சூத்திரங்களையும், மிகத் தெளிவான உச்சரிப்புடன் அவர்களது இல்லத்தரசிகளும் அருகில் நின்றவாறே கூறியிருக்கிறார்கள். மேலும் “பூர்வ மீமாம்சை” யிலும் ஆண்களுக்கு இணையாக ஹிந்துமத சடங்குகளை நடத்தும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

வேதகால சமுதாயம் அனேகமாக “ஒரே மனைவி – ஒரே கணவன்’ என்ற நியதியைத்தான் பெரும்பாலும் கடைப்பிடித்து வந்துள்ளது. அச்சமுதாயத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கு இணையான இடம் அளிக்கப்பட்டது.

தனிப்பட்ட சில பெண்கள் தாங்களாகவே முயன்று கல்வியறிவைத் தேடிக் கொண்டதற்கான ஆதாரங்களும் ஏராளமாகக் கிடைத்துள்ளன.

“பாத்யாஸ்வஸ்தி” என்ற பெண் வடதிசை நோக்கிச் சென்று கல்வி கற்றுப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

புகழ்பெற்ற தத்துவஞானியும், சாத்வியுமான “கர்கி வாசகனவி”, ஜனக மன்னர் ஏற்பாடு செய்த உலகின் முதல் தத்துவ மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். அம்மாநாட்டில் “கர்கி’ கலந்து கொண்டு “யாக்ஞவல்கியருடன்’ விவாதம் செய்தவர்.

பதஞ்சலி முனிவர் தமது “மஹாபாஷ்யம்’ என்ற நூலில் ஈட்டி எறிவதில் திறமை வாய்ந்த “சக்திகி”கள் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கவுடில்யரின் “அர்த்தசாஸ்திரம்’ என்ற நூலில் “மவுரியப்’ படைகளில், வில்லம்புகளுடன் போரிடும் திறமை வாய்ந்த பெண்களும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

கிரேக்க நாட்டுத் தூதுவரான “மகஸ்தனிஸ்” என்பவர், “சந்திரகுப்த மவுரியரை”ப் பாதுகாக்க, பெண் மெய்க்காவலர்களும் இருந்ததாக, தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக, வெறும் ஏட்டுக்கல்வி கற்பவர்களாக மட்டுமில்லாமல், வேதகாலப் பெண்கள் வீராங்கணைகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இதிகாச நாயகிகளான சீதாவும் திரௌபதியும் கூட, கல்வி கற்றவர்களாகவும், சக்தி படைத்தவர்களாகவும், மனத்திண்மை கொண்டவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும் இதிகாச கால கட்டத்திலேயே பெண்களின் கவுரவம் சிதைக்கப்பட்ட வரலாறும் தொடங்கிவிட்டது. இராவணன் கொல்லப்பட்டவுடன், சீதை தீக்குளித்து தனது தூய்மையை நிலைநாட்ட வேண்டியிருந்தது. அப்படியும் பின்னர், அவள் காட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாள் என்று, “உத்தர ராமாயணம்’ விவரிக்கிறது. ஐந்து கணவர்களுக்கு மனைவியாக இருந்த திரௌபதியை ஈடாக வைத்து பகடையாடப்பட்டதால், அவள் தனது ஆடையை துச்சாதனன் பிடித்திழுக்க, அவையோர் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டாள்.

இராமாயணமும் மகாபாரதமும் (வேதகாலத்திற்குப் பின்னர் நடந்ததால்), அக்காலங்களில் பல ஆண்கள் ஏராளமான பெண்களை மணந்ததை விவரிக்கின்றன. இதனால்தான் பெண்களின் கவுரவம் குறையத் தொடங்கியது. ஒழுக்கத்திற்கான அளவுகோல்கள் பெண்களைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையானவையாக மாறின.

ஏமாற்றப்பட்டதால்தான் அகலிகை இந்திரனிடம் தன்னை இழந்தாள் என்ற உண்மையை உணர்ந்தும் கூட, அவளது கணவரான கவுதம முனிவர் அவளைக் கல்லாகும்படி சபித்தார்.

இப்படியாக, மகாபாரத காலம் தொடங்கி சிறுமைப்படுத்தப்படுவது பொறுக்க முடியாத அளவிற்குப் போனதால்தான் பல ஹிந்துப் பெண்கள் பௌத்த மதத்திலோ, சமண சமயத்திலோ தங்களை இணைத்துக் கொண்டு “பிக்குணி’ களாகவும் மாறத் தலைப்பட்டனர். அதனால்தான் புத்தரின் முக்கிய சீடர்களில் பதிமூன்று பேர் பெண்களாக இருந்தனர். அதேபோல வேறு பதிமூன்று பெண்கள் மகாவீரரின் சிஷ்யைகளாக, துறவிகளாக மாறினர்.

அகலிகை, திரௌபதி, தாரை, குந்தி, மந்தோதரி ஆகியோர் “பஞ்ச பத்னிகள்’ என்று போற்றப்படுகிறார்கள். இவர்களில் மந்தோதரியைத் தவிர, மற்ற நால்வரும் ஒருவருக்கு மேலான ஆண்களுடன் (அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ) வாழவேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள். அகலிகைக்கு கவுதமர், இந்திரன், திரௌபதிக்கு பஞ்ச பாண்டவர்கள், தாரைக்கு வாலி – சுக்ரீவன், குந்திக்கு சூரியன் யமன் இந்திரன், வாயு, அஸ்வினி தேவர்கள் மற்றும் “பாண்டு’!

ஆயினும் வேதகாலப் பெண்களுக்கு, தங்கள் கணவர்களைத் தேடிக் கொள்ளக் கிடைத்த உரிமை, பின்னர் வந்த பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!

அடுத்து வந்த காலகட்டங்களில், பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கும் சமுதாயத்திற்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாகவே இருந்தனர்; இருக்கின்றனர்; ஆனால், ஆண்கள் மட்டும் பல மனைவியரையும், பல “துணைவியரை’யும் மணந்து கொள்வதையும், வைத்துக் கொள்வதையும் இந்திய சமூகம் அனுமதித்தது, அனுமதிக்கிறது.

அந்த வகையில் படைப்பாற்றல் பல பெண்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்து வந்திருக்கிறது. ஹிந்து மதமும் ஆலயங்களும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றன. தமிழ்நாட்டின் “பக்தி இலக்கிய’ காலகட்டத்தில் சைவர்களான அவ்வையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார், காரைக்காலம்மையார் போன்றோரும், வைணவரான ஆண்டாளும் தங்கள் படைப்பாற்றலால் பெரும் பக்தி இலக்கியங்களைப் படைத்து விட்டு மறைந்தனர்.

இராஜசிம்ம பல்லவனின் மனைவியாகிய “ரங்கபதாகை’ கங்கராதித்யசோழனின் மனைவியாகிய செம்பியன் மகாதேவி, ராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை, பாதாமி சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்த மன்னனின் மனைவியான லோகமகா தேவி – போன்றோர் ஏராளமான சைவ, வைணவக் கோயில்களைக் கட்டினர் என வரலாறு கூறுகிறது. ஹிந்து மதம் அவர்களுக்கு ஒரு வடிகாலாக இருந்திருக்கிறது. அவர்களது கணவர்களும், சகோதரர்களும் ஏகப்பட்ட பட்டமகரிஷிகளுடன் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

வடஇந்தியாவைப் பீடித்த இஸ்லாமியர்களின் ஆக்ரமிப்பு காரணமாக, முஸ்லீம் பெண்களைப் போலவே, ஹிந்துப் பெண்களும் “பர்தா’ அணியத் தொடங்கினர். இன்றும் அந்த மரபு அங்கெல்லாம் தொடருகிறது. வீட்டை விட்டு வெளியே காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் நாட்டியக் காரிகளாகவும், வேசைகளாகவுமே கருதப்பட்ட காலகட்டம் முகலாயர்களின் ஆட்சிக் காலம். அவர்களால் தோற்கடிக்கப்பட்ட ராஜபுதன மன்னர்களின் மனைவிகளெல்லாம், எங்கே மாட்டிக் கொண்டால் தாம் சீரழிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தின் காரணமாகவே கணவனின் சிதையில் குதித்து உடன்கட்டை (சதி) ஏறினர்.

மீரா போன்ற பக்தைக்கு, தான் விரும்பிய பகவான் கிருஷ்ணனைத் தொழக்கூட அனுமதி கிடைக்கவில்லை. மீராபாய், முக்திபாய், ஜனாபாய், வீணாபாய் போன்ற பெண்களெல்லாம் பக்திமார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, கீர்த்தனங்களை இயற்றிப்பாடி தங்கள் தனிமையை விரட்ட வேண்டியிருந்தது. சித்தூர் ராணி சின்னம்மா, ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்றவர்கள் விதவைகளான பிறகே அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது.

இப்படியாக நாம், இருபத்தோராம் நூற்றாண்டில் “முன்மாதிரி’ப் பெண்கள் என்று குறிப்பிட வேண்டுமானால்,  வேதகாலப் பெண்களைத்தான் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.

ஆங்கிலத்தில்: கிருஷ்ணன் / தமிழில்: அறந்தை மணியன்

Leave a Reply