வைணவக் கவி சூர்தாஸ்

விழாக்கள் விசேஷங்கள்

கண்ணற்ற கவிஞர்

ஹிந்தி இலக்கியத்தின் தலை சிறந்த சிற்பிகளுள் ஒருவர். இப்படிப் போற்றி வணங்கப் படுபவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சூர்தாஸ் என்ற பெருங் கவிஞர்.

தில்லிக்குத் தெற்கேயுள்ள சிஹி என்ற கிராமத்தில், ஓர் ஏழை சரஸ்வத் பிராமண குடும்பத்தில் சூர்தாஸ் பிறந்தார். குழந்தை குருடாகவே பிறந்தது. அவரது ஆறாவது வயதில் அவரது தந்தைக்கு உள்ளூர்ப் பிரபு 2 தங்க நாணயங்களைக் கொடுத்தான். அதனால் ஒரு சில மாதங்களுக்கு உணவுப் பிரச்னை தீரும். இரவில் அந்த நாணயங்களை ஒரு எலி எடுத்துக் கூரையில் ஒரு பொந்தில் வைத்துவிட்டது. காலையில் தந்தையின் கதறலைக் கேட்டு, “இறைவனிடம் முறையிட்டால் அவர் வழிகாட்டுவார்” என்ற சிறுவனுக்குத் தந்தையின் வசை மொழிகள்தான் கிடைத்தன. பிறகு தன்னை வீட்டை விட்டுப் போவதற்கு அனுமதித்தால், தங்க மோகராக்கள் உள்ள இடத்தைக் காட்டுவதாக சூர் கூற, மோக ராக்கள் கிடைத் தன தந்தைக்கு. விடுதலை கிடைத்தது சிறுவனுக்கு!

எட்டு மைல் தொலைவில் ஒரு வீட்டுக்காரன் காணாமல் போன தனது பத்து பசுக்களைக் கண்டு பிடிக்க சூரை வேண்டி னான். பசுக்கள் கிடைத்தன. அந்த நன்றியில் சூருக்கு ஒரு குடிசை கிடைத்தது. சூரின் இந்த அபூர்வ திருஷ்டி பற்றிய செய்தி பரவலாயிற்று. மெள்ள மெள்ள அவனைக் காணக் கூட்டம் பெருகலாயிற்று. எனவே ஓர் இரவில் சூர் கண்ணன் பிறந்த வடமதுரைக்கு ஓடி விடுகிறான். அங்கும் யாரும் தன்னைத் தேடி வராமலிருக்க மதுரா நகருக்குத் தெற்கே, சற்றே தொலைவி லுள்ள கௌகாட் என்ற யமுனைத் துறைக்குச் சென்று வசிக்கிறான். கண்ணனைப் பற்றிப் பாடுகிறான். அவனிட மிருந்து பிரிந்து துன்புறும் அவல நிலையை, தன்னுடைய முறை யீடுகளாகப் பாடுகிறான். அங்கும் எப்படியோ சூர் தாஸைச் சுற்றி ஒரு கூட்டம் சேர்ந்து விடுகிறது.

அப்போது சூரின் வாழ்க்கை யில் மிக முக்கியமான ஒரு சந்திப்பு நிகழ்கிறது. வல்லபாச் சாரியார் என்ற பெரிய மகான் மதுராவுக்கு வந்தவர், கௌகாட் டிற்கும் வருகிறார். சூர்தாஸ் அவரைச் சென்று சந்திக்கிறார். வல்லபர் சூர்தாஸைப் பாடுமாறு பணிக்கிறார். சூர் இரண்டு முறை யீட்டுப் பாடல்களைப் பாடு கிறார். அதைக் கேட்ட வல்லபர், “சூர், ஏன் இப்படிக் கூனிக் குறுகிக் குறைப்பட்டுப் புலம்பு கிறாய்? இதை விட்டுவிட்டு பகவான் கிருஷ்ணரது பால லீலைகளைப் பாடு” என்றாராம். சூருக்கு அது விளங்கவில்லை.

உடனே வல்லபாச்சாரியார் சூர்தாஸைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டு, பாகவத புராணத்துக்குத் தான் எழுதியுள்ள சுபோதினி என்ற உரை முழுவதையும் விரிவாக எடுத்துரைத்தார். பாகவத லீலா சூர்தாஸின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றிக் கொண்டது. அப்போது அவர் பாடிய முதல் பாடல் கண்ணன் பிறந்த அன்று விரஜபூமியில் ஆயர்பாடியில் நிலவிய கோலாகலக் காட்சிகளைப் பற்றியது. அதில் தொடங்கி கடைசியில் ராதா கிருஷ்ண அன்பு, இறுதியாகக் கண்ணனின் பிரிவால் ஏற்படும் மனத் துயர் என்று முடிகின்றன சூர் தாஸ் பாடல்கள். பின்னர் குருவோடு குழந்தைக் கண்ணனது கோகுலத்துக்குப் போகிறார் சூர்தாஸ். வல்லபர் அவருக்கு நவநீத ப்ரியாஜி விக்ரகத்தைக் காட்டுகிறார். அங்கிருந்து கோவர்தன கிரியிலுள்ள கோவர்தநாத்ஜியைக் காணச் செல் கிறார். அங்கேயே கோவில் பாடகர் குழுவில் சேருமாறு சூர்தாஸைப் பணிக்கிறார் வல்லபாச்சாரியார். அன்று முதல் சூர்தாஸ், கோவர்தன கிரியிலேயே வாழ்ந்து, பாடும் பணியே செய்து, கண்ணன் மீது ஆயிரக் கணக்கான பாடல்களை இயற்றுகிறார். அவரது பாடல்களைக் கேட்ட அக்பர் பாதுஷா, வடமதுரைக்கு வந்த போது சூரைக் காண விரும்பினார். தன் மீது ஒரு பாடல் இயற்றவும் வேண்டி னார். சூர் பாடிய பாடலில், கிரிதர கோபாலனைத் தவிர தன் உள்ளத்தில் வேறு யாருக்கும் இடமில்லை என்று கூறுகிறார். அவரது உறுதியை மெச்சிய அக்பர், பின்னால் சூர்தாஸின் கவிதை களை சேகரித்தார். அப்பாடல்களைக் கொண்டு தருபவர்களுக்கு பணமும் வழங்கினார்.

சூர்தாஸின் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. ஒருநாள் அவரது பணியாள் அவரது ஜலபாத்திரத்தை நிரப்பு வதற்காக வெளியே சென்றான். உண வருந்திக் கொண்டிருந்த சூர்தாஸுக்கு விக்க லெடுக்க, நீர் பாத்திரத்திற்காக கை நீட்டினார். பையனோ திரும்பி வரவில்லை. அப்போது கண்ணனே பணியாளாக வந்து தனது தங்கத் தம்ளரில் அவருக்கு நீரை யளித்தான். அந்தப் பொன் லோட்டாவைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். பணியாள் சொல்ல உண்மை தெரிந்தது.

சூரின் மரணம் நெருங்கியது. அதை அவரும் உணர்ந்தார். அவருடைய ஒரே வருத்தம், தான் நினைத்தபடி 1,25,000 பாடல்களை முடிக்க இன்னும் 25000 பாக்கி என்பதுதான். அன்றிரவு அவரது கனவில் கண்ணனே வந்து தானே பாக்கியுள்ள பாடல்களை எழுதுவதாக வாக்களித்தான். மறுநாள் 25000 பாடல் களும் வந்துவிட்டன. அவற்றில் முத்திரையாக சூர் என்று இல்லாமல் சூர் ஷ்யாம் (அதாவது சூரின் கண்ணன்) என்று காணப்பட்டது.

சூர்தாஸின் வாழ்க்கை வரலாறாக நமக்குக் கிடைப்பது மிகக்குறைவே. சௌராசி வைஷ்ணவன் கி வார்த்தா (84 வைணவர்களுடன் உரையாடல்) என்ற நூலுக்கு ஹரிராய் எழுதிய உரைதான் ஆதாரம். அந்த நூலில் 84 அத்தியாயங்கள். அதில் ஒரு அத்தி யாயம் சூர்தாஸைப் பற்றியது. வல்லப சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாடு, சடங்குகள், பாடல்கள் இவை முக்கியம். வழிபாட்டுப் பாடல்களை எழுதியவர் எண்மர், (சூர்தாஸும் வேறு அவ ரோடு சமகாலத்தில் வாழ்ந்த எழுவரும்) அவர்களது பாடல்களில் அவர்களது பெயர்கள் முத்திரையாக வருவதால், அவர்களுக்கு “அஷ்ட சாப்’ என்று பெயர். அவர்களை வல்லபரோடும், அடுத்த ஆச்சாரியரான அவ ரது மைந்தர் விட்டல்நாத் துடன் இணைத்த உரை யாடல் இலக்கிய வடிவமே வார்த்தா.

சூர்தாஸின் ஆவி பிரியும் நேரத்தில் விட்டல்நாத் அவரைக் காண வருகிறார். “இப்போது தங்கள் கண்கள் எங்கே’ என்று கேட்கிறார். “சியாமளின் கருமையில் என் கண்கள் திளைக்கின்றன. அழகிய தெளிவான இக் காட்சியைக் கண்ட பின் இனி ஒருக்கணமும் இக்கூட்டில் இருக்க முடியாது’ என்று சொல்லி இறைவனோடு இரண்டறக் கலக்கிறார் சூர். அதுவே சூர்தாஸின் இறுதிப் பாடல். சூர்தாஸ் ஒரு லட்சம் பாடல்களும் அவருக்காக இறைவனே 25000 பாடல் களும் எழுதியதாக “வார்த்தா’ குறிப்பிடுகிறது. எனினும் இப்போது சுமார் 8000 பாடல் கள் தான் காணக் கிடைக் கின்றன. அவரது காலத் திற்குப் பின் ஓரிரு நூற்றாண் டுகளில் அவரது பாடல்கள் சூர் சாகர் என்ற பெயரில் திரட்டப் பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் அவர் பாடியவை என்று சொல்ல முடியாது. பாமர மக்கள் மொழி யாகிய ப்ரஜ பாஷையில் அற்புதமாகப் பாடிய சூர் தாஸ் ஹிந்தி இலக்கியத்தின் தலை சிறந்த மூவரில் ஒருவ ராகப் போற்றப்படுகிறார். அவரது 500 வது ஆண்டு ஜயந்தி விழா 1978 – 79 இல் வட இந்தியாவெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. சூர்தாஸ் சங்கீத ஸம்மேளன் என்று ஆண்டு தோறும் இசை விழாக்களும் நடைபெறுகின்றன.

வல்லபாச்சாரியாரின் சீடனான பின் சூர்தாஸ் பாடிய முதல் பாடல் கண்ணன் பிறந்த முதல் நாள் காட்சி. திவ்யப் பிரபந்தத்தில் கண்ணனை குழந்தையாக பாவித்து அவனைப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டிப் பாடியவர் பெரியாழ்வார். அவரும் கண்ணன் பிறந்த முதல் நாள் காட்சியைப் பாடுகிறார் இதோ:

ஓடுவார், விழுவார், உகந்து ஆலிப்பார்

நாடுவார், நம்பிரான் எங்குத் தான்? என்பார்

பாடுவார்களும், பல்பறை கொட்ட நின்று

ஆடுவார்களும் ஆயிற்று ஆயப் பாடியே.

உற்சாக வெறியில் ஆடியும் பாடியும் பல்பறை கொட்டுவதோடு அவர்கள் நின்றார்களா என்றால் இல்லை, தயிரையும் பாலையும் நெய்யையும் தெருவெல்லாம் ஓட விட்டார்களாம்.

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்.

நறுநெய் பால்தயிர் நன்றாகத் துழாவுவார்,

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்தெங்கும்

அறிவழிந்தனர், ஆய்ப்பாடி ஆயரே.

இப்போது சூர்தாஸின் பாடலைப் பார்க்கலாம். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வியப்பாக இருக்கக் காண்கிறோம்.

நந்தன் மனைவி யசோதைக்கு

மாதவன் வந்து மகனாய்ப் பிறந்தான்.

ஆணும் பெண்ணும் ஆயர் பாடியில்

நந்தன் மாளிகை நாடி வந்தனர்.

கண்ணன் பிறப்பால் களிவெறி மூண்டு

கோகுலம் கண்ட கோலா கலமெலாம்

எப்படிச் சொல்வேன் ஏழையென் நாவால்?

முற்ற மெங்கும் மக்கள் கூட்டம்

தயிரும் பாலும் தரையில் ஓட

பொன்னும் மணியும் வாரி இறைத்தனர்.

ஆடுவார் பாடுவார் ஆனந்தக் கூத்தினில்.

நந்தன் மகனாய் இன்று பிறந்து

நானிலம் மகிழச் செய்யும் அவனே

சூர்தாஸின் பிரபு சியாம சுந்தரன்.

ஆழ்வாரைப் போலவே சூர்தாஸும் பல அழகான குழந்தைச் சித்திரங்களைத் தருகிறார். ஒன்று அவன் வெண்ணெய்க்காக ஆடும் காட்சி.

“கண்ணா ஆடு, கண்ணா நடமிடு

வேண்டிய மட்டும் வெண்ணெய் தருவேன்’

அன்னை யசோதை ஆணை இடுகிறாள்.

சின்னஞ் சிறுகால் தரையை உதைக்க

காலில் கட்டிய கிண்கிணி ஒலிக்க

கண்ணன் ஆடிய காட்சியைக் கண்டேன்

பாடியே சூர்தாஸ் பரவசம் அடைவேன்.

விண்ணும் மண்ணும் வியக்கும் அவன்புகழ்

. ஆனால் அவனோ

வெண்ணெய் வேண்டி நடமிடுகின்றான்.

மற்றொரு சொற்சித்திரம், மூவடியால் உலக ளந்த நாயகன் யசோதை வீட்டில் நிலைப் படியைத் தாண்ட முடியாமல் தவிக்கும் காட்சி.

முற்றம் தனிலே முழங்கால் தேய

தவழுவான் நன்கு, ஆனால் அந்த

நிலைப்படி எப்படித் தாண்டுவதறியான்.

முயன்றான், விழுந்தான்; முயன்றான் மீண்டும்

விழுந்தான் மீண்டும், விம்மினான் கண்ணன்,

மூன்றே அடிகளால் மூவுல களந்தவன்.

பார்த்துச் சிரித்தான் பலரா மனுமே

தம்பியின் வேஷம் தமையன் அறிவான்.

சுந்தர சியாமளன் சூர்தாஸின் பிரபு

செய்யும் லீலைகள் சிந்தையில் கொள்வோர்

எய்தும் இன்பத்திற்கு ஈடிணை உண்டோ ?

வேய்ங்குழல் இனிமை பற்றி ஒரு பாடல்;

யமுனைக் கரையில் எங்கள் கண்ணன்

ஊதிய குழலில் உலகம் மகிழ்ந்தது.

சராசரங்கள் நிலை மாறினவே.

காற்று நின்றது யமுனையும் நின்றது

பேச்சி ழந்தது பெட்டைக் காகம்.

மயங்கி வீழ்ந்தன மான்களின் கூட்டம்.

அவனொளி கண்டு ஆச்சரி யத்தால்

விலங்கும் புள்ளும் விரைந்து நின்றன.

புல்லைச் சுவைக்க மறந்தது பசுவும்.

தன்னிலை மறந்தனர் தவயோ கியரும்.

இத்தகை இன்பம் பெற்றவர் பேற்றை

சொல்லுவ தெங்ஙனம் என்றே சூர்தாஸ்

வியப்பில் ஆழ்கிறேன் வேய்ங்குழல் விந்தையில்.

கண்ணன் பிருந்தாவனத்தை விட்டு மதுரைக்குப் போகிறான். பிறகு அவன் திரும்பவேயில்லை. ஒருமுறை உத்தவரை அனுப்புகிறான் கோபியருக்கு ஆறுதல் சொல்ல. அன்பு வலையில் சிறைப்பட்ட கோபியர் நிலை பற்றி இரு பாடல்கள்.

கண்ணன் எங்களைக் கைவிட்ட நாள்முதல்

அல்லும் பகலாய் அழுத கண்ணீரும்

மழை மேகம் போல் சொரிகின்றதுவே.

கண்மை அழிந்தது கன்னம் கருத்தது.

ஆடைகள் நனைந்து உலரா வண்ணம்

உடலும் கொதித்து உருஅழி கின்றது.

சூர்தாஸ் வேண்டுவேன் சியாமளா காப்பாய்,

உன் பிரிவாலே உயிர்துடித் திடும் இவ்

விரஜ தேசத்தை வீழ்ந்திடா வண்ணம்.

மற்றொரு பாடலில் தன்னிலையும் அதுவே எனப் புலம்புகிறார் சூர்தாஸ். மிக அழகான பாடல் – விட்டில் வந்து விளக்கை அணைந்தது

விளைந்தது சாவே வேறொன் றில்லை.

தாமரை நாடிய வண்டும் பின்னர்

தாமரை மூடிடத் தன்னுயிர் இழந்தது.

வேடன் இன்னிசை விரும்பிய மானும்

வலையில் வீழ்ந்து வாழ்வை இழந்தது.

அன்பு வலையில் அகப்பட் டவர்கள்

ஆரும் இன்பம் துய்த்திட வில்லை.

கோவிந்தன் அன்பை கோபியர் நாடினோம்

மாதவன் எங்களை மயக்கிய பின்னர்

கைவிட்டு எங்கோ காணாது போனான்.

சூர்தாஸ் எனக்கும் இதுவே நிலைதான்.

அவன்புகல் என்றே அவனடி புகுந்தேன்

கண்ணீ ரேஎன் கதிஎன் றாச்சு.

சமூகப்ரக்ஞை கொண்ட சூர் எல்லோரும் சமம் என்று பல இடங்களில் பாடுகிறார். “என் பிரபுவின் சன்னதியில் உனது குலத்தையும் சாதியையும் யாரும் கேட்பதில்லை’ என்ற சூர்தாஸின் வரிகள் போற்றத் தகுந்தவை. அவற்றுக்கு நாம் செவிசாய்த்து, நாட்டைத் துண்டாடும் சாதிப் பிரிவினைகளைப் போக்க வழிசெய்வோமா?

மு. ஸ்ரீனிவாஸன்

பாடல்கள் தமிழாக்கம்: மு.ஸ்ரீ

Leave a Reply