வைணவ பக்தகவி: துகாராம்

விழாக்கள் விசேஷங்கள்

style="text-align: center;">பாடிக் கரைந்த பக்தர் துக்காராம்

 

வாசலருகே கூப்பிய கரங்களுடன் கருடன். வடக்கே ஓர் அரசமரம். தெற்கே சங்கரரின் லிங்கம். இந்திராயனி ஆற்றின் கரை அழகுடையது. அங்கே லக்ஷ்மி நாராயண வனம். வெளியே பைரவர், அருகே அனுமன். அங்கேதான் விட்டோபாவை உளத்தில் தாங்கி, அவன் புகழ் பாடுகிறான்.” இது மகாராஷ்டிரத்தின் மக்கள் கவி, பக்த கவி என்று பெரும் புகழ் பெற்ற துக்காராம் தமது ஊரைப் பற்றிப் பாடிய ஓர் அபங்கம் என்ற பக்திப் பாடல். அண்மையில் துக்காராம் பாடிய அந்த தெஹுவுக்குச் சென்றிருந்தேன்.

பாண்டு ரங்கன் ஆலயத்திலிருந்து மணியோசையும், பக்தர்களின் பாடல் ஒலியும் காற்றிலே மிதந்து வந்தன. துக்காராமின் பாடலில் காணும் சூழ்நிலை இன்றும் கூட அப்படியே இருக்கிறது.

துக்காராம் கி.பி.1598 ஆம் ஆண்டு தெஹு கிராமத்தில் பிறந்தார். தந்தை மாதவராவ் தானிய வியாபாரி. வசதியான குடும்பம். அவர்கள் வழிவழியாக பாண்டு ரங்க பக்தர்கள். துக்காராமுக்கு இளமை யிலேயே திருமணம். இரண்டு மனைவிகள் ருக்குமாபாய், ஜீஜாபாய். ஒரு மகன், ஒரு மகள். வாழ்க்கை இன்பமாகப் போய்க் கொண் டிருந்தது. பெற்றோர்கள் இறந்த பின் துன்பங் கள் தொடர்ந்தன. துக்காராம் இளமையிலிருந்தே தெய்வபக்தி உடையவர். சாதுக்களை ஆதரித் தார். பாண்டுரங்கனுக்கு ஓர் ஆலயம் எழுப் பினார். ஒருமுறை பஞ்சம் வந்தது. வியாபாரம் படுத்தது. வறுமை அவரை ஆட்கொண்டது. கடன் வாங்கி முதலீடு செய்தார். அதிலும் பெருநஷ்டம். வாழ்க்கை கசந்தது. உள்ளம் இறைவன் பால் திரும்பியது. இதை ஒரு பாடலில் அவரே சொல்லுகிறார். “நான் வியாபாரி. இந்தக் கடவுள் எங்கள் குல தெய்வம். என் பெற்றோர் இறந்த பின் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு பஞ்சம் வந்து என் பணமெல்லாம் தொலைந்தது. ஒரு மனைவி பட்டினியாலேயே இறந்தாள். அந்த அவமானத்தால் நான் குன்றினேன். வியா பாரம் படுத்தது. கட்டிய கோவிலும் இடிந்து பாழாகியது. நான் பகவத் பிரசாரத்தில் இறங் கினேன். மகான்களுடைய ஒளி பொருந்திய பாடல்களையும் பாடினேன். அவர்களது புனித பாதங்களைக் கழுவினேன். மான அவமானத்தைத் துறந்தேன். பிறருக்கு என் உடலால் பணி செய்தேன். உற்ற நண்பர் களைத் துறந்தேன். உலகம் கசந்தது. கூட்டத்தின் குரலைப் புறக்கணித்தேன். நல்லது தீயதை நானே தேர்ந்தேன். அதன் பின்னர் என்னுள் கவிதை எழுதும் ஆற்றல் பிறந்தது. உள்ளத்தில் விட்டோ பாவின் மலர்ப் பாதங்களை உறுதியாக நிலை பெறச் செய்தேன்.”

துக்காராமின் வாழ்க்கையில் பற்பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கர்ண பரம்பரைக் கதைகள் வழங்கி வருகின்றன. கடன் வாங்கி தானியங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு வெளியூர் சென்றார். பாதி வழியில் இரவு நேரம், பேரிடி, பெரு மழை. மாடுகளை அவிழ்த்து விட்டார். விடிந்தால் மாடுகளையும் காணோம். தானிய மூட்டைகளும் மழை வெள்ளத்தில் போய்விட்டன. கடன் தொகையை எப்படி அடைப்பது, குடும் பத்தை எப்படிக் காப்பது. தெய்வமே துணை என்று பாண்டுரங்க தியானத்தில் ஆழ்ந்தார் துக்காராம். அங்கே வீட்டில் அவரது வண்டி வந்து நின்றது. துக்காராம் இறங்கி வந்து மனைவி ஜீஜாபாயிடம் கிடைத்த பெரும் லாபத்தைக் கொடுத்தார். குளித்துவிட்டு வருவதாகச் சென்றார். ஜீஜாபாய் கடனைத் திருப்பிக் கொடுக்கச் சென்றால், துக்காராமே நேரில் வந்து கடன் தொகையைக் கொடுத்து விட்டார் என்றார் சவுகார். பெருமகிழ்ச்சியோடு வீடு திரும்பினால் துக்காராமைக் காணோம். அவரைத் தேடிக் கண்ட பின்னரே, வந்தவர் பாண்டுரங்கனே என்பதைக் கணவனும் மனைவியும் உணருகிறார்கள்.

துக்காராமின் அபங்கங்கள் பிரபலமாயின. ஆலயத்தில் அவர் பாடும்போது பெரும் கூட்டம் சேர்ந்தது. பலர் அவரது சீடர்க ளாயினர். அதைக் கண்டு பொறாமை கொண்டார் ராமேஸ்வர் பட் என்ற அந்தண பண்டிதர். “நீ பிறப்பால் தாழ்ந்தவன். இப் பாடல்களை எழுதும் உரிமை உனக்குக் கிடையாது. இனிமேல் பாடல் புனையாதே. இதுவரை எழுதியதை ஆற்றில் எறிந்துவிடு” என்று உத்தரவிட்டார். துக்காராமும் மிகுந்த மன வருத்தத்தோடு தன் பாடல்கள் எழுதிய ஏடுகளை இந்திராயனி ஆற்றில் எறிந்து விட்டார். பிறகு ஆற்றின் கரையிலேயே தியானத்தில் நிலைத்தார். 13 வது நாள் அவரது பாடல்களை நதிதேவதை அவரிடம் மீட்டுத் தந்ததாக ஒரு கதை. ஆனால் இது உண்மையாக நடந்ததே என்பது இந்த நிகழ்ச்சியை அவரது பாடல் ஒன்று பேசுவதி லிருந்து தெரிய வருகிறது. துக்காராம் எழுது கிறார். “ஒரு பேரிடியாகக் கவிதை எழுதத் தடை (பிறந்தது. என் பாடல்கள் ஆற்றில் அமிழ்ந்தன. என் உள்ளம்) துன்புற்றது. நாராயணனே வந்து என்னைத் தேற்றினான். இதுவே – என் கவிதையே என் மூலதனம்.” பின்னால் மனம் திருந்திய ராமேஸ்வர்பட் இவருடைய சீடரானார்.

துக்காராம் சிவாஜி மகாராஜாவின் சமகாலத்தவர். அவரது பெருமையைக் கேள்விப் பட்ட சிவாஜி மாறுவேடத்தில் வந்து அவரது கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒற்றர்கள் மூலம் அதையறிந்த அவுரங்கசீபின் படைவீரர்கள் அவரைப் பிடிக்கக் கோவிலை வளைத்துக் கொண் டனர். இதை ஞானதிருஷ்டியால் அறிந்த துக்காராம் பாண்டுரங்கனை வேண்ட, இறைவன் சிவாஜி வேடத்தில் எதிரிகள் கண்ணெதிரே ஓட, அவர்களும் அவரைத் துரத்திக் கொண்டு ஓடினர். அங்கேயே விழுந்து மாண்டனர். இந்தக் கதை உண்மையோ இல்லையோ, ஆனால் துக்கா ராமின் வறுமையை நீக்கி சிவாஜி பொன்னும் பொருளும் அனுப்பியதும், துக்காராம் அதை ஏற்க மறுத்ததும் உண்மை. அரசவைக்கு வருமாறு வந்த அழைப்பையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், சிவாஜிக்கு நன்றி பாராட்டியும், படைவீரர்களைப் பற்றியும் ஏழு அபங்கங்கள் எழுதி அனுப் பினார்.

துக்காராமின் குரு பாபாஜி சைதன்யர். மாசி மாதம் சுக்ல பட்ச தசமியன்று அவர் தன் கனவிலே வந்து தீட்சை அளித்ததாகவும், ராமகிருஷ்ண ஹரி என்ற மந்திரத்தை உபதேசித்ததாகவும் அவரது ஒரு பாடல் பேசுகிறது.

பாண்டுரங்கனது பெருமையைப் பேசிக் கொண்டும், பல புதிய புதிய பாடல்களைப் பாடிக்கொண்டும், எல்லோரையும் இறை வனது திருநாமத்தைப் பாடிப் பாடி உய்யு மாறும் உபதேசம் செய்து கொண்டும் வாழ்ந்த துக்காராம் கி.பி.1650 ஆம் ஆண்டில் தெஹு கிராமத்தில் பரமனைப் பாடிக் கொண்டே பூத உடலோடு விண்ணகம் சென்றார் என்பது கர்ண பரம்பரைச் செய்தி. ஆனால் ஒரு பாடலில் துக்காராம் சொல்லுவது சிந்தனைக் குரியது: “பாண்டுரங்கன் என்னை வானுலகுக்கு இட்டுச் செல்வதற்காக வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறான். துக்கா இந்த உடலோடு மறைகிறேன்” (அபங்கம் 3616).

துக்காராம் விண்ணிலே ஏறும் காட்சி சிலை வடிவிலே ஆலய வாயிலில் உள்ளது. உள்ளே பாண்டுரங்கனும் ருக்மிணியும் தனித்தனிக் கருவறைகளில் காட்சி தருகிறார்கள். ராமன், அனுமன், சிவன். சக்தி சன்னிதிகளும் அங்குள்ளன. துக்காராமின் சீடர்கள் சந்தாஜி தெலி, கங்காராம் மவாலா இருவரும் சேகரித்து எழுதிய துக்காராம் அபங்கங்களின் கையெழுத்துப் பிரதியும் அங் குள்ளது. நாங்கள் சென்ற அக்காலை நேரத்திலும் பஜனை ஹாலில் பெருங்கூட்டம். தம் புராவை மீட்டிக் கொண்டு கீர்த்தனக்காரர் துக்காராமின் அபங்கத்தைப் பாடுகிறார். கூட்டம் பின்பற்றுகிறது. பக்தி நிறைந்த சூழல். சற்றுத் தொலைவில் இந்திராயனி ஆற்றின் கரையிலே துக்காராம் நினைவாலயம் உள்ளது. அவருக்கு எங்குமே சமாதி இல்லை.

ஸந்த் துக்காராம் பாடிப் பாடிக் கரைந்தார். கீர்த்தனம் பாடியே கடவுளை அடையலாம் என்று சொன்னவர் அவர். அவரை நாடறியச் செய்த பாடல்களே “அபங்கங்கள்.’ மராத்தியில் “அபங்க’ என்றால் பிரிக்க முடியாதது. தனது பாடலைப் பற்றியே ஓர் அபங்கம்: “நீ ஒரு கவி என்பர் சிலர். ஆனால் என் சொற்கள் எனதல்ல. என் முயற்சியால் விளைந்தவைகளுமல்ல. இறைவன் என்னைப் பாடப் பணிக்கிறான்; நான் பாடு கிறேன். நான் பலவீனன், ஏதும் திறமை யற்றவன். என் செயலால் ஆவது ஒன்று மில்லை. அவனே தலைவன், என்னை ஆளுபவன். நான் அவன் பணியாளன், அவனது பெயரைத் தாங்குபவன்.”

“அருணகிரிநாதரைப் போல, பாடும் பணியே பணியாகப் பெற்றவர் துக்காராம். உலகம், அதன் இயல்பு, இறைவனின் இயல்பு, கர்மம், பாபம், நன்னெறி, தீநெறி, சமயத்தின் அவசியம், உண்மை வழிபாடு, அனுபவம், மகான்கள், சுயசரிதைக் குறிப் புகள், கிருஷ்ண லீலைகள், ராமன், கிராமிய விளையாட்டுகள், பொழுது போக்கு, சடங்குகள், நிந்தா ஸ்துதி, தெஹு, பண்டரிபுரம் என்று பலப்பல பொருள்களைப் பற்றிப் பாடியிருக்கிறார் அவர்.

துக்காராம் உலகில் வந்த காரியத்தைப் பற்றிப் பேசுகிறது ஒரு பாடல்: “இறைவனது செயல்களை உலகுக்கு உணர்த்தவும், பொய்யினின்றும் மெய்யான வற்றைப் பிரித்துக் காட்டவும் நான் வந் துள்ளேன். இறைவன் எப்போதும் என்னுடன் இருக்கிறான். பழைய மகான்களைப் போலவே, நானும் மெய் வழியை நாடி வந் திருக்கிறேன். மகான்கள் காட்டிய வழியி னின்று தங்கள் அறியாமையால் மக்கள் தவறி விட்டனர். பண்டிதர்கள் சொற்களின் பொருளைப் பற்றி சண்டையிடுகிறார்கள். மறைநூல்களின் பொருளில் தெளிவு காண்பதில்லை. மக்கள் புலன் வழி ஓடுகிறார் கள். பக்தி எனும் மணியடித்து, நான் இறை வனது திருநாமத்தின் துணையால் உங்களையெல்லாம் அவனது பாதாரவிந்தத்திற்கு இட்டுச் செல்வேன்.”

புண்டரீகன், எறிந்த செங்கல் மீது இடுப்பிலே இரு கைகளை வைத்த வண்ணம் நிற்கும் பண்டரிநாதனது எளிமையும் அழகும் நிறைந்த தோற்றத்தைத் துக்காராம் பல பாடல்களில் பாடுகிறார். அவற்றுள் ஒன்று இதோ:

பண்டரி நாதன் தோற்றத்தைப்

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாது.

அண்டம் அளாவிய வடிவுடையோன்

அச்சிறு கல்மேல் நிற்கின்றான்.

குண்ட லங்கள் அசைந்தாட

கௌஸ்துப மணியைக் கழுத்துடையோன்

வண்ண மஞ்சள் பட்டுடுத்தி

வையம் காத்து நிற்கின்றான்.

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து வரும் இறைவனது அன்பை உறுதியாக நம்பும் துக்காராம் பாடுகிறார்:

ஏனோ கவலைப் படுகின்றாய்

எல்லாம் அவனது பொறுப்பன்றோ?

தானே பாலைப் பரிந்தூட்டும்

தாயன் பொத்த தயவுடையான்

தானே குழந்தையின் துன்பத்தில்

தவித்துத் துடிக்கும் தாயைப் போல்

ஊனம் இல்லா உள்ளத்தோன்

உறுதியாய் நம்மைக் காத்திடுவான்.

கர்வத்தைப் பற்றிய ஒரு பாடல்: “தானியத்தை அளக்கும், படி சொல்லுகிறது “நானே அனைத்தையும் அளக்கிறேன்’ என்று. ஆனால் அதன் சொந்தக்காரன் அதை நிரப்பி அளந்தபின் அதைக் காலி செய்கிறான். இறைவா, என்னில் கர்வத்திற்கு இடந் தராதே. துக்கா சொல்கிறேன். எவன் சூத்திரதாரியோ அவனுக்கே மாட்சிமை உரியது.” ஆசையைப் பற்றிப் பேசும் துக்காராம் அதில் நாமாகவே சென்று மாட்டிக் கொண்டு அல்லல்படுகிறோம் என்கிறார்.

குழலின் இசையில் மயங்கிய நாகம்

கூண்டில் அடைந்தது போலவே நானும்

ஆசை களினால் அலைக்கப் பட்டு

அடிமை யாகச் சிறைப் பட்டுள்ளேன்.

தூண்டிலில் சிக்கிய மீனைப் போல

துடித்துத் துடித்துத் துன்புறுகின்றேன்.

வேடன் வலையில் விழுந்த புள்போல்

ஆசை வலையில் அழுந்திய என்னை

நேசக் கரத்தால் பண்டரி நாதா

நீதான் மீட்டுக் காத்திட வேண்டும்.

பக்தர்களை அதிகமாகச் சோதிக்கிறான் பரமன். அது ஒரு நிந்தா ஸ்துதியாக வெளிப் படுகிறது இப்படி:

உன்னைப் போன்ற கொடுங்கோலன்

உலகில் உண்டோ  இலை என்பேன்.

சொன்ன சொல்லைக் காத்த வொரு

மன்னன் அரிச்சந்திரனை நீ

என்ன வெல்லாம் இழக்க வைத்தாய்?

எண்ணிப் பார்த்தால் இடர்ப் படுவோம்.

பொன்னும் மணியும் புவியரசும்

போனால் மட்டும் போதாதோ?

அன்னை அரசி அவன் ஆவி

அவளையும் ஏனோ பிரித்திட்டாய்?

தமயந் தியையும் நளனையுமே

தம்பதி யாகச் சேர்த்துப் பின்

சதியால் பிரித்ததும் சரிதானோ?

உன்னை நம்பிய பலியரசன்

உவந்துநீ கேட்டதைத் தர இசைந்தான்.

மூவடி கேட்ட வாமன நீயும்

மூவுல களந்திட வளர்ந்து விட்டாய்.

வஞ்சக மன்றோ வாமனன் செய்கை?

வெஞ்சமர்க் களத்தில் வீழ்ந்த கர்ணனை

கவச குண்டலம் கேட்டுப் பெற்றதும்

பெருமையோ உனக்கு, பேசுவாய் கண்ணா.

உன்னை நாடுவோர் கூறும்பயன் இதுவே.

என்ன நடக்கும் எதிர் காலத்தில்

என்ப தறியேன் துக்கா ராமும்.

எல்லாமாகி எங்கும் நிற்கும் இறைவனை வழிபடுவதற்கு அவனது திருநாமமொன்றே வழி என்று பேசுகிறார் துக்காராம்:

உள்ள பொருள்கள் அனைத்திலுமே

உள்ளும் புறமும் இடையின்றி

எங்கும் பரந்து நிற்பவனை

எங்கே சென்று தேடுவது?

உடலும் உள்ளமும் நீயானால்

உனக்கு எதைநான் தரமுடியும்

உன்பெயர் ஒன்றே வழிபாடு

உயர்ந்த தீபம் தூபமெலாம்.

“விண்ணகத்து வேட்டை நாய்’ பாடிய ஆங்கிலக் கவிஞன் ஃபிரான்சிஸ் தாம்ஸன் இறைவன் வேட்டை நாயாக மனிதனைப் பிரபஞ்ச வெளியெல்லாம் துரத்திக் கொண்டு வரும் பெருங் கருணையைப் பாடுகிறார். துக்காராமும், தான் எங்குச் சென்றாலும், அங்கெல்லாம் இறைவன் தன்னைப் பின் பற்றி வருவதையும், அதனால் அவனைக் கணநேரமும் மறக்க முடியாமல் செய் வதையும் பாடுகிறார். இறுதியாக தெய்வ தரிசனத்தின் ஆனந்த அனுபவத்தையும் வர்ணிக்கிறார்:

“நான் பாக்கியசாலி, இறைவனின் திருமுகத்தைக் கண்டேன். பேரின்பக் கடலில் ஆழ்ந்தேன். என் உள்ளம் அதில் லயித்தது. என் கரங்கள் அவனது திருவடிகளைப் பற்றின. இனி நான் காலத் துக்குக் கட்டுப்பட்டவனல்லன். உடலின் ஒவ்வொரு அணுவிலும் தெய்வக் களிப்பு. கடலும் கடல் அலைகளும் ஒன்றாகி விட்டன. எங்கும் எங்கும் எல்லாம் இறைவன் தான். எல்லா உயிர்களும் தெய்வாம்சம் பெற்றனவாகக் காண்கின்றன. இனி நான் ஒரு காலத்திற்கும், ஓரிடத்திற்கும் சொந்தமல்லன். என் மரணத்தையே நான் கண்டேன். கட்டுப்பட்ட என் ஜீவாத்மா கடவுளிடம் கலந்தது. இனி எனக்குப் பிறப்பில்லை.”

முடிக்கப் பெறாத தனது பாடல்களை முடிக்கச் சொல்லி நாமதேவரும் இறைவனும் கனவில் வந்ததாக துக்காராம் சில பாடல் களில் சொல்லியிருக்கிறார். அவர் நாம தேவரின் மறு அவதாரம் என்றே நம்பப் படுகிறது. மாபெரும் பக்தர், மக்கள் கவிஞர், மகான் துக்காராமின் பரவசமூட்டும் பக்திப் பாடல்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் வீடு தோறும், கிராமங்களிலும், கோவில்களிலும் இன்றும் ஒலிக்கின்றன.

பாடல்களின் தமிழாக்கம்: கட்டுரையாசிரியர்

மு. ஸ்ரீனிவாஸன்

Leave a Reply