சீர்காழி அருகே இரண்டு மூலவர்கள் காட்சி தரும் சிவாலயத்தில் சிவராத்திரி தினத்தில் மட்டுமே மற்றொரு மூலவரை தரிசிக்க முடியும்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் உள்ள பாலவித்யாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.
இந்த கோயில் 7ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கோயில் ஆகும். இங்கு திருஞானசம்பந்தர் பெருமான் திருமணத்திற்கு வந்த ஓதுவார்களுக்கு வேதம் உருவாக்கியதால் சுவாமிக்கு வேதபுரீஸ்வரர் என்றும், குருவாக இருந்து உபதேசம் செய்ததால் ஸ்ரீவேதபோதேஷ்வரர் என இக்கோயிலில் இரண்டு மூலவர்கள் ஒரே கருவறையில் எதிரெதிரே காட்சி தருகின்றனர்.
இதில் நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர் எதிரே உள்ள வேதபுரீஸ்வரர் சுவாமியை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். கருவறையில் உட்புறம் பக்கவாட்டில் மறைவாக உள்ள மற்றொரு மூலவரான வேதபோதேஷ்வரர் சுவாமியை மகா சிவராத்திரி தினத்தில் மட்டும் அனைத்து பக்தர்களும் உள்ளே சென்று தரிசிக்க முடியும்.
அதன்படி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டில் வேதபுரீஸ்வரர்,வேதபோதேஷ்வரர் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.