உபதேசரத்னமாலை

ஸ்ரீமணவாளமாமுனிகள்

பெரிய வாச்சான் பிள்ளை பின்புள்ள வைக்கும்
தெரிய * வியாக்கியைகள் செய்வால் * – அரிய
அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது *
அருளிச்செயலாய்த் தறிந்து. (46)

நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு *
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே ! * – தம்சீரால்
வையகுருவின் தம்பி மன்னு மணவாள முனி *
செய்யும் இவை தாமும் சில. (47)

சீரார் வடக்குத் திருவீதிப்பிள்ளை * எழு
தேரார் தமிழ் வேதத்து ஈடுதனை * – தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணிமாதவர்க்குத்
தாம் கொடுத்தார்* பின்னதனைத் தான். (48)

ஆங்கவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை *
தாம் கொடுத்தார் தம்மகனார் தம் கையில் * – பாங்குடனே
நாலூர்ப் பிள்ளைக்கு அவர்தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம் *
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு. (49)

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் * அவரவர் தம் ஏற்றத்தால் * – அன்புடையோர்
சாத்து திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே! *
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று. (50)

துன்னுபுகழ்க் கந்தாடைத் தோழப்பர் தம் உகப்பால் *
என்ன உலகாரியனோ என்று உரைக்க * – பின்னை
உலகாரியன் என்னும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி *
விலகாமல் நின்றது என்றும் மேல். (51)

பின்னை வடக்குத் திருவீதிப் பிள்ளை * அன்பால்
அன்ன திருநாமத்தை ஆதரித்து * – மன்னு புகழ்
மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது * எங்கும்
இந்தத் திருநாமம் இங்கு. (52)

அன்ன புகழ் முடும்பை அண்ணல் உல்காசிரியன் *
இன்னருளால் செய்த கலை யாவையிலும் * உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை *
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் இப்போது. (53 )

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை * மிகக் கொண்டு கற்றோர் தம்முயிர்க்கு * – மின்னணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணம் எனும்
பேர் * இக்கலைக்கு இட்டார் பின். (54)

ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்? *
ஆரது சொல் நேரில் அநுட்டிப்பார்? – ஓர் ஒருவர்
உண்டாகில் அத்தனை காண் உள்ளமே! * எல்லார்க்கும்
அண்டாதது அன்றோ அது? (55)

உய்ய நினைவுடையீர்! உங்களுக்குச் சொல்லுகின்றேன் *
வைய குரு முன்னம் வாய் மொழிந்த * – செய்ய கலை
யாம் வசனபூடணத்தின் ஆழ் பொருளைக் கற்று * அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து. (56)

தேசிகர்பால் கேட்ட செழும் பொருளை * சிந்தை தன்னில்
மாசறவே ஊன்ற மனனம் செய்து * – ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூடணத்தின் வான் பொருளை*
கல்லாதது என்னோ கவர்ந்து. (57)

சச் சம்பிரதாயம் தாம் உடையோர் கேட்டக்கால் *
மெச்சும் வியாக்கியை தான் உண்டாகில் * – நச்சி
அதிகரியும் நீர் வசன பூடணத்துக்கற்ற
மதியுடையீர்!* மத்தியத்தராய். (58)

சீர் வசன பூடணத்தின் செம்பொருளை * சிந்தை தன்னால்
தேரிலுமாம் வாய்கொண்டு செப்பிலுமாம் * – ஆரியர்காள்!
என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ *
உந்தமக்கு எவ்வின்பம் உளதாம்? (59)

தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்று இல்லாதார் *
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன் * – இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டியிரான் * ஆதலால்
நண்ணார் அவர்கள் திருநாடு. (60)

Leave a Reply