உபதேசரத்னமாலை

ஸ்ரீமணவாளமாமுனிகள்

நேரிசை வெண்பா

எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால்*
வந்த உபதேச மார்க்கத்தைச் – சிந்தை செய்து*
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன்*
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து. (1)

கற்றோர்கள் தாம் உகப்பர் கல்வி தன்னில் ஆசையுள்ளோர் *
பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் * – மற்றோர்கள்
மாச்சரியத்தால் இகழில் வந்தது என் நெஞ்சே! * இகழ்கை
ஆச்சரியமோ தான் அவர்க்கு. (2)

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி *
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி * – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி *
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து. (3 )

பொய்கையார் பூதத்தார் பேயார் * புகழ் மழிசை
ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் * – துய்ய பட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நன் கலியன் *
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு. (4)

அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் *
இந்த உலகில் இருள் நீங்க * – வந்துதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய *
ஈதென்று சொல்லுவோம் யாம். (5)

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை *
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! * – எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் *
தேசுடனே தோன்று சிறப்பால். (6)

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * – பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *
நின்றது உலகத்தே நிகழ்ந்து. (7)

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ *
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் * – ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த *
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண். (8)

மாறன் பணித்த தமிழ் மறைக்கு * மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த * – வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்றென்று காதலிப்பார் *
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து. (9)

கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்! *
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் * – ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்*
நன்குடனே கொண்டாடும் நாள். (10)

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர் *
என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் * – துன்னு புகழ்
மாமறையோன் தொண்டரப்பொடியாழ்வார் பிறப்பால் *
நான்மறையோர் கொண்டாடும் நாள். (11)

தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * – துய்ய மதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள். (12)

மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர் *
தேசு இத்திவசுத்துக்கு ஏது என்னில் * – பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் *
நல்லவர்கள் கொண்டாடும் நாள். (13)

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை *
பாரோர் அறியப் பகர்கின்றேன் * – சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் * எழில் குருகை
நாதன் அவதரித்த நாள். (14)

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள் *
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்? * – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ?*
ஒருபார்தனில் ஒக்கும் ஊர் (15)

Leave a Reply