உபதேசரத்னமாலை

ஸ்ரீமணவாளமாமுனிகள்

ஞானம் அநுட்டானம் இவை நன்றாகவே உடைய
னான* குருவை அடைந்தக்கால் * – மாநிலத்தீர்!
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் *
தானே வைகுந்தம் தரும். (61)

உய்ய நினைவு உண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே
வையும் * அன்பு தன்னை இந்த மாநிலத்தீர் !* – மெய் உரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம் *
கையிலங்கு நெல்லிக் கனி. (62)

ஆசாரியன் செய்த உபகாரமானவது *
தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் * – தேசாந்
தரத்தில் இருக்க மனம்தான் பொருந்த மாட்டாது *
இருத்தல் இனி ஏது அறியோம் யாம். (63 )

தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது * அவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் * – அந்நேர்
அறிந்தும் அதில் ஆசையின்றி ஆசாரியனைப்
பிரிந்திருப்பார் ஆர்?* மனமே! பேசு. (64)

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன் *
தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை * – ஆசையுடன்
நோக்கும் அவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும் *
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம். (65)

பின்பழகராம் பெருமாள் சீயர் * பெருந்திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க ஆசையினால் * – நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே !
ஊனம் அற எப்பொழுதும் ஓர். (66)

ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த *
ஆசாரம் தன்னை அறியாதார் * – பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே * பூருவர்கள்
சீர்த்த நிலை தன்னை நெஞ்சே ! சேர். (67)

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும் *
ஆத்திக நாத்திகருமாம் இவரை * – ஓர்த்து நெஞ்சே !
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு * நடுச்
சொன்னவரை நாளும் தொடர். (68)

நல்ல மணம் உள்ளது ஒன்றை நண்ணியிருப்பதற்கு*
நல்ல மணம் உண்டாம் நயம் அதுபோல்* – நல்ல
குணம் உடையோர் தங்களுடன் கூடியிருப்பார்க்கு *
குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு. (69)

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்திருப்பது ஒன்றுக்கு *
தீய கந்தம் ஏறும் திறமது போல் * – தீய
குணம் உடையோர் தங்களுடன் கூடியிருப்பார்க்கு *
குணம் அதுவேயாம் செறிவு கொண்டு. (70)

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு *
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே * – தம் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவர
வாற்றது என்பர் * மூர்க்கர் ஆவார். (71)

பூருவாசாரியர்கள் போதம் அநுட்டானங்கள் *
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் – தேறி *
இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் *
தெருள் தரு மா தேசிகனைச் சேர்ந்து. (72)

இந்த உபதேச ரத்தின மாலை தன்னை *
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் * – எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி
சதிராக வாழ்ந்திடுவர் தாம். (73)

 

எறும்பியப்பா அருளிச்செய்தது

மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன் *

பொன்னடியாம் செங்கமலப் போதுகளை * – உன்னிச்

சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை *

கரத்தாலே தீண்டல் கடன்.

மணவாளமாமுனிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply