உபதேசரத்னமாலை

ஸ்ரீமணவாளமாமுனிகள்

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !*
இன்றைக்கு என்ன ஏற்றம் எனில் உரைக்கேன் * – நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த *
நல் ஆனியில் சோதி நாள். (16)

மாநிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த *
ஆனிதன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் * – ஞானியர்க்கு
ஒப்போர் இல்லை இவ்வுலகு தனில் என்று நெஞ்சே *
எப்போதும் சிந்தித்து இரு. (17)

மங்களாசாசனத்தின் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் * ஆர்வத்தளவு தான் அன்றி * – பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் *
பெரியாழ்வார் என்னும் பெயர். (18)

கோது இலவாம் ஆழ்வார்கள் கூறுகலைக்கு எல்லாம் *
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் * – வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய் *
தான் மங்கலம் ஆதலால். (19)

உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்?*
உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பு ஒருவர்? – தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில் *
பைதல் நெஞ்சே ! நீ உணர்ந்து பார். (20)

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் * மதுரகவி
ஆழ்வார் எதிராசர் ஆம் இவர்கள் * – வாழ்வாக
வந்து உதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்*
இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம். (21)

இன்றோ திருவாடிப் பூரம் * எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் * – குன்றாத
வாழ்வான வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து *
ஆழ்வார் திருமகளாராய் . (22)

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் * ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை * – ஒருநாளைக்கு
உண்டோ மனமே! உணர்ந்து பார் * ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு. (23 )

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் * ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் * – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும் *
வழுத்தாய் மனமே மகிழ்ந்து. (24)

ஏரார் மதுரகவி இவ்வுலக்஢ல் வந்து உதித்த *
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் * – பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும் *
உற்றது எமக்கு என்று நெஞ்சே ! ஓர். (25)

வாய்த்த திருமந்திரத்தின் மத்திம்மாம் பதம் போல் *
சீர்த்த மதுரகவி செய்கலையை * – ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே *
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து. (26)

இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் *
என்றையினும் இன்றிதனுக்கு ஏற்றம் எந்தான் * – என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால் *
நால் திசையும் கொண்டாடும் நாள். (27)

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும் *
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் * – ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் * சித்திரையில்
செய்ய திருவாதிரை . (28)

எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா *
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் * – இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்சே !*
ஒருவாமல் எப்பொழுதும் ஓர். (29)

எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர் *
வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை * – மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர் *
ஓங்குமுறையூர் பாணனூர். (30)

Leave a Reply