உபதேசரத்னமாலை

ஸ்ரீமணவாளமாமுனிகள்

தொண்டரடிப் பொடியார் தோன்றிய ஊர் * தொல்புகழ் சேர்
மண்டங்குடி என்பர் மண்ணுலகில் * – எண் திசையும்
ஏத்தும் குலசேகரன் ஊர் என உரைப்பர் *
வாய்த்த திருவஞ்சிக் களம். (3 1)

மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர் *
மின்னு புகழ் வில்லிபுத்தூர் மேதினியில் * – நன்னெறியோர்
ஏய்ந்த பத்திசாரர் எழில் மாறன் பட்டர்பிரான் *
வாய்ந்துதித்த ஊர்கள் வகை. (32)

சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர் *
ஏரார் பெரும்பூதூர் என்னும் இவை * – பாரில்
மதியாரும் ஆண்டாள் மதுரகவியாழ்வார் *
எதிராசர் தோன்ரிய ஊர் இங்கு. (33)

ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் *
தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர் *- ஏழ்பாரும்
உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளது எல்லாம் *
வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து. (34)

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும் *
தாழ்வா நினைப்பவர்கள் தாம் * நரகில் – வீழ்வார்கள்
என்று நினைந்து நெஞ்சே ! எப்பொழுதும் நீ அவர்பால் *
சென்று அணுகக் கூசித் திரி. (35)

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்? *
அருளிச் செயலை அறிவார் ஆர் ? – அருள் பெற்ற
நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால் *
பேதை மனமே ! உண்டோ பேசு. (36)

ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் *
ஏரார் எதிராசர் இன்னருளால் * – பாருலகில்
ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் ! கூறும் என்று*
பேசி வரம்பு அறுத்தார் பின். (37)

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு *
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் * -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த *
அந்தச் செயல் அறிகைக்கா. (38)

பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை *
தெள்ளார் வடக்குத் திருவீதிப் – பிள்ளை *
மணவாள யோகி திருவாய் மொழியைக் காத்த*
குணவாளர் என்று நெஞ்சே ! கூறு. (39)

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் *
அந்த வியாக்கியைகள் அன்றாகில் * – அந்தோ
திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல *
குரு ஆர்?* இக்காலம் நெஞ்சே கூறு. (40)

தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்
பிள்ளான் * எதிராசர் பேரருளால் * – உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை அன்று உரைத்தது *
இன்பமிகும் ஆறாயிரம் . (41)

தஞ்சீரை ஞானியர் தாம் புகழும் வேதாந்தி *
நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் * – எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை ஆய்ந்துரைத்தது *
ஏர் ஒன்பதினாயிரம். (42)

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட *
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் * – இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது *
இருபத்து நாலாயிரம். (43)

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை *
வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை* – இந்த
நாடறிய மாறன் மறைப் பொருளை நன்கு உரைத்தது *
ஈடு முப்பத்து ஆறாயிரம் . (44)

அன்போடு அழகிய மணவாளச் சீயர் *
பின்போரும் கற்று அறிந்து பேசுகைக்கா * – தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது *
ஏதமில் பன்னீராயிரம். (45)

Leave a Reply