ஆடிப் பண்டிகை: பெண்களின் மாதம்! அம்மனின் மகத்துவம்!

ஆன்மிக கட்டுரைகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

-கிருஷ்ணா ராமலிங்கம்

அனைவருக்கும் இனிய ஆடிப்பண்டிகை நல்வாழ்த்துக்கள், வணக்கங்கள்

.ஆடிமாதம் பெண்களின் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் ஒரு அழகான பாடல் –
மொய் குழலில் மலர் சூட்டி
மான் விழியில் மை தீட்டி
பொன் முகத்தில் பொட்டு வைத்து
பூவையர்கள் நலம் காக்க

நெய் வழியும் கை விளக்கை
நீரோடு மிதக்க விட்டோம்
நாயகனின் உயிர் காக்க
தாயிடத்தில் தூது விட்டோம்
ஆ,ஆ..ஆ..ஆ..ஆஆ..ஆ.

வள்ளுவனின் வாசுகி போல்
வசிஷ்டனுக்கு அருந்ததி போல்
தொல்லுலகில் புகழ் விளங்க
தோகையர்க்கு துணை புரிக

பின்னுறங்கி முன் விழித்து
பிள்ளை நலம் தனைக் காத்து
கொண்டவனின் மனமறிந்து
தொண்டு செய்யும் மனம் தருக

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக – வாலியின் வைர வரிகள் (படம் – ராதா)

பக்தி மணம் கமழும் அற்புத ஆடி!

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆடி மாதம் இந்த ஆண்டு திங்கள்கிழமையன்று பிறக்கிறது.

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார் – சித்திரை மேஷம்,
வைகாசி – ரிஷபம், ஆனி – மிதுனம்,
ஆடி – கடகம், இதில் ஒரு விஷேசம் என்ன என்றால் கடக ராசிக்குரிய கிரகம் சந்திர பகவான், அதாவது சூரியன் சந்திர ராசியில் வரும் மாதம். மேலும் ஆடிமாதம் பிறப்பன்று தான் ஆரம்பமாகிறது தக்ஷிணாயன புண்யகாலம்.

ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்க்கடக மாதம்’ என்பார்கள்.

சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத பிரவேசம்.

தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது.

இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.

அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும்.

அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.

‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.

அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்யங்களையும் அள்ளித் தரும். திருமண பாக்யம் கைகூடிவரும்.

புதுமண தம்பதியருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்யம் உண்டாகும்.

ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைப்பார்கள்.

ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன.

இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

“மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றா போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் பாதம் கண்டறியாதனக் கண்டேன்”. (அப்பர் தேவாரம்)

அப்பர் கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற போது நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர்.
(அப்பர் பிரான் கண்ட கயிலாயக் காட்சியினை இப்பதிகத்தில் முழுமையாகக் கூறுகிறார்)

அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.

ஆடி மாதத்தின் 18-வது நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது.

கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண பிராப்தம் கூடிவரும்.

இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுகிறதே. எதனால்?

இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும்.

ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதாலும் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம்.

இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.


Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply