e0af8d-e0aea8e0aebfe0aea4e0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 110
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நிதிக்குப் பிங்கலன் – திருச்செந்தூர்
அருணகிரிநாதர் அருளியுள்ள எழுபத்தியிரண்டாவது திருப்புகழான ‘நிதிக்குப் பிங்கலன்’ எனத் தொடங்கும் இத்திருப்புகழ் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். இப்பாடலில் அருணகிரியார் – முருகா! மனிதர்களைப் புகழ்ந்து அழியாமல், உன்னைப் புகழ்ந்து உய்ய அருள் புரிவாயக – என வேண்டுகிறார். இனி, பாடலைக் காண்போம்.
நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென் …… றினைவொரை
நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ் …… சினில்நாளும்
புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம் ……பழிமாயும்
புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
புணர்க்கைக் கன்புதந் …… தருள்வாயே
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் றந்தைமன் …… றினிலாடி
மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
டமிழ்ச்சொற் சந்தமொன் …… றருள்வோனே
குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
கொழித்துக் கொண்டசெந் …… திலின்வாழ்வே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் …… பெருமாளே.
இப்பாடலின் பொருளாவது – திருவுளத்தில் சிந்தித்து வலிய முப்புரத்தைப் புன்னகையால் எரித்து அழித்த வீர மூர்த்தியாகிய தந்தையும், பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் புரிபவரும், மழுவைத் திருக்கரத்தில் ஏந்தியவரும், சுகத்தைச் செய்பவரும் ஆகிய சிவபெருமானுக்குக் குருவாகச் சென்று, வளமையான தமிழ்மொழியால் வேதத்தின் உட்பொருளை உபதேசித்தவரே!
அலைகள் குதித்துக் குன்றுகளைத் தோண்டி அலைத்து, முத்து மணியையும், செம்பொன்னையும் கொழிக்கின்ற திருச்செந்தூரில் வாழ்கின்றவரே!
குறவர் குலத்தில் வளர்ந்த பொன்கொம்பு போன்ற வள்ளி பிராட்டியாரை முற்காலத்தில் சிவந்த திருக்கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட தனிப்பெரும் தலைவரே!
பொருள் கொடுக்க வருந்துவோரிடம் போய், பொன்னுக்குக் குபேரன் என்றும், பதவியின் சிறப்புக்கு தேவேந்திரன் என்றும், அழகுக்கு முருகப்பெருமான் என்றும் புகழ்ந்து கூறி, இந்தப் பூதலத்தில் என் பெரும் பசியை மாற்றப் புகலிடம் நீயே என்றும் முறையிட்டு, துன்பம் கொண்ட மனதில் ஆய்ந்து, புதிய புதிய சொற்களின் கூட்டத்தால், ஒரு பாடலை அமைத்துச் சொல்லும் சங்கடத்தில் கிடந்து, உடல் அழிகின்றவனாகி, புலன்களால் வரும் துன்பங்களைத் தொலைத்துத் தேவரீருடைய திருவடியைச் சேர்வதற்கு வேண்டிய அன்பினை, அடியேனுக்குத் தந்து அருள் புரிவீர். – என்பதாகும்.
இப்பாடலில் “வாழ்க்கை நலம்பெற பெரும் தனவந்தர்களை இந்திரன், சந்திரன் எனப் பாடி புகழும் புலவர்கள் முருகப் பெருமானைப் பாடி முக்தியடையலாம்” என அருணகிரயார் பாடுகிறார். ஒருவரை ‘நிதிக்குப் பிங்கலன்’ எனப் புகழும்போது, பிங்கலன் என்றால் குபேரன் என்ற பொருபடும்படி அவரைப் புகழ்கிறோம். அக்காலத்தில் புலவர்கள் மாட்டு இந்த செயல் மிகுதியாக இருந்தது. கொடாதவனைக் காமதேனு என்றும் கற்பகத் தரு என்றும் கூறித் திரிந்தனர். தனவந்தனிடம் போய், “நீ செல்வத்தில் குபேரனுக்குச் சமானம்” என்று கூறுவர்.
‘பதத்துக்கு இந்திரன்’ எனப் புகழும்போது, நாம் அடைகின்ற பதவிகளிலேயெ சிறந்த பதவி இந்திரப் பதவி என்ற பொருள்படும்படி அமைகிறது. இந்திரப் பதவி பெற்றால் சொர்க்க லோகத்தைப் பெற்று அதிலே உள்ள, கற்பக மரம், காமதேனு; சிந்தாமணி; உச்சைஸ்ரவம்; ஐராவதம்; இந்திராணி, அரம்பை முதலிய அரமகளிர்; தேவாமிர்தம் முதலிய உயர்ந்த பொருள்களை நுகர்ந்து இன்புறலாம். ஆனால், இதனை ஆன்றோர்கள் விரும்புவதில்லை.
“மேலை இந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன்!” — கந்தபுராணம்
’இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்.’ — பிரபந்தம்.
எனவே, செல்வம் படைத்தவரை, ’நீ இந்திரன்’ என்று புகழ்ந்து உரைப்பர். “இந்திரராகிப் பார்மேல் இன்பம் உற்று இனிது மேவி” என்பது கந்தபுராணம் வழங்கும் வாழ்த்துரை.
‘நிறத்தில் கந்தன்’ எனப் புகழும்போது “ஒளி, அழகு முதலிய சிறப்பில் நீ முருகப் பெருமான்” என்று கூறுவர். தனக்கு உவமை இல்லாத தனிப் பெருந்தலைவனை உவமித்து, உலோபரைப் புகழ்வர். என்னே மதி?
இப்படிப்பட்ட உலோபர்கள் யாசகர் வந்துவிட்டால் “ஐயோ, இவன் வந்து விட்டானே! என்ன செய்வது? எப்படித் தப்பித்துக் கொள்வது? என்று மனவருத்தம் கொள்வர். உலோபத்தனத்தால், செல்வம் இருந்தும், மனம் வராமல் யாசகரைக் கடிந்து பேசுவர்; தம்மை அவர் கண்ணில் படாமல் ஒளித்துக் கொள்வர். இப்படிப் பல்வேறு நிலையடைவர் உலோபர்.
உலோப குணம் மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றையும் மறைத்துவிடும். தீய குணங்களை எல்லாம் ஒருங்கே மறைக்கும் தரும குணம். தாடகை தன் வனத்தின் வளமைகளையெல்லாம் ஒரே நாளில் மரம் செடி கொடி முதலிய அனைத்தையும் பொடி செய்து அடியுடன் அழித்துவிட்டாள். கம்ப நாடர் கூறுகின்றார்.
உளப்பரும் பிணிப்புறா உலோபம் ஒன்றுமே
அளப்பரும் குணங்களை அழிக்குமாறு போல்
கிளப்பரும் கொடுமைய வரக்கி கேடிலா
வளப்பரும் மருதவைப் பழித்து மாற்றினாள்”
கம்பரின் வருணனை எத்தனை சிறப்பானது அல்லவா?
திருப்புகழ் கதைகள்: நிதிக்குப் பிங்கலன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.