682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ–
Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!
இன்று 2023 ஆனி மூலம் – ஸ்ரீ சைலேச தனியன் அவதார நாள் -இன்று ஆனித் திருமூலம் – ஸ்ரீ வைணவர்களுக்கு ஒரு சீரிய நாள்.
ரிஷ்யமுகப் பர்வதத்துக்கு அதிபதியாக விளங்கிய மதங்க முனிவரின் தயைக்குப் பாத்திரமாக விளங்கி வந்த சுக்ரீவன், நன்றியுடன் வணங்கப்பட்டவன். ஆனால் அந்தச் சுக்ரீவனும், தகுந்த நேரத்தில் ஶ்ரீராமருக்கு உதவ வராததால், அவன் மேல் கோபப்பட நேர்ந்தது. அந்தக் குறை தீர, இப்போது ஒருசைலருக்கு (திருவாய் மொழிப்பிள்ளையின், இயற்பெயர் திரு”மலை”ஆழ்வார்) உகந்த, குறையில்லாத மாமுனிகளை வணங்குகிறேன்.
தீபக்த்யாதி குணார்ணவம்:
ராமராக அவதரித்து, தீபம் -சமுத்திர ராஜனிடம், சரணடைந்து, இலங்கையைச் சென்றடைய கடல் நீரை வற்ற/குறைக்க வேண்டியபோது (திருப்புல்லாணிக் கரையில், தர்பசயன இராமராக) மூன்று நாட்களாகியும் அவன் வரவில்லை. இராமருக்குக் கோபம் வந்து வில்லெடுத்ததும் ஓடோடி வந்து, இராமரிடம் சரணடைந்தான். ஆனால் எவ்விதக் குறையும் இல்லாத, நிறைகடலான மணவாள மாமுநிகளைச் சரணடைகிறேன்.
யதீந்திர ப்ரவண ப்ரபாவம்:
இராமானுஜர், நம்மாழ்வாரால் “கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியன கண்டோம்’ என்று கொண்டாடப்பட்டு, ஆளவந்தாரால் ஆம் முதல்வன் என்று அங்கீகரிக்கப்பட்டு, ஐந்து நேரடி ஆசார்யர்களின் பொங்கும் பரிவுக்கு ஆட்பட்டவர். குணங்கள் நிறைந்த மகா சமுத்திரம். வடக்கே உள்ள திருவேங்கடவனுக்கு,
சங்கு சக்கரம் வழங்கி, அப்பனுக்குச் சங்காழி அளித்தருளிய பெருமான் என்று அழைக்கப்பட்டு, ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தார். தெற்கே இருந்த திருக்குறுங்குடி நம்பியும், உடையவருக்கு ஆசனமிட்டு, அவர் திருமண்காப்பு சேஷத்தை இவரிட்டு அவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார். அப்படியிருக்க அவரை ஏன், ஆசார்யராக அரங்கர் வரிக்கவில்லை? அவர்கள் இருவரும் இராமானுச நூற்றந்தாதியைக் கேட்க வில்லை. ஆனால் அதைச்
அன்பெழில் செவிமடுத்த அரங்கர் (இராமானுஜர் காலத்திலேயே,)
“தன்னை யுற்று ஆட்செய்யும் தன்மையினோர், மன்னு தாமரைத் தாள், தன்னையுற்றாட் செய்ய என்னை உய்த்தானின்று, தன் தகவால், தன்னை உற்றாரன்றித் தன்மை உற்றாரில்லை, என்றறிந்து, தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே”(97)
உடையவரைக் காட்டிலும், மாமுனிகளை ஏன் அரங்கர் ஆசார்யராக ஏற்றார் என்பதற்கு விளககம் சொல்லும் பூர்வாசார்யர்கள், உடையவரை உற்று ஆட்செய்யும் தன்மையில் மிகச் சிறந்தவரான மாமுனிகளுக்காகக் காத்திருந்தாரோ என்கின்றனர்.
வந்தே ரம்ய ஜாமாதர முநிம்:
ராமாவதாரத்தில் விஸ்வாமித்திர முனிவரைக் குருவாக ஏற்றிருந்தாலும், அவருடைய முழு வரலாறைக் கேள்வியுற்ற இராமருக்கு அவர் மேல் ஈடுபாடில்லை.
கிருஷ்ணாவதாரத்தில் சாந்தீபினி முனிவரிடம் 64கலைகளயும், பயின்றபின் அவர் குருதக்ஷிணையாக – ஆசார்ய காணிக்கையாக பகவான் கிருஷ்ணரிடம் உயர்ந்த மோட்சத்தைக் கேட்கவில்லை. மாறாக என்றோ இறந்து போன தம் மகனை மீட்டுத்தர வேண்டுமென்ற ஒரு சாதாரண பலனைக் கேட்டுப் பெற்றார். ஆனால் எந்தக் குறையும் இல்லாத, எதையும் எதிர் பார்க்காத மாமுனிவர் ஒருவர் உண்டேல், அவர் அழகிய மணவாள மாமுநிவன் மட்டுமே; எனவே அவரை வணங்குகிறேன். இவ்வளவு சிறந்த அர்த்தங்களைக் கொண்ட தனியனை, எம்பெருமான் மட்டுமே வழங்க முடியும்.
சீடர் ஆசார்யருக்கு செய்ய வேண்டிய சிஷ்யலட்சணமான ஐந்து கடமைகளைச் செம்மையாக நடத்திய அரங்கன்:
i) தனியன் சமர்ப்பித்தல்:(மேலே சொன்னபடி)
ii)ஆசார்யன் கீர்த்தியை – பெருமையை இந்த வையமெங்கும் பரப்புதல்:
எல்லா திவ்யதேசங்களிலும், பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன், முதலிலும்,சாற்று முறையின் போது முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ‘ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்’ சேவிக்க வேண்டுமென்று நியமித்தார். அவர் தனியன் சமர்ப்பித்த மறுநாளே எல்லா திவ்ய தேசங்களுக்கும் தம் ஆக்ஞையை ( ஆணையை) அனுப்பிவைத்தார். கோவில்களில் மட்டுமல்லாது மடங்கள், ராமானுஜகூடங்கள், ஶ்ரீவைஷ்ணவர்கள்/பாகவதர்களின் இல்லங்களிலும் தினம் தோறும் முதலிலும், முடிவிலும் இந்த தனியன் சேவிக்கப் பட்டு வருகிறது.
iii)ஒரு சீடன் தனக்கென்று எந்த உடமையும் இல்லை என்றும் எல்லாம்ஆசார்யனுடையவே,
தாம் அனுபவிப்பது அவர் கருணையால் கொடுத்தருளியதே என்ற நிஷ்டையில் இருக்க வேண்டும். எனவே தம் உடமைகளை யெல்லாம் நிர்வகிக்கும், ஆதிசேஷனையே மாமுநிகளுக்குக் கொடுத்துவிட்டார் அரங்கன்· அதனால் தான் மணவாள மாமுனிகள் எங்கும், எப்பொழுதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேஷ அவதாரமாகிய ராமானுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுநிகளுக்குத் தந்தருளினார்.
iv) ஆசார்யனுடைய திருநாமத்தை சீடன் தரிக்க வேண்டும். அரங்கனின் பெயரான அழகிய மணவாளன் என்னும் பெயரே, மாமுநிகளுக்கு
அவர் பெற்றோரால் சூட்டப்பட்டது. மாமுநிகள் துறவறம் மேற்கொண்ட போது, சடகோப ஜீயர் என்னும் திருநாமத்தை ஏற்க விரும்பி அரங்கனிடம் வேண்ட, அரங்கன் அதை ஏற்காமல், பழைய நாமத்துடனே இருக்கும்படி அருளினார். தம் ஆசார்யர் நாமம் அப்படியே இருந்தால் தான், தாமும் ஆசார்யன் நாமத்துடன் (அழகிய மணவாளன்) இருக்க முடியும் என்று கருதியே, இவ்வாறு அரங்கன் நியமனம் ஆயிற்று.
v)ஆசார்யன் திருநட்சித்திரத்தையும் (அவதார நன்னாள்) தீர்த்தத்தையும் (பரமபதம் அடைந்த நாள்/திதி) சீடன் சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும்.
அரங்கன் இவ்விரண்டையும் இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார். இரண்டு நாட்களிலும் அரங்கன் பிரசாதங்கள் மாலை, மரியாதைகள் மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தீர்த்த திதியன்று, அரங்கனுக்கு திருவாராதனை செய்யும் அர்ச்சகரே, மாமுநிகளுக்கும் திருவாராதனை செய்கிறார். மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே,அரங்கனுக்கு – உச்சிகால ( மதியம் நடக்கும் பெரிய அவசரம் என்னும்) நைவேத்யம்; அன்று அரங்கன் சுருளமுது(வெற்றிலை)· கண்டருளுவதில்லை. இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யர் மணவாள மாமுனிகளுக்கு சீடரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்னும், பேருண்மையையும் உணர்த்தினார், அழகிய மணவாளன் நம்பெருமாள்!!