இன்று பங்குனி அமாவாசை திதி..

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
images 54 1 - Dhinasari Tamil

இன்று பங்குனி அமாவாசை திதி மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது என சாஸ்திரம் கூறுகிறது.

அமாவாசை திதி மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும் அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது.

அமாவாசை அன்று யாரையும் கோபமாக பேசக்கூடாது. மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும்.

images 52 1 - Dhinasari Tamil

இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க விரதம் இருக்கும் இந்த நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.

எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.

தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும். தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கருப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது.

நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே அனைவரும் சாப்பிடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை. அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.

இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும். முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்கவேண்டும்.

முன்னோரை வழிபட்ட பிறகே தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம் திதி, அமாவாசை தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply