பகவத் ராமானுஜரின் சீடர்களில் முதன்மையானவர் கூரத்தாழ்வான். காஞ்சிபுரம் அருகேயுள்ள கூரம் என்ற கிராமத்தில் 1010-ம் ஆண்டு செளம்ய வருடம், தை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தன்று இவர் அவதரித்தார்.
இவரது பெற்றோர் கூரத்தாழ்வார் – பெருந்தேவி அம்மாள். இவரது இயற்பெயர் ஸ்ரீவத்ஸாங்கன். தாயார் சிறுவயதிலேயே காலமானார். எனினும் பெரும் செல்வந்தரான இவரது தந்தை மறுமணம் புரியாமல், இவரை கண்ணுங்கருத்துமாக வளர்த்தார்.
காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்துவந்த திருக்கச்சிநம்பி, கூரத்தாழ்வானை வழிநடத்தி வந்தார். கூரத்தாழ்வானும், அவரது தேவியார் ஆண்டாளும் எந்நாளும் அடியார்கள் பசிபோக்கும் பணியைச் செய்து வந்தார்கள்.
ஒரு முறை சுவாமி கூரத்தாழ்வானின் அரண்மனைக் கதவுகள், இரவில் எந்நேரமானாலும் அடியார்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்தான் காப்பிடப்படும்.
இதனை அறிவிக்கும் வகையில் மணியோசை எழுப்பப்படும். ஒருமுறை இந்த மணியோசையைக் கேட்டு காஞ்சிபுரம் கோயிலில் வீற்றிருக்கும் பெருந்தேவி தாயார், ‘இது என்ன ஓசை?’ என்று தேவப்பெருமாளிடம் கேட்டார். பெருமாளும், ‘இது கூரத்தாழ்வானின் அரண்மனை மணியோசை’ என்று பதிலளித்தார்.
இந்த உரையாடலை திருக்கச்சிநம்பிகள் கேட்டார். மறுநாள் இதனை கூரத்தாழ்வானிடம் தெரிவித்தார். சகல லோகங்களுக்கும் அதிபதியான பெருமாளும், தாயாரும் வியக்கும் வகையில் நமது செல்வம் இருப்பதா? என்று எண்ணி அத்தனைச் செல்வங்களையும் கைவிட்டு, வெறுங்கையுடன் ஸ்ரீரங்கத்துக்கு தமது தேவியான ஆண்டாளுடன் புறப்பட்டார்.
நடுவழியில் பயந்தபடியே ஆண்டாள் வந்தார். ‘நமது கையில் ஏதுமில்லையே ஏன் பயம்?’ என்று கூரத்தாழ்வான் விசாரித்தார். ‘தாங்கள் உணவை வைத்து உண்ணும் தங்க வட்டிலை எடுத்து வந்தேன்’ என்றாள் ஆண்டாள். அதை வாங்கி தூர எறிந்துவிட்டு, இப்போது தைரியமாக வா!’ என்று நடந்தார் கூரத்தாழ்வான்.
வியாச பகவான் இயற்றிய பிரம்மசூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத முறையில் பாஷ்யம் (விரிவுரை) இயற்ற பகவத் ராமானுஜர் முயன்றார்.
ஆனால் பிரம்மசூத்திரம் நூல் பாரதத்திலேயே இல்லை. எனினும் அதற்கு போதாயனர் எழுதிய விரிவுரை நூல் மட்டும் காஷ்மீர் தேசத்து அரசனிடம் இருந்தது.
அந்த நூலை வாங்கி வருவதற்காக பகவத் ராமானுஜரும், கூரத்தாழ்வானும் நடந்தே காஷ்மீர் சென்றனர். அந்நாட்டு மன்னனும் போதாயனரின் நூலை அளித்தான்.
திடீரென மறுநாள் அதனை திரும்ப வாங்கிக் கொண்டான். ராமானுஜர் மிகவும் வருந்தினார். அவருக்கு ஆறுதல் கூறிய கூரத்தாழ்வான், நேற்று இரவிலேயே அந்த நூலை முழுமையாகப் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன். அதனை இங்கேயே சொல்லவா? ஸ்ரீரங்கத்தில் வைத்து சொல்லவா? என்று கேட்டாராம்.
அந்தளவுக்கு கூரத்தாழ்வானின் ஞானம் அளவிடற்கரியது. பின்னர் இருவரும் ஸ்ரீரங்கம் வந்து, ராமானுஜர் சொல்லச் சொல்ல ஸ்ரீபாஷ்யத்தை கூரத்தாழ்வான் ஏடுபடுத்தினார் என்கிறது புராண வரலாறு.இன்று தை மாதம் அஸ்தம் நட்சத்திரம். சுவாமி கூரத்தாழ்வான் அவதாரம் தினம்.இன்று இவரை வணங்கினால் கண்நோய்குறைபாடு நீங்கி, கல்வியறிவு பெறலாம் .