மஹாளய பக்ஷம் – ஒரு நன்றிக்கடன்

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
amavasai pitru tharpanam - Dhinasari Tamil
  • நங்கநல்லூர் ஜே.கே. சிவன்

”இன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பம் என்கிறார்களே, அது என்ன ஸார்?” என்கிறார் மார்கபந்து.

”எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேளுங்கோ

”ஒரு வருஷத்தை ரெண்டு பாதியாக்கி உத்தராயணம் தக்ஷிணாயன புண்ய காலம் என்று ஆறு ஆறு மாத காலமாக அனுஷ்டிக்கிறோம். சூரியன் தெற்கிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலம் உத்தரா யணம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மற்றும் ஆனி ஆகிய ஆறு மாதங்கள், நமது ஆறுமாதம் தேவர்களுக்கு ஒரு பகல் பொழுது. தக்ஷிணம் என்ற தென் திசை. ஆடி மாசத்திலிருந்து பங்குனி முடிய 6 மாதங்கள். இந்த ஆறு மாசத்தில் புண்ணியம் நிறைந்தது புரட்டாசி மாதம் வரும் மஹாளய பக்ஷம் எனும் 15-16 நாட்கள்.

புரட்டாசி பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை முதல் இந்த பதினைந்து நாளும் வாத்தியார்கள் ஸ்கூட்டர் களிலும் , சைக்கிளை மிதித்துக்கொண்டும், நடந்து கொண்டும், எங்கும் வேகமாக செல்வதை தெருக்களில் பார்க்கும்போது நமது சாஸ்திர நம்பிக்கை, சம்ப்ரதாயம், முன்னோர்களை நினைத்து வழிபடும் எண்ணம் இன்னும் சாகவில்லை என்று சந்தோஷமா யிருக்கிறது. ஏனென்றால் நமது குடும்பத்தில் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் இந்த வாத்தியார்கள் ரூபமாக மட்டுமே..

இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்பூவனம் காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஸரோவர் , சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்களிலும் பவானி சங்கமம், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி(தில தர்ப்பணபுரி ) ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ் வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் மற்றும் ஸ்ராத்தங்கள் பண்ணுவது வழக்கம்.

”இறந்து போனவனுக்கும் மறந்து போனவனுக்கும் மாளயத்தில் கொடு” என்று சொல்வது தெரிந்திருக் கலாம். இறந்து போன பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், நாம் அறிந்தவர்களில் இறந்துபோன, மறந்து போன, எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மஹாளய பக்ஷ விரத நாட்களில் தான். இவர்களை ‘காருண்ய பித்ருக்கள்’ என்கிறோம்

இறந்த மூதாதையர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்கள் இருக்குமிடம் பித்ருலோகம். அவர்களால் பூமிக்கு நினைத்த போது எல்லாம் வர முடியாது. பித்ரு பக்ஷம் எனப்படும் இந்த 15 நாட்கள் தக்ஷிணாயன புண்யகாலத்தில் புராட்டாசியில் கூட்டமாக அவரவர்கள் சந்ததிகளை பார்க்க பர்மிஷன் கிடைத்து ஆசையாக, ஆவலாக , வருவார்கள். மஹாளயம் என்றால் கூட்டம். பித்ருக்கள் தமது சந்ததிகளை ஆசீவதிக்க ஆசையாக அப்போது வருவார்கள். வடை பாயசம் ஹல்வா அவர்களால் சாப்பிடமுடியாது. வெறும் எள்ளும் தண்ணீரும் தான் ஆகாரம். இதையாவது பக்தி ஸ்ரத்தையோடு நாம் கொடுக்க வேண் டாமா?

எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத் திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். பித்ரு தேவதைகளை ஸ்ரத்தையோடு வழிபடுவது தான் ஸ்ராத்தம். இப்படி பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் மனப்பூர்வ ஆசீர்வாதம் கிடைக்கும்.

ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தறுகிறோம். அது தான் அமாவாசை தர்ப்பணம். இதை மகாளய பக்ஷம் 15 நாளும் தாராளமாக செய்யலாமே. தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட சிறப்பானது இது.

மற்ற மாதங்களில் அமாவாசையன்றும் வருஷத்துக்கு ஒரு தரம் பித்ருக்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் ஸ்ராத்த திதியிலும் தர்ப்பணம் செய்கிறோம். மஹாளய பக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை முடிய தினமும் தர்ப்பணம் செய்து அவர்கள் ஆன்மா சாந்திபெற உதவுகிறோம். மஹாளய அமாவாசை முடிந்து நவராத்ரி துவங்கும்.

மஹா பாரதத்தில் ஒரு சம்பவம் ருசிகரமானது. கர்ணன் மகாபாரத போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதை களோடு யமலோகம் செல்கிறான். எம தர்மராஜன் அவனை வாசலில் நின்று காத்திருந்து வரவேற்கிறான்.

”வா அப்பா, கர்ணா, எவ்வளவு பெரிய தர்மிஷ்டன் நீ. இதோ பார் ஸ்வர்க வாசல், உள்ளே போ. சந்தோஷமாக இரு. நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவி”

கர்ணன் மகிழ்வுடன் ஸ்வர்க போகம் அனுபவிக்க முடியவில்லை.

”எம தர்மா, எனக்கு பசிக்கிறதே, சமையல் ரூம் எங்கே இருக்கிறது இங்கே. சாப்பாடு கிடைக்குமா இப்போது.?

அங்குள்ள மற்ற ஸ்வர்க்க வாசிகள் கர்ணன் பேச்சைக்கேட்டு திகைக்கிறார்கள். கர்ணனுக்கு பதில் சொல்கிறார்கள்.

”கர்ணா, இங்கே பசி என்றாலே என்ன என்று யாருக்கும் தெரியாதே. உணவு சமையல் ரூம் எதுவுமே இங்கே இல்லையே”.

அங்கே இருந்த தேவர்களின் குரு ப்ரஹஸ்பதி இதை கவனித்துவிட்டு ஆழ்ந்த தியானத்தில் எதற்காக கர்ணன் இப்படி கேட்டான் என்று காரணம் கண்டுபிடிக்கிறார். கர்ணனிடம் வருகிறார்.

”கர்ணா எங்கே உன் ஆட்காட்டி விரல், அதை வாயில் வைத்து சுவை”

குழந்தைகள் வாயில் விரல் போட்டுக்கொள்ளுமே அது போல் கர்ணன் விரல் சூப்பியவுடன் அவனது பசி காணாமல் போகிறது . கர்ணன் ஆச்சர்யத்தோடு கேட்டான்.

”குருதேவா என்ன மந்திரம் போட்டீர்கள். என் பசி தீர்ந்துவிட்டதே.”

“கர்ணா! பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்”.

”அதற்கும் இந்த ஆள் காட்டி விரலை சூப்பியதற்கும் என்ன சம்பந்தம்?” அதால் எப்படி பசி தீர்ந்தது என்றான் கர்ணன் ஆச்சர்யமாக.

“கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணருக்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக் கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது.”

கர்ணன் கண்களில் நீர் சுரந்தது.

”எம தர்மா, நான் ஒரு பக்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதிப்பாயா? நான் போய் அன்ன தானம் செய்து விட்டு வருகிறேன்”

”சரி, போய் வா கர்ணா”

கர்ணன் பூலோகம் வந்து அன்ன தானம் பதினைந்து நாட்கள் செய்து முடிந்தவுடன் மனித உடலை துறந்து விட்டு மீண்டும் ஸ்வர்கம் திரும்புகிறான்.

“கர்ணா, மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் செல்ல வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீயோ செய்ய விரும்பிய அன்ன தானத்தை முழுமையாக செய்து முடித்து விட்டு, சொன்னபடி திரும்பினாய். உனக்கு ஒரு வரம் தருகிறேன் கேள்”

” யம தர்மா, மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன் னோர்களைக் கூட இது சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடை யில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும். இதுவே என் ஆசை”

”ஆஹா அப்படியே ஆகட்டும் கர்ணா”

இந்த மஹாளய பக்ஷத்தில் உணவளித்தவர்கள் பாக்கியசாலிகள். கர்ணன் சூரிய புத்ரன். உலகுக்கே சூரியன் சொந்தம். ஆகவே சூரிய புத்ரன் கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்த மஹாளய பக்ஷத்தில், முன்னோர்களை வரவேற்று எள்ளும் நீரும் இறைப்போம். கடைசி நாளான மஹாளய அமாவாசையன்று முன்னோருக்கு ஸ்ராத்தம் செய்து நம் முன்னோர்கள் உருவில் வரும் பிராமணர்களுக்கு போஜனமளித்து ஆசி பெறுவோம்.

மஹாளய பக்ஷத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்:

முதல்நாள் – பிரதமை – பணம் சேரும்

இரண்டாம் நாள் – துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும். இதுவே அதிர்ஷ்டம் அல்லவா?

மூன்றாம் நாள் – திரிதியை – நினைத்தது நிறைவேறும்.

நான்காம் நாள் – சதுர்த்தி (மஹா பரணி) – எதிரிகள் பகைவர்களிடமிருந்து தப்ப உதவும்

ஐந்தாம் நாள் – பஞ்சமி – வீடு, நிலம் முதலான சொத்து வாங்க வழி பிறக்கும்.

ஆறாம் நாள் – சஷ்டி – புகழ் கிடைக்கும்.

ஏழாம் நாள் – சப்தமி – சிறந்த பதவிகளை அடையலாம்.

எட்டாம் நாள் – அஷ்டமி – மத்யாஷ்டமி – சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைக்கும்.

ஒன்பதாம் நாள் – நவமி – வியதிபாத ஸ்ரார்தம் சிறந்த வாழ்க்கைத் துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் கிடைப்பாள். புத்திசாலி பெண் குழந்தைகள் பிறக்கும். ஒவ்வொருநாளும் ஒன்பதாம் நாளாக இருக்க கூடாதா?

பத்தாம் நாள் – தசமி – நீண்ட 0நாள் ஆசை நிறைவேறும்,

பதினோராம் நாள் – ஏகாதசி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி

பன்னிரெண்டாம் நாள் – துவாதசி தங்கநகை சேரும் . பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் கிடைக்கும்.

பதிமூன்றாம் நாள் – த்ரையோதசி & சதுர்தசி – (கஜச்சக்ஷ்யம்) பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.

பதிநான்காம் நாள் – மஹாளய அமாவாசை – மஹாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குவார்கள். பித்ரு காரகன் சூரியனும், மாத்ரு காரகன் சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி இராசியில் ஒன்றிணையும்அமாவாசை தான் மஹாளய அமாவாசை.

பிற மாதங்களில் வரும் அமாவாசைகளில் முன்னோரை வணங்காதவர்கள், வணங்க முடியாதவர்களுக்கு இது சரியான சந்தர்ப்பம் தர்ப்பணம் செய்து புண்யம் பெற. இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply