அண்ணா என் உடைமைப் பொருள் (19): ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 20
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
– வேதா டி. ஸ்ரீதரன் –

சிலருக்கு எழுத்து நடை இயல்பாகவே வாய்த்திருக்கும். வேறுசிலர் காலப்போக்கில் எழுதக் கற்றுக் கொண்டிருப்பார்கள். அனேகமாக, இதுபோலக் கற்றுக் கொண்டவர்களின் எழுத்து நடையில் தனித்தன்மை இருக்காது. பெரும்பாலும் அவர்கள் எழுத்து ஜனரஞ்சக வகையைச் சார்ந்ததாகவே இருக்கும். தற்கால ஊடகங்களில் எழுதுபவர்கள் பெரும்பாலோர் இந்த வகையைச் சேர்ந்தவர்களே.

ஆனால், அண்ணாவின் எழுத்து இந்த வகையைச் சேர்ந்தது அல்ல. எனவே, அவரது எழுத்து நடை இயல்பாகவே அவருக்கு அமைந்த ஒன்று என்று எனக்குத் தோன்றியது. இருந்தாலும், அவரது ஆரம்ப கால நூல்களைப் படித்துப் பார்த்து அவரது நடை முதலில் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

அண்ணாவிடம் வர ஆரம்பித்துப் பல மாதங்களுக்குப் பின்னர், அண்ணாவின் முதல் நூலாகிய ஜய ஜய சங்கர படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த முதல் நூலிலேயே அண்ணாவின் தனித்துவம் மிக்க எழுத்து நடை மிளிர்வதைக் காண முடிந்தது.

அண்ணாவின் தாயார், தனது பிள்ளைக்கு சதாசிவம்-எம்எஸ் தம்பதியினரிடம் வேலை கிடைக்க வேண்டும் என்று மனதுக்குள் பெரியவாளிடம் பிரார்த்தனை செய்தாராம். கூடிய விரைவிலேயே பெரியவா அனுக்கிரகத்தில் அண்ணாவுக்குக் கல்கி பத்திரிகையில் ஜய ஜய சங்கர தொடர் எழுதும் பணி கிடைத்தது. (பிற்பாடு அங்கேயே உதவி ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.) அண்ணாவோ எழுத்துப் பணிகளுக்கு ரொம்பப் புதுசு.

அவரது படிப்பும் தமிழ்ப் படிப்பு அல்ல. அவர் ஆங்கில இலக்கியத்தில் பிஏ ஹானர்ஸ் படித்தவர். வயதும் குறைவு. இப்படிப்பட்ட ஒருவரை கல்கி அதிபர் சதாசிவம் அந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்ததே அதிசயம் தான். அதுமட்டுமல்ல, எடுத்த எடுப்பிலேயே அண்ணாவுக்குக் கல்கி அலுவலகத்தில் ஒரு பிரத்தியேக அறையும் ஒதுக்கித் தந்தாராம்.

Ra Ganapathy1 - 1

தனது தாயாரின் மானசிக பிரார்த்தனையையும், பெரியவா அனுக்கிரகத்தில் அந்த வேண்டுகோள் பூர்த்தி ஆனதையும் பற்றி அண்ணா ஜய ஜய சங்கர நூலின் முகவுரையில் எழுதியுள்ளார். அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்ட அறையும் இருக்கையும் எழுத்துலக ஜாம்பவான் கல்கிக்கு உரியவை என்று அண்ணா அதில் எழுதி இருந்ததாக ஞாபகம். (சுமார் 23 வருடங்களுக்கு முன்பு படித்தது.)

இன்றைய பதிவில் ஜய ஜய சங்கர பற்றி எழுதலாம் என்று தோன்றியது. எனவே, கல்கி அறை, இருக்கை விஷயம் சரிதானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஜய ஜய சங்கர நூலை எடுத்துப் பார்த்தேன்.

‘‘அது கல்கியவர்களே ஒரு காலத்தில் பணியாற்றிய அறை; நாற்காலி கூட அன்றளவும் மாறவில்லை என்று பிற்பாடு அறிந்த போது அச் சிங்காசனமே எலிக்குட்டி ஆஸனமானதில் பெருமிதம் அடைந்தேன்’’ என்று இந்த விஷயத்தைப் பற்றி அண்ணா அந்த நூலின் முகவுரையில் எழுதி இருக்கிறார்.

இந்தப் பகுதியை மீண்டும் படிக்கும் போது இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. அவரது பிற்கால நூல்களில் இருப்பதைப் போன்றே தனித்துவமான எழுத்து நடையில் ஜய ஜய சங்கர நூல் இருந்தது என்பது மட்டுமல்ல, அந்த நூலில் காணப்பட்ட சிந்தனை ஆழமும் அவரது பிற்கால நூல்களில் இருப்பதைப் போலவே அமைந்திருந்தது.

எழுத்து அனுபவமோ, ஆன்மிகப் பின்னணியோ, தமிழ்ப் பின்னணியோ இல்லாத, ஆங்கில இலக்கியம் படித்த இளைஞரின் முதல் நூல் அது என்பதை நம்புவது கொஞ்சம் சிரமம் தான். இந்த நூல் எழுதுவதற்கு மூன்று வருடங்கள் முன்பு வரை அண்ணாவுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

ஜய ஜய சங்கர நூலின் அட்டைப்படம் தொடர்பான ஒரு வினோதமான சம்பவமும் உண்டு. கல்கியில் அது தொடராக வெளிவந்து பிற்பாடு கலைமகள் பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது. கல்கியில் தொடராக வெளியான போதே பெரியவா வாராவாரம் தவறாமல் அதைப் படித்து வந்தார்.

புத்தகம் வெளிவரும் போது அதற்கு அவர் ஶ்ரீமுகம் வழங்கினார். ஆனால், ‘‘ஜய ஜய சங்கர’’ என்ற அந்த நூலுக்கு அளித்த ஶ்ரீமுகத்தில், அந்த நூலின் பெயரைப் பெரியவா, ‘‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’’ என்று தவறுதலாக (?) குறிப்பிட்டிருந்தார். ஶ்ரீமுகத்தில் நூலின் பெயர் தவறுதலாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று அண்ணா யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஓவியர் மணியம் வரைந்த அட்டைப்படம் வந்து சேர்கிறது. நூலின் முன் அட்டைக்கான படத்தில் ஜய ஜய சங்கர என்றும் பின் அட்டைக்கான படத்தில் ஹர ஹர சங்கர என்றும் அவர் எழுதி இருந்தார்.

ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர ஆகிய இரண்டும் எப்போதும் சேர்த்தே சொல்லப்படுபவை. எனவே, ஓவியரிடம் அட்டைப் படம் வரையச் சொல்லும் போது பின் அட்டையில் ஹர ஹர சங்கர என்று தலைப்பு போடுமாறு அண்ணா சொல்லி இருந்தார். ஆனால், அது அவருக்கே நினைவில்லை.

ஆக மொத்தம், பெரியவா ஶ்ரீமுகத்தில் இருந்த பெயரும் புத்தக அட்டையில் இருந்த பெயரும் ஒன்றாகவே இருந்தன.

அண்ணா என் உடைமைப் பொருள் (19): ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply