திருப்புகழ் கதைகள்: குருக்ஷேத்திரப் போர்

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி 351
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

வரி சேர்ந்திடு – திருவேங்கடம்
குருக்ஷேத்திரப் போர்

     இத்திருப்புகழில் அருணகிரியார்,

கரி வாம் பரி தேர் திரள் சேனையும்

     உடன் ஆமு துரியோதனன் ஆதிகள்

          களமாண்டிடவே, ஒரு பாரதம் …… அதில் ஏகிக்

கன பாண்டவர் தேர் தனிலே, எழு

     பரி தூண்டிய சாரதி ஆகிய

          கதிர் ஓங்கிய நேமியனாம் அரி,

என்ற வரிகளில் குருக்ஷேத்திரப் போரில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பார்த்தனுக்கு சாரதியாய் தேரோட்டினார் எனச் சொல்லும்போது குருக்ஷேத்திரப் போர் பற்றியும் சொல்கிறார். அதாவது கரி – யானைகளும், வாம் பரி – தாவுகின்ற குதிரைகளும், தேர் – தேர்களும், திரள் சேனையும் உடனாம் – திரண்ட சேனகளும் கொண்டவனாகிய, துரியோதனன் ஆதிகள் – துரியோதனன் முதலியவர்கள், களம் மாண்டிட – போர்க்களத்தில் இறந்து போமாறு, ஒரு பாரதம் அதில் – ஒரு பாரதப் போரில் ஈடுபட்டு, கன பாண்டவர் – பெருமை மிக்க அர்ச்சுனனுடைய, தேர் தனிலே – தேரில் பூட்டிய, எழு பரி தூண்டிய சாரதி ஆகிய – ஏழு குதிரைகளைத் தூண்டிச் செலுத்திய பாகனும், கதிர் ஓங்கிய நேமியனாம் அரி — ஒளி மிகுந்த சக்ராயுதத்தையுடைய அரியும், – எனப் பாடுகிறார்.

குருக்ஷேத்திர போர் விவரம்

     இதிகாசங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றிருக்கிறது, ‘மகாபாரதம்.’ இந்த காவியத்தில் வரும் குருக்ஷேத்திரப் போர், ஒரு முக்கியமான நிகழ்வாகும். குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றதால், இது இப்பெயர் பெற்றது. பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்தப் போர் குறித்த சில விவரங்களைப் பார்ப்போம்.

     கௌரவர்களுடனான சூதாட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்தனர். 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அஞ்ஞாத வாசம் முடிந்து வந்தால், நாட்டை திருப்பித் தருவதாக ஒப்பந்தம். ஆனால் வனவாசம் முடிந்து வந்தபின்னர், நாட்டைக் கொடுக்க கௌரவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இந்தப் போர் உருவானது.

போரின் விதிமுறைகள்

போர் தொடங்கும் முன்னர் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

  • கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது.
  • ஆண்மையற்றவனிடம் (அரவாணி) போரிடக்கூடாது.
  • போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது.
  • மேலும் காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது.
  • போரிடாத வீரனை தாக்கக் கூடாது.
  • கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமே போரிட வேண்டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.
  • போரில் சரணடைந்தவர்களைக் கொல்லாமல், போரில் வென்றவர்கள் காக்க வேண்டும்.
  • காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும், அது போல் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை வீரர்கள் தத்தமது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்.
  • மகாரதர்கள், மகாரதர்களுடனும், அதிரதர்கள், அதிரதர்களுடன் மட்டுமே போரிட வேண்டும்.
  • போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

இப்படி பல விதிமுறைகள் இருந்தாலும், சில நேரங்களில் அந்த விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டன. பதிநான்காம் நாள் போரிலிருந்து இரவிலும் போர் நடத்தப்பட்டது.

     பதினெட்டு நாள்கள் நடந்த மகாபாரதப் போர், மகாபாரதத்தில் நான்கு பகுதிகளில் சொல்லப்பட்டுள்ளது. இப்பகுதிகள் பர்வம் என அழைக்கப்பட்டன. அதில் கௌரவர்கள் சார்பில் தலைமையேற்ற நான்கு பேரை முன்னிலைப்படுத்தி நான்கு பருவங்கள் பிரிக்கப்பட்டன. அவை பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்லிய பர்வம் ஆகியன ஆகும். பீஷ்மர் முதல் 10 நாள்களும், துரோணர் 5 நாள்களும், கர்ணன் 2 நாள்களும், சல்லியன் ஒரு நாளும் தலைமையேற்றனர்.

     போரில் நால்வகை படைகள் பங்கேற்றன. இவை ரத, கஜ, துரக, பதாதிகள் என அழைக்கப்பட்டன. இவற்றில் ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவுக்கு ‘பட்டி’ என்று பெயர்.

3 பட்டிகள் – 1 சேனாமுகம்

3 சேனாமுகம் – 1 குல்மா

3 குல்மா – 1 கனம்

3 கனம் – 1 வாகினி 

3 வாகினி – 1 பிரிதனா

3 பிரிதனா – 1 சம்மு

3 சம்மு – 1 அனிகினி

10 அனிகினி – 1 அக்ரோணி

எனவே ஒரு அக்ரோணி என்பது 21,870 தேர்கள் – தேரோட்டிகள் 21,870 யானைகள்- யானை வீரர்கள் 65,610 குதிரைகள் – குதிரை வீரர்கள் 1,09,350 காலாட்படை வீரர்கள் கொண்டதாகும்.

     குருக்ஷேத்திரப் போரில் மொத்தம் 18 அக்ரோணி படைகள் போரிட்டன. இதில் கௌரவர்கள் சார்பில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர்கள் சார்பில் 7 அக்ரோணி படைகளும் பங்கேற்றன. மொத்தமாக 40 லட்சம் பேர் இந்தப் போரில் பங்கேற்றனர். கௌரவர்கள் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது, காயமடைந்த பீஷ்மர் ஆகியோரும், பாண்டவர்கள் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், கிருஷ்ணர், சாத்யகி, யுயுத்சு ஆகிய 8 பேரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply